இலங்கையர்களுக்கு குவைத் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

இலங்கையர்களுக்கு குவைத் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் நன்றி தெரிவிப்பு

குவைத் நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கிய சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நன்றி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை-குவைத் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாஃப் பி தாஹர் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட சபாநாயகர்,

“இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இரு நாட்டுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1971 பெப்ரவரி 19ஆம் திகதி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. இந்த வருடம் நாம் 50 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்றோம்.

“தாஸ்மா பொலிஸ் மற்றும் சில தடுப்பு முகாம்களை அமைத்து அவற்றின் மூலம் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்கி வருகின்றமை மற்றும் சிக்கித் தவிக்கும் வீட்டுப் பணிப்பெண்களின் நலன்புரிகளைக் கவனித்துக் கொள்வதற்கு குவைத் அரசாங்கம் எடுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குவைத் இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்துக்குப் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் தலைவராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவுசெய்யப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் ஹாசிம், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அரவிந்த குமார் ஆகியோர் இதன் பிரதித் தலைவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.