கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா?
– ஆகிப் –
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், காத்தான்குடியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நோன்பு துறக்கும் (இஃப்தார்) நிகழ்வின் செலவுகளுக்காக, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களிடம் 675000 ரூபா பயணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில் தொண்டமான், எதிர்வரும் 22ஆம் திகதி காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் – நோன்பு துறக்கும் நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலகம் அழைப்பிதழொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த இஃப்தார் நிகழ்வின் செலவுகளுக்காக காத்தான்குடியிலுள்ள 06 பிரதான ஜும்ஆ பள்ளிவாசல்களிடம் 675,000 ரூபாவை வழங்குமாறு – காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் நடத்துகின்ற இஃப்தார் நிகழ்வு என்றால், அதற்குரிய செலவுகளை அவர் அல்லது ஆளுநரின் கீழுள்ள அரச நிறுவனங்கள் பொறுப்பேற்ற வேண்டும்.
அதை விடுத்து, முஸ்லிம்களின் நோன்பு துறக்கும் நிகழ்வை – ஆளுநர் நடத்துவதாக வெளி உலகுக்குப் படம் காட்டிக் கொண்டு, அதற்கான செலவுகளை முஸ்லிம் பள்ளிவாசல்களிடமே அறவிடுவதானது கேவலமான செயற்பாடு என – இது தொடர்பில் விமர்சிக்கப்படுகிறது.
மேலும், ஆளுநர் செந்தில் தொண்டமானுடைய இந்த செயற்பாடு – ‘ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு’ (மற்றவரின் பணத்தை செலவிட்டு, தனது தாயின் பெயரில் அன்னதானம் கொடுப்பது என்று அர்த்தம்) ஒப்பானது எனவும் கூறப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆளுநர் கடந்த காலங்களில் பொங்கல் விழா, புது வருட விழா மற்றும் ஜல்லிக்கட்டு விழா போன்றவற்றை நடத்திய போது, அவற்றுக்கான செலவுகளை அரச நிறுவனங்களின் நிதியிலிருந்தே பெற்றுக் கொண்டார் என்றும், ஆனால் ஆளுநர் நடத்தும் முஸ்லிம்களின் இஃப்தார் நிகழ்வுக்கான செலவுகளை, முஸ்லிம் பள்ளிவாசல்களிடமே அறவிடுவதென்பது மோசமான செயல் எனவும் இதுபற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சிவராத்திரி நிகழ்வு தொடங்கி கிறிஸ்மஸ் பண்டிகை வரை, அரச பணத்தில் விழாக் கொண்டாடிய ஆளுநர் செந்தில் தொண்டமான், நோன்பு துறக்கும் நிகழ்வுக்கு மட்டும் – ஏன் அரச பணத்தினை செலவிட முன்வரவில்லை எனவும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
மறுபுறம், இவ்வளவு காலமும் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல்களை இணைத்து – இப்படியான இப்தார் நிகழ்வுகளை மேற்கொள்ளாது கள்ளமெளனம் காத்து வந்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம், ஆளுநருக்காக பணம் வசூலிப்பது என்ன வகையான நியாயம் என்றும் பொதுவெளியில் கேள்விகள் எழுந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டிய முக்கிய பதவிகளை வழங்காமல் இனவாதத்துடன் செயற்படும் ஆளுநர் செந்தில் தொண்டமான், தன்னை முஸ்லிம்களின் அபிமானி எனக் காண்பிப்பதற்காக நடத்தும் இஃப்தார் நிகழ்வைக்கூட, முஸ்லிம்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தைக் கொண்டே நடத்துவதென்பது இனவாதத்தின் இன்னொரு முகம் எனவும் விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பு: இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறுவதற்காக, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் என்பவரை பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளளனத்தின் – பணம் வசூலிக்கும் கடிதம்
ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள இஃப்தார் அழைப்பிதழ்
நன்றி: புதிது
Comments (0)
Facebook Comments (0)