தடுப்பூசியே இறுதி ஆயுதம்
தொற்றிலிருந்து மீள்வதற்கு தடுப்பூசி ஏற்றல் மிகவும் தீர்மானம் மிக்கதொரு காரணி எனத் தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சமூக வைத்திய விஞ்ஞான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க, தொற்றிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புக் கிடைக்குமானால்இ நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர் நிலையில் வைத்திருக்க முடியும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
தடுப்பூசியே தொற்றைத் தடுப்பதற்கான இறுதி ஆயுதம் என தெரிவித்த அவர், தொற்று நோய்க்கு தடுப்பூசி செலுத்தும் முறை இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டல்ல. மாறாக 1853ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய பாராளுமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தத் தடுப்பூசி செயலற்றது என்றும் இதில் விஷம் கலந்த மருந்துப்பொருள்கள் அடங்கியிருக்கலாம் என்றும் இது மேற்கத்தேயவர்களின் செயற்பாடு என்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் சில தகவல்களை பரப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
தற்போது 60 மற்றும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதுடன், இவர்களின் இறப்பு வீதமும் குறைவடைந்துள்ளது என்றார்.
மேலும், இலங்கையின் சனத்தொகையில் 20 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 2.5 - 3 மில்லியன் பேர் வரை உள்ளனர். இவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 3 வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 4 இலட்சம் பேர் இதுவரை தடுப்பூசிகைளைப் பெற்றுள்ளனர் என்றார்.
மேலும் இந்த வயதுப் பிரிவினரிடையே வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக செல்வதற்கு உள்ள 20,000 பேர் வரை தடுப்பூசி செலுத்தியுள்ளதுடன், வெளிநாடுகளில் கற்றல் நடவடிக்கைகளுக்கு செல்லவுள்ள 17,000 மாணவர்களும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்றார்.
Comments (0)
Facebook Comments (0)