முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை 'மனித உரிமை மீறல்களாக' அடையாளப்படுத்த நடவடிக்கை

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை 'மனித உரிமை மீறல்களாக' அடையாளப்படுத்த நடவடிக்கை

இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களை 'மனித உரிமை மீறல்களாக' அடையாளப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புலம்பெயர் முஸ்லிம் பேரவை மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடையே கடந்த பெப்ரவரி 28ஆம் இணையவழி ஊடாக இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை புலம்பெயர் முஸ்லிம் பேரவையின் அழைப்பின் பெயரில் உலகளாவிய இலங்கை முஸ்லிம் சமூக செயற்பாட்டாளகள், புத்திஜீவிகள், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில்  கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாத் பதியுத்தீன், முஜிபுர் ரஹ்மான், இஷாக் றஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் மாத்திரமே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேபோன்று இங்கிலாந்து, ஜெனீவா, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் புத்திஜீவிகள், சட்டத்தரணிகள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என 40ற்கும் அதிகமான பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச இலங்கை புலம்பெயர் முஸ்லிம் பேரவையின்(Sri Lanka Muslim Expatriates’ Council- SLMEC) பிரதானி பொறியியலாளர் சமீம் முஹம்மத் கருத்து வெளியிடுகையில்,

"இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு இனவாத அச்சுறுத்தல்களை நாம் கடந்த 10 வருடங்களாக அவதானித்து வருகின்றோம், இது வெறுமனே அரசியல், சமூக, மத, கலாசார விடயமாக நோக்கப்படமுடியாது. அங்கு இடம்பெறும் பெரும்பாலான செயற்பாடுகளும் அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும், மனித உரிமை மீறல்களாகவே அமைந்திருக்கின்றன.

அவற்றுக்கு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணை இருப்பதும், அரசாங்கம் சாதாரண சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கூடாக இனரீதியான ஒடுக்குமுறைகளை சிறுபான்மை மக்களின் மீது பிரயோகிக்கின்றது. இவை அனைத்துமே அடிப்படை மனித உரிமை மீறல்களாகவே கணிக்கப்படுகின்றன.

இலங்கை முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் குறைவானவர்கள், தமிழ் பேசும் மக்கள் என்று நோக்கினால் இலங்கையில் 25மூமானவர்கள் இருக்கின்றார்கள். இந்த 25 சதவீதமான மக்களுக்கும் ஓரளவிற்கு ஒரேவிதமான சவால்களையே எதிர்நோக்குகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் மக்கள் உட்பட ஏனைய சிறுபான்மை மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் தீர்வு மற்றும் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களுக்காக சரவ்தேச சமூகத்தின் தலையீட்டையும், நீதியையும் கோரி நிற்கின்றார்கள்.

இந்த சந்தர்ப்பத்திலே இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் தங்களுடைய பிரச்சினைகளையும் மனித உரிமை மீறல்கள் சார்ந்த பிரச்சினையாக முன்னிறுத்துவது முக்கியத்துவம் பெறுகின்றது.

அதற்கான முழுமையான முயற்சிகளும் புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம் மக்களால் முன்னெடுக்கப்படமுடியாது. அதனை முன்னெடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும், மக்கள் ஆணையும் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளிடமே இருக்கின்றன. இதனை வலியுறுத்துவதும் அவர்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுமே இந்த சந்திப்பின் நோக்கமாகும்" என்றார்.

இலங்கை புலம்பெயர் முஸ்லிம் பேரவையின் பேச்சாளர் சட்டத்தரணி அய்யூப் ஹமீத், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது அமர்விலே முன்வைக்கப்பட்டிருக்கின்றன இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான  பிரேரணை தொடர்பில் விளக்கமளித்து இதனை நிறைவேற்றுவதற்கான முஸ்லிம் மக்களின் ஆதரவை வெளிப்படுத்துவதும்,  முஸ்லிம் நாடுகளில் ஆதரவைக் கோருவதும் எமது பொறுப்பாகவும் கடமையாகவும் இருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

அதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பிலே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கலந்துகொண்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுத்தீன்,

"இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரங்களிலே அக்கரையோடும் ஈடுபாட்டோடும் செயற்படுகின்ற சர்வதேச இலங்கை முஸ்லிம் உறவுகளுக்கு முதலில் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

உங்களது செயற்பாடுகள் இலங்கையில் பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.  அமைச்சரவைக் கூட்டங்களில்கூட உங்களது செயற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றன.

அது ஒரு சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடனான சந்திப்பின் போதும் இது வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் இலங்கையில் இவ்வாறான விவகாரங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது ஒரு நீண்டகலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும். நாங்கள் இதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்" என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,

"இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலே சிங்கள மக்களுக்கு மத்தியில் வித்தியாசமான புரிதல்கள் இருக்கின்றன, இருந்தபோதிலும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அநீதிகளுக்கு எதிராகப் போராடுதல், குரல்கொடுத்தல் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் எங்களது சக்திக்கு உட்பட்டு இங்கு தொடர்ந்தும் குரல்கொடுக்கின்றோம், எங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, ஆனால் நாம் தொடர்ந்தும் இந்த முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

ஜனாஸா எரிப்பு விடயத்திலும் இன்றும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை, வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தாலும் அதிலே பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகின்றார்ர்கள், இதற்காகவும் நாம் முயற்சிகளை மேற்கொள்கின்றோம். உங்களுடைய முயற்சிகளையும் நாம் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.

இந்நிகழ்விலே கலந்துகொண்ட புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இத்தகைய சந்திப்புக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள். இவ்வாறான செயற்பாடுகளினூடாக இலங்கை முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்களுக்கான தீர்வுகளைப் பெற்றுகொள்வதற்கான வழிமுறைகள் உருவாகும் என்றும் கருத்துவெளியிட்டனர்.