கொரோனாவுக்கு தீர்வு தர தயாராகும் சுதேச மருத்துவம்
இன்று கொண்டாப்படும் உலக ஆயுர்வேத தினத்தினையொட்டி இந்த கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது
றிப்தி அலி
உலகளாவிய ரீதியில் இன்று பேசுபொருளாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்படுகின்ற கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி நாட்டில் ஏற்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரையான காலப் பகுதியில் சுமார் 10,000க்கு மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த வைரஸ் பரவலினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.
எனினும், குறித்த வைரஸிற்கு எதிராக எந்தவித மருந்தும் உலகளாவிய ரீதியில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில், இந்த வைரஸ் பரவலினை சுதேச மருத்துவத்தின் ஊடாகவும் கட்டுப்படுத்த முடியும் என சுதேச மருத்துவ துறையுடன் தொடர்புடைய வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 500 வருடங்கள் பழமையான இந்த மருத்துவம், நவீன விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படாவிடினும், அனுப ரீதியில் சிறந்த விளைவுகளை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுதேச வைத்திய துறையின் பங்களிப்பினை அரசாங்கம் பெற்றுக்கொண்டது.
இதனால், சுதேச மருத்துவம், கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஒன்பது மாகாணங்களிலுமுள்ள ஆயுர்வேத திணைக்களங்கள் ஆகியன இணைந்து பல்வேறு செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன.
இதற்கமைய 'சுவதாரனி' எனும் நோய் எதிர்ப்பு பானமொனறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் சதுர குமாரதுங்க தெரிவித்தார். "இந்த பானத்தின் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தியினை உடம்பில் அதிகரிப்பதன் மூலம் வைரஸிற்கு எதிராக தாக்கம் புரிவதற்கான வலுவை வழங்கலாம்" என அவர் குறிப்பிட்டார்.
ஆயுர்வேத பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை அடிப்படையாகக் கொண்டே இந்த பானம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த பானத்தினை பயன்படுத்தக் கூடிய வகையில் மருந்தகங்கள் மற்றும் ஆயுர்வேத மருந்து விற்பனை நிலையங்கள் ஆகியவற்றுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸினால் பரப்பப்படும் கொவிட் - 19 நோய் தொடர்பில் ஆயுர்வேத வைத்தியர்களினால் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "இதன் ஊடாக ஆயுர்வேத பாடப் புத்தகத்திலுள்ள மருந்துகளை பயன்படுத்தி புதிய வகையான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்" என ஆணையாளர் சதுர குமாரதுங்க தெரிவித்தார்.
சுதேச வைத்திய துறையினை அபிருத்தி செய்வதற்கு தேவையான பல்வேறு செயற்திட்டங்களை சுதேச மருத்துவம், கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சரான சிசிர ஜயகொடி முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, உள்நாட்டிலேயே புதிய மருந்துகளை தயாரிக்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மூலிகை தோட்டங்களை உருவாக்க ஆயுர்வேத திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
"இதன் மூலம் சுதேச வைத்திய துறையுடன் தொடர்புடைய மருந்துகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை தவிர்க்க முடிவதுடன், வருடாந்தம் 1,000 மில்லியன் ரூபாவினை சேமிக்க முடியும்" என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கொவிட் - 19 ஒழிப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து செயற்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு ஒன்பது மாகாண ஆயுர்வேத திணைக்களங்களிற்கும் ஆயுர்வேத திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, "கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் 5.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" மாகாண ஆணையாளர் வைத்தியர் (திருமதி) ஆர். ஸ்ரீதர் கூறினார்.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழுள்ள அக்கரைப்பற்று யூனானி மருத்துவ உற்பத்தி நிலையத்தில் சபுபே ஜோசந்த், திருகோணமலையிலுள்ள சித்த மருத்துவ உற்பத்தி நிலையத்தில் கபச் சுரக் குடிநீரும் தயாரிக்கப்படுகின்றன.
இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பானங்களாகும். "பாலமுனை வைத்தியசாலை, காத்தான்குடி வைத்தியசாலை, கரடியணாறு வைத்தியசாலை, ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மற்றும் கந்தக்காடு புணர்வாழ் நிலையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த கொவிட் -19 நோயாளிகளுக்கு இந்த பானங்கள் வழங்கப்பட்டதாக" கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் தெரிவித்தார்.
"கொத்தமல்லி, சுக்கு, மிளகு, கருஞ்சீரகம், நிலவேம்பு, மர மஞ்சள், ஆடா தோடை, அதி மதுரம், திப்பிலி போன்ற பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டே இந்த பானங்கள் தயாரிப்படுவதாக" கல்முனை பிராந்தியத்திற்கான ஆயுர்வேத இணைப்பாளர் வைத்தியர் அலியார் நபீல் தெரிவித்தார்.
இதிலுள்ள பெரும்பாலான மூலிகைகளை மக்கள் அன்றாடம் தங்களின் உணவுகளில் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். "அக்கரைப்பற்று யூனானி மருத்துவ உற்பத்தி நிலையத்தில் இதுவரை 30 கிராம் நிறையுடைய 50,000 'சபுபே ஜோசந்த்' பக்கெட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறினார்.
சுமார் 200 ரூபா பெறுமதியான இந்த பக்கெட்டுக்கள் - பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், அரச உத்தியோகத்தர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்தோர் என பல்வேறு தரப்பினருக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியர் நபீல் தெரிவித்தார்.
இதேவேளை, "நாடு இருக்கின்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களை பாதுகாப்பதற்காக ஆயுர்வேத வைத்தியர்களினால் தயாரிக்கப்பட்ட இந்த நோய் எதிர்ப்பு பானங்கள் பாரியளவில் வெற்றியளித்துள்ளதுடன் அரசாங்கத்தின் பாராட்டினையும் பெற்றுள்ளோம்" என ஆயுர்வேத ஆணையாளர் சதுர குமாரதுங்க கூறினார்.
பழமைவாய்ந்த இந்த சுதேச மருத்துவ துறையின் மருந்துகளினால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிப்பட்டு வருகின்றது.
எனினும், இந்த மருந்துகள் இதுவரை நவீன ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமையினாலும், இலகுவில் உட்கொள்ளக்கூடிய மாத்திரைகளாக வடிமைக்கப்படாமையினாலும் இன்னும் இலங்கை வாழ் மக்களின் அபிமானத்தைப் பெறவில்லை.
இதனால் குறித்த மருந்துகள் மக்களை கவர்வதற்கும், தேவையுடையோருக்கு இலகுவில் கிடைக்கக்கூடிய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது ஆயுர்வேத வைத்திய துறையின் கடமையாகும்.
Comments (0)
Facebook Comments (0)