ஜவுளிக் கடைகளும் COVID -19 தடுப்பு நடவடிக்கையும்
உலகையே ஆட்டம் காட்டி அமைதியாக்கி வைத்துள்ள COVID -19 நோயானது எமது நாட்டையும் விட்டுவைக்கவில்லை. 700 பேருக்கு மேற்பட்டவர்களைத் தாக்கியுள்ள இந்நோயினால் இதுவரை 7 பேர் மரணித்துள்ளனர்.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளும், வல்லரசுகளும் கதிகலங்கிப்போயுள்ள நிலையில், எமது நாட்டின் ஜனாதிபதியின் தலைமையில் சுகாதாரத் துறையினர், போலீசார் மற்றும் முப்படையினரின் பங்களிப்புடன் இந்நோயானது மக்கள் மத்தியில் பரவிவிடாமல் இருப்பதற்காக அதீத பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்.
சில மாவட்டங்கள் ஊரடங்குச் சட்டத்தினால் ஒரு மாதத்திற்கு மேலாக முடக்கப்பட்டுள்ளது. பல அரச நிறுவனங்கள் செயற்படவில்லை அல்லது குறைந்த ஆளணியினருடன் செயற்படுகின்றது.
கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்றாலும், இவை மக்களைப் பாதுகாப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ், சிங்கள மக்கள் சித்திரைப் புது வருடத்தைக் கொண்டாடவில்லை. வெசாக் நிகழ்வுகளை தனித்தனியே வீடுகளில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் எமது புனித றமழான் மாதமும் ஆரம்பித்துள்ளது.
இது ஒரு நிர்க்கதியான காலமாகும். நாமும் சிரமங்களுக்கு மத்தியிலேயே நோன்பு நோற்கவேண்டியுள்ளது. பலருக்கு சரியான முறையில் உணவு கிடைக்கிறதா என்பதும் சந்தேகமே.
நோன்பு மாதம் முடிவுறுகின்ற போது நாம் நோன்புப் பெருநாளை புத்தாடை உடுத்தி மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழமையாகும். எனினும் இம்முறை அவ்வாறு நாம் நடந்துகொள்ள முடியுமா என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளனர்.
அது சமூக நல்லிணக்கத்திற்கு அவசியமாகலாம். அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் உண்ணுதலாகாது என்றிருக்க, சக சமூகத்தினர் தமது முக்கிய நிகழ்நிகழ்வுகளைத் தவிர்த்திருக்கையில், நாமும் அதற்கேற்றாற்போல இந்நோயைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் நடந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
அடுத்து வரும் ஓரிரு வாரங்கள் எமது சமூகத்தைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமாகப் போகின்றது. மக்கள் ஜவுளிக்கடைகளில் முண்டியடிக்கப்போகிறார்கள்.
அதுவே சில வக்கிரமான ஊடகங்களுக்கு தீனி போடுவதாகவும் அமையலாம். துரதிஷ்டவசமாக, எம்மத்தியில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அத்தகைய ஊடகங்களுக்கு அதிஷ்டமாகிவிடும்.
எனவே, ஜவுளிக்கடை உரிமையாளர்கள் தமது வியாபாரத்தில் ஈடுபடும் அதேவேளை, COVID-19 நோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
1) கழுவிக்கொண்டு செல்வது ஜவுளிக்கடைகளைப் பொறுத்தவரையில் சாதகமாக இருக்காது.எனவே, கைகளைச் சுத்தம் செய்யக்கூடிய தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக தத்தமது கடைகளின் முன்னால் ஒருவர் தயாராக இருக்க வேண்டும்.
2) பௌதீக (சமூக) இடைவெளியைப் பேணும் விதமாக ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை மாத்திரமே உள்ளே எடுக்க வேண்டும்.
3) கடைகளில் வேலை செய்பவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
4) 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.
5) குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதனைத் தவிர்த்து மின் விசிறிகளைப் பயன்படுத்துவதே ஏற்புடையதாகும்.
6) காய்ச்சல், தடிமன், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வேலைக்கு சமுகம் தரக்கூடாது.
7) காத்திருப்பவர்களை பௌதீக (சமூக) இடைவெளியைப் பேணும் விதமாக வைத்திருப்பது ஜவுளிக்கடை உரிமையாளர்களின் பொறுப்பாகும்.
வியாபாரமே தமது இலக்கு என்று நடந்துகொள்ளாமல், சமூகப் பொறுப்புடன் COVID-19 நோயை பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதானது, எமது சமூகத்திற்கு தேவையற்ற பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதனையும் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன், எமது சமூகமும் நாட்டின் இன்றைய நிலவரத்தை உணர்ந்தவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
வைத்தியர் நாகூர் ஆரிப்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை
Comments (0)
Facebook Comments (0)