எம்.பி ஆசனமொன்றை இழந்தது யாழ். மாவட்டம்

எம்.பி ஆசனமொன்றை இழந்தது யாழ். மாவட்டம்

புதிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ். மாவட்டம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தினை இழந்துள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்தினை பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என அவர் மேலும் கூறினார்.

வருடாந்த வாக்காளர் பதவின் பிரகாரம் மாவட்டங்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்படுவது வழமையாகும். இதன் அடிப்படையில் 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மாவட்டங்களுக்கான பாராளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 18ஆசனங்களாக காணப்பட்ட கம்பஹா மாவட்டம் 19ஆசனங்களாக அதிகரிப்பட்டுள்ள நிலையில், ஏழு ஆசனங்களாக காணப்பட்ட யாழ்ப்பாண மாவட்டம் ஆறு ஆசனங்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 172,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் காணப்பட்ட ஒன்பது ஆசனங்கள், 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஆறு ஆசனங்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், 2016ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் பிரகாரம் யாழ். மாவட்ட பாராளுமன்ற ஆசனம் ஆறிலிருந்து ஏழாக அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே யாழ்ப்பண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.