சமூக ஊடங்களில் இடம்பெறும் தேர்தல் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துமாறு அழைப்பு
றிப்தி அலி
"பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் காரணமாகவே கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றேன்" என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் உமா சந்திர பிரகாஷ் தெரிவித்தார்.
இக்கட்சியின் தொலைபேசி சின்னத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், சுமார் 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
"இன்னும் சொற்ப வாக்குகளைப் பெற்றிருந்தால் இன்று நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பேன். அதற்கு காணப்பட்ட அனைந்து சந்தர்ப்பங்களும் பேஸ்புக்கின் மூலம் எனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரசாரங்களின் ஊடாக முறியடிக்கப்பட்டது" என அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த போலிப் பிரசாரங்கள் தொடர்பில் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் உமா கூறினார்.
"பேஸ்புக்கின் ஊடாக தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலிப் பிரசாரம் காரணமாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத நான், பாராளுமன்ற பிரசார காலப் பகுதியில் சுமார் மூன்று வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிரசாரப் பணிகளில் பங்கேற்காமல் முடக்கப்பட்டேன்" என அவர் தெரிவித்தார்.
இது போன்று, "சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட இனவாத வெறுப்புப் பிரசாரங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் காணப்பட்டு வந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது" என இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி. கலையரசன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்டு வந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவமே கடந்த பாராளுமன்ற தேர்தலில் இழக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமல்லாமல், சமூக ஊடகங்கள் மூலம் கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வெறுப்புப் பிரசாரம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே மனக் கசப்புக்கள் ஏற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.
இவை போன்ற தேர்தல் சட்டங்களை மீறக்கூடிய பல சம்பவங்கள் கடந்த கால தேர்தல்களின் போது சமூக ஊடகங்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் எட்டாயிரத்து எழு நூற்று 71 ஆசனங்களை தெரிவுசெய்வதற்காக சுமார் என்பத்து இரண்டாயிரம் பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது தேர்தல் பிரச்சார பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைகளுக்கான ஆதரவை மதிப்பிடுவதற்கான ஒரு வகையான வாக்கெடுப்பாக இத்தேர்தல்கள் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதே சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை இலங்கையில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த தேர்தலின் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவரும் பேஸ்புக், டுவிட்டர், யுடியூப் மற்றும் பிளிக்கர் ஆகியவற்றின் ஊடாக தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் சமூக ஊடகங்கள் மூலம் வேட்பாளர்கள் பிரசாரங்களை முன்னெடுத்தனர். எனினும், அது பாரியளவில் தாக்கம் செலுத்தவில்லை.
இவ்வாறான நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தின் திகன பிரதேசத்தில் இடம்பெற்ற சிங்கள - முஸ்லிம் கலவரம் மற்றும் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் ஆகிய சம்பவங்களின் போது சமூக ஊடகங்கள் பாரிய தாக்கம் செலுத்தின.
இதனால் குறிப்பிட்ட சில நாட்கள் இலங்கையில் சமூக ஊடங்கள் மூடக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, திகன கலவரம் பேஸ்புகின் ஊடாக திட்டமிடப்பட்டமைக்காக குறித்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு பகிரங்க மன்னிப்புக் கோரியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையில் 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சமூக ஊடகங்கள் அனைத்தும் பாரிய தாக்கம் செலுத்தின. குறிப்பாக பிரசாரம் மேற்கொள்ள முடியாத தேர்தல் தினத்திற்கு முன்னரான 48 மணி நேர காலப் பகுதியிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரங்கள் மற்றும் தேர்தல் விளம்பரங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிபாரிசு செய்தனர்.
இவ்வாறான நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவினால் ஊடக வழிகாட்டியொன்று வெளியிடப்பட்டது.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) உறுப்புரையின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவால் 2178/24ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக 2020.06.03ஆம் திகதி இந்த ஊடக வழிகாட்டி வெளியிடப்பட்டது.
இது பிரதானமாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை இலக்கு வைத்தே வெளியிடப்பட்டது. எனினும், தேர்தல் காலப் பகுதியின் போது, சமூக ஊடக இணையத்தளங்களின் உரிமையாளர்களும் அவற்றின் நிர்வாகிகளும், கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமையாளர்களும் இவ்வூடக வழிகாட்டி நெறிகளைப் பின்பற்றியொழுகுதல் அவர்களின் பொறுப்பாதல் வேண்டும் என இதன் 33ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்த வழிகாட்டியின் ஊடாக ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்த முடியாது. எனினும் ஊடக நிறுவனங்கள் இந்த வழிகாட்டிக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும்" என சட்டம் மற்றும் விசாரணைகளுக்கு பொறுப்பான மேலதிக தேர்தல் ஆணையாளர் பீ.பி.சி.குலரத்ன தெரிவித்தார்.
சில இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இதனை மீறிச் செயற்பட்ட போதிலும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரமுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊடக வழிகாட்டி மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இதுவரை விதிக்கப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.
இதனால், குறித்த ஊடக வழிகாட்டி நெறிகள் மீறப்படுவதை தேர்தல் குற்றமாக குறித்துரைக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கான அனுமதியினை சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதேவேளை, கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஹேஷ்டேக் ஜெனரேஷன் மற்றும் பெப்ரல் ஆகியவற்றுடன் இணைந்து சமூக ஊடகங்களை கண்காணிக்கும் பணியினை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது. இதன்போது சுமார் 5,000க்கு மேற்பட்ட தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற பதிவுகள் பேஸ்புகில் அவதானிக்க முடிந்துள்ளது.
