முடங்கியுள்ள அட்டுளுகமவுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்...!

முடங்கியுள்ள அட்டுளுகமவுக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்...!

-எஸ்.என்.எம்.சுஹைல்-

அட்டுளுகம களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிராமமாகும். 2 கி.மி. தொலைவில் உள்ள பண்டாரகமயே அருகிலுள்ள நகரமாகும். 14 பள்ளிவாசல்களை உள்ளடக்கிய அட்டுளுகமயில் 3900 முஸலிம் குடும்பங்களும் 120 வரையிலான சிங்கள குடும்பங்களும் வசிக்கின்றனர்.

இக்கிராமத்தில் 75 வீதத்திற்கும் மேற்பட்டோர் கூலித் தொழிலை நம்பி தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில வர்த்தகர்களும் குறிப்பிட்டளவு அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யக் கூடியவர்களுமே அங்கு வசிக்கின்றனர்.

இக்கிராமத்திலுள்ள ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டது. அதற்கு முன்னதாக மார்ச் 17 ஆம் திகதி அட்டுளுகம, மாரவா எனும் கிராமத்திலுள்ள இரு இளைஞர்கள் வர்த்தக நோக்கில் டுபாய்க்கு சென்று 19 ஆம் திகதி நாடு திரும்பியிருக்கின்றனர்.

அவர்கள் வெளிநாடு சென்று வந்ததை அறிவிக்காத நிலையில்  ஒருவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த முஸ்லிம் கிராமம் கடந்த மார்ச் 27 ஆம் திகதி முதல்  முற்றாக முடக்கப்பட்டது.

அதன்படி முழு ஊரையும் ஒரு தனிமைப் படுத்தல் நிலையம் போன்று முடக்கி வைத்துள்ளதாகவும், 14 நாட்களுக்கு  அந்த ஊருக்குள் எவரும் செல்லவோ அங்கிருந்து எவரும் வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டாது என களுத்துறை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரங்கசிங்க மற்றும் களுத்துறை மாவட்ட செயலர் யூ.டி.சி. ஜயலால் ஆகியோர் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர், மிக நெருங்கிப் பழகிய 26 பேரை அவ்வூருக்குள்ளேயே பொது இடமொன்றில் மருத்துவ கண்கானிப்பின் கீழ் தனிமைபப்டுத்த சுகாதார துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கை எடுத்தனர்.

அட்டுலுகம  ஊரின் 6 கிராம சேவகர் பிரிவுகளுக்குள் உள்ளடங்கும் நபர்களே இவ்வாறு அவ்வூரின்  சர்வோதய அமைப்பின் கட்டிடம் ஒன்றில்  இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை அங்கு தடுத்து வைத்து கண்காணிப்பதற்கான வசதிகளை இரானுவத்தினர் அந்த கட்டிடத்தில் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

அதன்படி கடந்த 28 ஆம் திகதி  முதல் இந்த 20 பேரும் மருத்துவ கண்கானிப்புக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளதாக இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் இராணுவத்தின் கேர்ணல்  கமல் ஜயசூரிய தெரிவித்தார். கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானதாக கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ள நபர், டுபாய்க்கு குறித்த அட்டுலுகம - மாராவ கிராமத்துக்கு மிக அருகில் உள்ள கலிடெங்மண்டிய கிராமத்தில் உள்ள நண்பர் ஒருவருடன் கடந்த 17 ஆம் திகதி டுபாய் சென்றுள்ளார்.

டுபாயில் 2 நாட்கள்  தங்கியிருந்த பின்னர் கடந்த 19 ஆம் திகதி  நாட்டுக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்த இவர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இவர் தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி பண்டாரகம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் அன்றைய தினமே குறித்த நபரின் வீட்டுக்கு  சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸார் சென்றுள்ளனர்.  இதன்போது அந்நபரிடம் பொலிஸார்  விசாரித்த போது டுபாய் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை பொலிசாரும் சுகாதாரத் துறையினரும் அவ்வீட்டுக்குள்ளேயே சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மறு நாள் 25 ஆம் திகதி கொரோனா அறிகுறிகள் தெண்படவே அவர் களுத்துறை - நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவருக்கு கொரோனா இருப்பது 26 ஆம் திகதி மாலை உறுதியான நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த நபர் டுபாயிலிருந்து வந்த பின்னர் முழு ஊரிலும் சுற்றித் திருந்துள்ளதாகவும், பலரது வீடுகளுக்கும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே முழு ஊரையும் முடக்கியதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சஞ்சய இரசிங்க கூறினார். அந்த ஊருக்குள் உள் நுழையவோ வெளிச்செல்லவோ எவருக்கும் எக்காரணத்துக்காகவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி அந்த ஊருக்குள் நுழைய, வெளியேற முடியுமான அனைத்து  வழிகளையும் முடக்கியுள்ளதுடன் ஊரை சுற்றி 8 பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு ஊர் முழுதும் அவ்வப்போது ரோந்து பணிகளும் இடம்பெற்று வருகினறன. ஊரை சுற்றியும் இராணுவ பாதுகப்பு பலபப்டுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் அனைவரையும் அவரவர் வீடுகளில் தனிமைப்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த கிராமம் முஸ்லிம் கிராமம் என்ற நிலையில், அங்கு மக்கள் மிகவும் நெருக்கமாக பழகி ஒன்றாக கூடி வாழ்ந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த தொற்று பரவலுக்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு ஊரையே முடக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

