கோப் குழுவின் சிபாரிசினை அமுல்படுத்தாத TVEC

கோப் குழுவின் சிபாரிசினை அமுல்படுத்தாத TVEC

றிப்தி அலி

கோப் குழு என்று அழைக்கப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் சிபாரிசுகளை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அமுல்படுத்தப்படாத விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாகத் தெரியவந்துள்ளது.

NVQ சான்றிதழ் கற்கைநெறிகளை நடத்துவதற்காக அனுமதி வழங்கப்பட்ட 81 பயிற்சி நிறுவனங்களின் தரம் குறைவடைந்துள்ளமை தொடர்பான தகவல் மூன்றாம் நிலைக்கல்வி தொடர்பான கோப் உப குழுவில் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளது.

குறித்த பயிற்சி நிறுவனங்களினால் NVQ சான்றிதழ் கற்கைநெறிகளை நடத்துவதற்கான அனுமதி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் கோப் உப குழுக் கூட்டத்தில்; தெரிவிக்கப்பட்டது.

அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ள பயிற்சி நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் பத்திரிகைகளில் விளம்பரங்களை பிரசுரிப்பதற்கு பொருத்தமான பொறிமுறையினை உருவாக்குமாறு கோப் உப குழு இதன்போது சிபாரிசு செய்தது.

அத்துடன் இந்த பயிற்சி நிறுவனங்களை தடை செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறும் கொழும்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினர் மதுர விக்ரமநாயக்க தலைமையிலான கோப் உப குழு உத்தரவிட்டிருந்தது.

"எனினும், குறித்த சிபாரிசுகளை மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு இதுவரை அமுல்படுத்தவில்லை" என தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ. லலிததீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 1990ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அனுமதியினை இரத்துச் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி நிறுவனங்களின் அனுமதியினை இரத்துச் செய்வது தொடர்பான கோரிக்கை எதுவும் பணிப்பாளர் நாயகத்தினால் ஆணைக்குழுவிற்கு இதுவரை வழங்கப்படவில்லை என ஆணைக்குழுவின் ஆளுநர் சபைக்கு சபைச் செயலாளர் அறிவித்துள்ளதாகவும் தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, NVQ சான்றிதழ் கற்கைநெறிகளை நடத்துவதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 70க்கு மேற்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தாத நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் நிலையியற் கட்டளைகளை திருத்துவதன் தேவையையும் குழுவின் உறுப்பினர்களினால் அண்மையில் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கோப் குழு முன்னிலையில் 363 நிறுவனங்களை அழைக்க முடியும் என்றாலும், 102 நிறுவனங்கள் இதுவரை குழுவின் முன் அழைக்கப்படவில்லை என குழுவின் புதிய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.