இது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு பல மணி நேரங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
சமூக ஊடங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமொன்று நாட்டில் இல்லாமையினால், இப்பதிவுகளை வெளியிட்டோருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், இவ்வாறான பதிவுகளுக்கு எதிராக எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் பேஸ்புக், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, ஊடக அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் போன்ற பல தரப்பினருடன் தேர்தல் ஆணைக்குழு தொடர்ச்சியாக பேச்சு நடத்தி வருகின்றது.
இதேவேளை, "சமூக ஊடகங்களின் ஊடாக மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பொறிமுறை அவசியமாகும். எனினும் இந்தப் பொறிமுறை கருத்துச் சுதந்திரத்தினை பாதிக்காத வகையில் அமையப் பெற வேண்டும்" என பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
"கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது நாங்கள் மேற்கொண்ட சமூக ஊடக கண்காணிப்பு நடவடிக்கை எதிர்பார்த்த வகையில் இடம்பெறவில்லை. எனினும் 'குளிங்க் பீடியேர்ட்' என அழைக்கப்படும் தேர்தலுக்கு முன்னரான 48 மணித்தியால காலப் பகுதியில் சமூக ஊடக கண்காணிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது" எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், பேஸ்புக்கின் சமூக தரநிலைகளை மீறிய பதிவுகளை மாத்திரமே அந்நிறுவனம் நீக்கியது. இதனால், நாட்டுச் சட்டத்திற்கும் பேஸ்புக் நிறுவனம் கட்டுப்பாட்டு, அதில் பதிவிடப்படுகின்ற தேர்தல் விதிமுறைகளை மீறும் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க எதிர்காலத்தில் நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையினை ரோஹன ஹெட்டியாராச்சி முன்வைத்தார்.
இதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது ஒருபோதும் பேச்சு சுதந்திரத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தாது என சமூக ஊடக செயற்பாட்டாளரான கலாநிதி சஞ்சன கத்தொட்டுவ தெரிவித்தார்.
"சமூக ஊடகங்களின் ஊடாக தேர்தல் விதிமுறைகளை மீறுவது ஜனநாயக விரோத செயலாகும். இதனால் தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இதன் மூலம் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்காக வேண்டி சமூக ஊடகங்களை கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பட்டாளரான லசந்த டி சில்வா தெரிவித்தார்.
எனினும், இதனை ஒழுங்குபடுத்துவது யார் என்ற பாரிய கேள்வியொன்று காணப்படுகின்றது. இந்தப் பணியை ஒருபோதும் அரசாங்கத்திடம் மாத்திரம் கையளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இதனால் அரசாங்கம், தேர்தல் ஆணைக்குழு, பொலிஸ் திணைக்களம், சமூக ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகப் பாவனையாளர்கள், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பிலான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றினை உருவாக்க வேண்டும் என்ற சிபாரிசொன்றை சுதந்திர ஊடக இயக்கம் முன்வைத்துள்ளது.
இதேவேளை, நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு சமூக ஊடகங்களை ஒழுங்கபடுத்த வேண்டியுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழு தற்போது மேற்கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், நீதியான தேர்தலை முன்னெடுப்படுத்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பேஸ்புக் நிறுவனம் முன்னெடுத்துள்ளதாக அதன் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அது மாத்திரமல்லாது, இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பேஸ்புகில் பதிவேற்றப்படுகின்ற தீங்கு விளைவிக்கும் வகையிலான பதிவுகளை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"இணையத்தின் ஊடாக பொதுமக்கள் அரசியல் கலந்துரையாடலில் ஈடுபடுவதையும், அவர்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசுதையும் நாங்கள் விரும்புகிறோம். எனினும், பேஸ்புகின் சமூக தரநிலைகளை மீறுகின்ற அனைத்து பதிவுகளும் நீக்கப்படும்.
இது தொடர்பில் அறிப்பதற்காக சுயாதீன மூன்றாம் நிலை உண்மைச் சரிபார்ப்பாளர்களாக ஏ.எப்.பி மற்றும் பேக்ட் கிரஸண்டோ ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன" என பேஸ்புகின் பேச்சாளரொருவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக தமிழ், சிங்கள மொழியாற்றலுள்ள இலங்கையர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தவறான பதிவுகளை கண்காணிப்பது, தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்துவது, உண்மைச் சரிபார்ப்புத் திறனை விரிவுபடுத்துவது மற்றும் மக்கள் பார்க்கும் விளம்பரங்களின் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களை எதிர்த்து பேஸ்புக் போராடுவதாக பேச்சாளர் மேலும் கூறினார்.
உள்நாட்டிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரங்களை கட்டுப்படுத்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு மிகச் சிரமமாக உள்ள நிலையில் சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார பணிகளை கட்டுப்படுத்துவது என்பது பாரிய பணியாகும்.
எவ்வாறாயினும், தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சுக்கள், தேர்தல் பிரசாரம் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்துதற்கு தேவையான சட்டத்தினை அறிமுகப்படுத்தி அதனை வினைத்திறனாக அமுல்படுத்த வேண்டியது தேர்தல் ஆணைகுழுவின் பிரதான பொறுப்பாகும் என ஜனநாயகத்தினை ஊக்குவிப்பவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
ANFREL என அழைக்கப்படும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பின் தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான ஆசிய ஊடக நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)