டுபாய் சென்று திரும்பிய அவரது நண்பருக்கு இதுவரை கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டாத நிலையில், அவரும் அவரது வீட்டில் சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதேவேளை, குடும்பத்தில் நால்வருக்கு கொரானா தொற்று ஏற்பட்டதாக தெரியவருகிறது.

குறித்த இளைஞரின் கவனயீனமான செயற்பாடுகளினால் அட்டுளுகம கிராமமே முடக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அப்பாவிப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரில் பெரிய வர்த்தக நிலையங்களோ, வங்கிகளோ இல்லா நிலையில் அத்தியவசிய பொருட்கள் கொள்வனவிற்கு மக்கள் பெரும் சிறமங்களை எதிர்நோக்குவதாகவும், நாட்டின் நலனுக்காகவும் தமது சுகாதார பாதுகாப்பிற்காகவும் ஊர் முடக்கப்பட்டதை பெருமனதுடன் ஏற்றுப்கொள்வதாக அட்டுளுகம அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் பீர் முஹம்மது முஹம்மது நஜீப் தெரிவித்தார்.

அட்டுளுகம பகுதி முடக்கப்பட்டதையடுத்து இங்கு வாழும் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான எந்தவித நிவாரண உதவிகளும் அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், இராணுவத்தின் உதவியுடன் உத்ரவாத விலையில் அரசாங்கம் அவசியப் பொருட்களை வழங்குவதாக தெரிவித்த போதிலும் அவ்வாறான எந்த உதவிகளும் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் சாடினார்.

அட்டுளுகம பகுதியிலுள்ள 14 பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரும் ஜம்இய்யதுல் உலமா கிளையும் இணைந்து கிராமத்துக்கு தேவையான அத்தியவசியப் பொருள் கொள்வனவை மேற்கொண்டு வருகின்றது. அவற்றை சில்லரை வியாபாரிகள் மூலம் நியாயமான மற்றும் நிவாரண அடிப்படையில் விற்பனை செய்துவருவதான ஊரின் தேவையை குறைந்தளவில் பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பிரதேச செயலகமும் பொது சுகாதா தமரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அனைத்துப் பள்ளிவாசலகள் சம்மேளனத் தலைவர் நஜீப் குறிப்பிட்டார். அத்துடன், சமூர்த்தி உதவி பெரும் குடும்பத்தினருக்கு அவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும அக்கிராமத்திற்கு சென்றபோது, அவருக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டது. எனினும் பின்னர் அனுமதி கிடைத்த பின்னர் அவர் தனது சொந்த நிவாரண உதவிகளை செய்திருந்தார். இவரை தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் அந்த கிராமத்திற்கு செல்லவில்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெளி பகுதியிலுள்ள சில தனவந்தர்கள் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்திற்கு உதவியதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஊர் முடக்கப்பட்டுள்ளமையால் இப்பிரதேசத்திலுள்ள நேயாளிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நீரிழிவு நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்க்கொள்கின்றனர்.

ஊருக்குள் மருந்தகங்கள் இல்லாத நிலையில் வெளி பிரதேசங்களுக்கும் சென்று மருந்து தேவைகளை பெறமுடியாத நிலைமை தோன்றியிருக்கிறது. எனவே, அக்கிரமத்திற்கு தட்டுப்பாடின்றி மருந்து வகைகளை பெற்று தர வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க எதிர்ப்பார்த்திருக்கும் அட்டுளுகம மக்களின் அத்தியவசிய தேவைகளை உணர்ந்து அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனையே அக்கிராம மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர்.