இலங்கையில் முதலீடு செய்யுமாறு சவூதிக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு சவூதிக்கு அழைப்பு

இலங்கையில்  சுற்றுலா, தொழில்நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட பன்முகத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு சவூதி அரேபியாவுக்கு வெளிவிவகார அமைச்சர் அழைப்புவிடுத்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜித ஹேரத், தனது முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வாக சவூதி அரேபியாவின் 94ஆவது தேசிய தின நிகழ்வில் பங்கேற்றார்.

இந்த நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய  போது, சவூதி அரேபியா தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கி வருகின்றன உதவிகளை பாராட்டினார். அத்துடன் சுமார் 200,000க்கு மேற்பட்ட இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் தொழில் புரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா உட்பட 35 நாடுகளுகளின் பிரஜைகள் விசா இன்றி எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் இலங்கைக்கு விஜயம் செய்ய முடியும். இதற்கமைய சவூதி அரேபிய பிரஜைகளை இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள சுற்றுல்லா, கலாசார முக்கியத்துவங்களை பார்வையிட வருமாறு புதிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

சவூதி அரேபியாவின் மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் காவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் மற்றும் அந்நாட்டின் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் ஆகிய இருவரும் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற  உதவிகளும் அவர் இதன்போது நன்றி வெளியிட்டார்.

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் சார்பாகவே அவர் இந்த நன்றியினை அவர் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட பல சர்வதேச மாநாடுகளில் சவூதி அரேபியா இலங்கைக்கு தொடர்ச்சியா வழங்கி வருகின்ற உதவிகளையும் இந்த நிகழ்வில் புதிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும், சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கிடையிலான மிக உன்னதமான இருதரப்பு உறவுகளை சிலாகித்துப் பேசியதோடு, இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்க்காக சவூதி அரேபியா  இலங்கைக்கு வழங்கி வரும்  உதவிகளுக்கு நன்றி வெளியிட்டார்.

இந்நிகழ்வில் சவூதி தூதுவர் அல் கஹ்தானி உரையாற்றும் போது அனைத்து விருந்தினர்களையும் வரவேற்றதோடு, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களுக்கும் சவூதி அரேபிய குடிமக்களுக்கும் தனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவின் ஒருமைப்பட்டிக்காகவும் அதனைக் கட்டியெழுப்புவதற்காகவும் அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துல் அசீஸ் பின் அப்துல் ரஹ்மான் ஆல் ஸுஊத் அவர்கள் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த மன்னர்கள் எடுத்துக்கொண்ட வீரமிகு நிலைப்பாடுகளையும், முயற்சிகளையும் நினைவுகூர்ந்தார்.

அவ்வாறே, மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் மற்றும் 'விஷன் 2030' என்ற திட்டத்தை முன்னெடுத்த பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான  முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரின் தலைமையில் சவூதி அரேபியா அனைத்துத்துறைகளிலும் சவூதி அரேபியா அடைந்த வெற்றிகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து விவரித்தார்.

மேலும், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த சவூதி அரேபியாவின் பங்களிப்புகள், மற்றும் அது அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், விளையாட்டு, சுற்றுலா ஆகிய துறைகளில் நடாத்தி முடித்த உச்சிமாநாடுகள், மாநாடுகள், 'எக்ஸ்போ 2030' கண்காட்சியை தலைநகர் ரியாதில் ஏற்பாடு செய்வதற்க்கான உரிமத்தைப் பெற்றமை போன்றவற்றைச் சுட்டிக்காட்டினார்.

உலகம் முழுவதும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அவலங்களைக் குறைப்பதற்காக சவூதி அரேபியா, 171க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 131 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவு உதவிகளை வழங்கியுள்ளதாகவும், உலகளவில் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்கள் வழங்குவதில் முதலிடத்தில் உள்ள நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக துறைகளில் காணப்படும் இருதரப்பு நாற்புறவுகள் உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், சவூதி அரேபியாவின் நிதியுதவியால் இலங்கையில் செயல்படுத்தப்பட்ட 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான திட்டங்கள் பற்றியும்  நினைவூட்டினார்.  2023ஆம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது என்றும், இரு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவை இந்த ஆண்டு (2024) குறிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், இலங்கையின் புதிய ஜனாதிபதி அனூர குமார திஸ்ஸாநாயக்க அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நட்பு நாடான இலங்கைக்கு மேலும் முன்னேற்றமும் வளமும் ஏற்பட வேண்டும் எனவும் வாழ்த்தினார்.