மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சவால்கள்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலுள்ள சவால்கள்

7 கல்வி ஆண்டுகளுக்கு 619 மாற்றுத்திறனாளிகள் பல்கலை நுழைவு

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆணைக்குழு

நாட்டின் சனத்தொகையில் 8.7% (கிட்டத்தட்ட 17 இலட்சம்) மாற்றுத் திறனாளிகள்

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள்

றிப்தி அலி

பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்காக கடந்த ஏழு கல்வி ஆண்டுகளில் 619 மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2015/2016ஆம் கல்வி ஆண்டு முதல் 2021/2022ஆம் கல்வி ஆண்டு வரையான காலப் பகுதியிலேயே மேற்படி எண்ணிக்கையிலான மாற்றுத்திறனாளிகள் பல்கலைக்கழங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலை, வர்த்தகம், பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் விஞ்ஞானம் ஆகிய கற்கைகளுக்காக மாத்திரமே மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படுவதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

"கொழும்பு, ஸ்ரீ ஜயவர்த்தனபுர, களனி, பேராதனை, யாழ்ப்பாணம், கிழக்கு, ருகுணு, ரஜரட்ட மற்றும் தென் கிழக்கு ஆகிய ஒன்பது பல்கலைக்கழங்களுக்கு மாத்திரமே  மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல் அதிகாரியான சிறிமதி விஜயவர்த்தன தெரிவித்தார்.

இதில் அதிகூடிய 131 மாற்றுத்திறனாளிகள் கொழும்பு பல்கலைகழகத்தின் கலைப் பீடத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அதிகூடிய 116 மாற்றுத் திறனாளிகள் யாழ். பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  

கடந்த ஏழு கல்வி ஆண்டுகளில் அதிகூடிய 130 மாற்றுத்திறனாளிகள் 2015/2016ஆம் கல்வி ஆண்டிலேயே பல்கலைக்கழகங்களுக்கு சென்றுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கைக்கு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய பதிலின் ஊடாகத் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, கடந்த ஏழு கல்வி ஆண்டுகளில் கலைத் துறைக்கு  461  மாற்றுத்திறனாளிகளும் வர்த்தக துறைக்கு 90 மாற்றுத்திறனாளிகளும் பௌதீக விஞ்ஞான துறைக்கு 30 மாற்றுத்திறனாளிகளும் உயிரியல் விஞ்ஞான துறைக்கு 38 மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் மாற்றுத்திறனாளிகளின் பல்கலைகழக நுழைவில் வீழ்ச்சி காணப்படுகின்றது. கடந்த 2021/2022 கல்வி ஆண்டுக்கு 77 மாற்றுத் திறனாளிகள் மாத்திரமே பல்கலைக்கழகங்களிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மாற்றுத்திறனாளிகள் பல்கலைகழக அனுமதிக்காக தெரிவுசெய்யப்படும் சமயத்தில்  அவர்களின் இயலாமை தொடர்பான மருத்துவ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் சந்திப்பு

இதேவேளை, கடந்த 2012ஆம் ஆண்டு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த சனத்தொகையில் 8.7 சதவீதமானோர் அதாவது கிட்டத்தட்ட 17 இலட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 74 சதவீதமானோர் எந்தவொரு பொருளாதாரச் செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. மேலும் 34 சதவீதமான பிள்ளைகள் எந்த ஒரு அடிப்படைக் கல்வியையும் பெறவில்லை எனத் தெரிய வருகின்றது.

அதிகளவான மாற்றுத்திறனாளிகள் நுவரெலியா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரதேசத்துக்கும் ஏற்ப இந்தத் தரவுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனினும் மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சரியான தகவல் கட்டமைப்பு இல்லாமை பாரிய பிரச்சினை என்பது தற்போது உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் அவர்களின் கல்வி மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கிலும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  

இந்த ஒன்றியத்தினால் மாற்றுத்திறனாளிகளின் நலன்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினை ஒருங்கிணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்த ஒன்றியம் தற்போது முன்னெடுத்துள்ளது.

