உயர் பண்புகளுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட பன்முக ஆளுமை: முபாரக் ஹஸ்ரத்
உஸ்தாத் அஷ்ஷைக் எம்.எம்.ஏ முபாரக் ஹஸ்ரத் அவர்கள் மிகப்பெரிய ஒரு ஆளுமையாக திகழ்ந்து நேற்று (27) செவ்வாய்க்கிழமை வபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நேற்று இரவு அவர்களது ஜனாஸாவில் கலந்து கொண்ட பிறகு அவர்கள் பற்றி எனது உள்ளத்தில் தோன்றிய ஒரு சில விடயங்களை எழுதலாம் என கருதுகிறேன். 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏழு வருடங்கள் முபாரக் ஹஸ்ரத் அவர்களோடு இணைந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவில் செயலாற்றி வருகின்றேன்.
இந்த நாட்களில் அவர் ஒரு தந்தையை போல மிகவும் அன்பாக, உயர்ந்த பண்பாடுகளை வெளிப்படுத்திய வண்ணம் என்னோடும் சக ஊழியர்களோடும் சந்தோஷமாக இணைந்து பணியாற்றி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதற்கு மிக முக்கிய காரணகர்த்தாவாக காணப்பட்டார்.
அவரோடு சேர்ந்து பணியாற்றிய அந்த பொழுதுகளை நினைக்கும்போது அதன் நினைவுகள் மனதுக்கு கனதியை ஏற்படுத்துகின்றன. தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி, அதனை நல்ல முறையில் திருத்தித் தரக் கூடியவராகவும் மக்களை மதித்து நடக்க கூடியவராகவும் முபாரக் ஹஸ்ரத் அவர்கள் காணப்பட்டார்கள்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது அவரது தனிச் சிறப்பம்சமாக காணப்பட்டது. அவரது உயர்ந்த பண்புகள் அவரின் பால் மக்களை கவர்ந்தழுத்தன என்றால் அது மிகையாகாது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்புகளை தொடராக வழங்கிய அவர், ஜம்இய்யாவின் தலைவராகவும் (1995 - 2003) உப தலைவராகவும் (2003 - 2010) பொதுச் செயலாளராகவும் (2010 - வபாத் ஆகும் வரை) செயலாற்றினார்.
எவ்வித ஊதியமும் இல்லாமல் இவ்வளவு காலம் செயலாற்றிய அவர்கள், ஆரம்ப காலங்களில் தனது சொந்த செலவில் ஜம்இய்யாவின் பல விடயங்களை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாறான ஒரு சில சம்பவங்களை படிப்பினைக்காக என்னுடன் பகிர்ந்துள்ளார்.
ஒரு முறை (1980களில்) ஜம்இய்யாவின் முக்கிய வழக்கொன்றுக்கு சென்றுவிட்டு வழக்கறிஞருக்கு செலுத்த ஜம்இய்யாவில் பணம் இல்லாத போது தனது மனைவியின் வைத்திய செலவுக்காக வைத்திருந்த பணத்தை வழங்கியுள்ளார். இவ்வசனங்களை எழுதும்போது மனம் நெகிழ்வடைகின்றது.
முபாரக் ஹஸ்ரத் மற்றும் ரியால் ஹஸ்ரத் போன்ற ஆளுமைகள் விதையாக தங்களை அர்ப்பணித்ததன் விளைவே விருட்சமாக இருக்கும் இன்றைய ஜம்இய்யா என்பதை அதன் வரலாறு பறைசாற்றுகின்றது. முபாரக் ஹஸ்ரத் அவர்களின் சேவைகள் பரந்தளவில் காணப்பட்டன.
ஜாமிஆ நளீமிய்யாவில் விரிவுரையாளராகவும், கபூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும் பல வருடங்கள் செயலாற்றியுள்ள அதேநேரம் பல நூல்களையும், தொடர் வானொலி நிகழ்ச்சிகளையும் வழங்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்துள்ளார்.
அவர்கள் இறுதியாக எழுதிய "செரந்தீப் கண்ட சான்றோர்கள்" எனும் நூல் மிக விரைவில் ஜம்இய்யாவினால் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். முபாரக் ஹஸ்ரத், டாக்டர் சுக்ரி, அபுல் ஹசன் ஹஸ்ரத் போன்ற மிக முக்கிய ஆளுமைகள் முஸ்லிம் சமூகத்தை விட்டு தொடர்ந்து பிரிந்து செல்வது அடுத்த தலைமுறை திட்டமிட்டு உருவாக்கப்பட வேண்டும் என்ற செய்தியை எமக்கு உரத்துச் சொல்கின்றது.
முபாரக் ஹஸ்ரத் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் அதேநேரம் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என்று பிரார்த்திக்கின்றேன்.
பர்ஹான் பாரிஸ்
28.10.2020
Comments (0)
Facebook Comments (0)