இதன் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூட்டங்கள் மாத்தறை, கிளிநொச்சி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தலைமையில் இடம்பெற்றுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் சவால்கள், சிக்கல்கள், தற்பொழுது காணப்படும் வாய்ப்புக்கள் மற்றும் அவற்றை உரிய முறையில் நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றிய இந்தக் கூட்டங்களில் கலந்துரையாட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான  ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான பொறிமுறையை நிறுவுவதற்குத் தேவையான தகவல்களும் முன்மொழிவுகளும் இக்கலந்துரையாடல்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டங்களில் குறித்த மாவட்டத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள், அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறன் சிறுவர்களுக்கான கல்வி நிறுவங்களின் அதிகாரிகள், பிரதேச மக்கள் பிரதிநிதிகளின் இணைப்பு அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொள்கின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் மக்கள் சந்திப்பு

சிறிய தொழில் முயற்சியாளர்களான மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல், மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவதைத் தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை உருவாக்க இந்த ஒன்றியம் தற்போது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்காக மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 1996ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இந்த ஒன்றியம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நீதி அமைச்சு சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்தே சட்ட வரைபை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் சாசனத்துக்கு அமைய தயாரிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்தின் இறுதி வரைபினை விரைவில் முன்வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏனைய தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு சட்ட வரைபினை இறுதியாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் காணப்படும் சிக்கல்கள் பற்றிக் கலந்துரையாடி தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியை சந்திப்பதற்கும் இந்த ஒன்றியம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதேவேளை, மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக தற்பொழுது 27 பாடசாலைகள் மாத்திரம் காணப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்தப்படும் 1961ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க துணைப் பாடசாலைகள் மற்றும் பயிற்சிக் கல்லூரி (மேலதிக ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் இந்த ஆணைக்குழு தற்போது கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் விரிவான பேச்சுவார்த்தையொன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தனர்.

மாற்றுத்திறன் கொண்ட சிறுவர்கள் பாடசாலைக் கல்வியினை மேற்கொள்ள எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை முறைமை தொடர்பில் விசேடமாக இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடலொன்றை முன்னெடுக்க கல்வி அமைச்சரினால் தற்பொது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் சகல மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள்  மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளை வழிநடத்துவதற்கான குழுவொன்றை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

இக்குழுக்களின் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றுத்திறனாளிகளுக்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு விசேட நேரத்தினை ஒதுக்குமாறும் அவர் கோரிக்கைவிடுத்தார். இந்த நடைமுறை நாட்டின் சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஆகக் குறைந்தது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு பாடசாலையாவது இருக்கின்ற வேண்டும். எனினும், வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் அவ்வாறான ஒரேயொரு பாடசாலையே காணப்படுகின்ற விடயம் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தில் வெளியாகியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணி (DOJP) ஆகியன தேவையான முழு ஒத்துழைப்பினையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா கூட்டத் தொடரில் இலங்கைப் பிரதிநிதிகள்

தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது தேர்தல் சைகை மொழி அகராதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் செவிப்புலன் வலுவற்ற நான்கு இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்காகவே இந்த அகராதியினை  தேர்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை செவிப்புலன் வலுவற்றோர் மத்திய சம்மேளனம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன.

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் தேர்தலை நடத்துவதற்கான முதலாவது அடித்தளமாகவே இந்த சைகை மொழி அகராதி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான மாநாட்டின் அரசு  தரப்புக்களின் மாநாட்டின் 17ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் டலஸ் அழகப்பெரும கலந்துகொண்டு விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இதன்போது, இலங்கையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது நாட்டில் வாழ்கின்ற மாற்றுத் திறனாளிகள், சமூகத்திலுள்ள ஏனைய தரப்பினருடன் இணைந்து வாழ்வதற்கு வழி அமைத்துக் கொடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.