கொவிட் என்பது சாதாரண நோய் அல்ல: ரமேஷ் பத்திரண
கொவிட் என்பது சாதாரண நோய் அல்ல. ஆகையால், அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்திற் கொண்டே ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதா அல்லது தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
பலப்பிடிய வைத்தியசாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
"கொவிட் தொற்றை சாதாரண நோயென ஒருபோதும் கருத முடியாது. அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் கடுமையாக்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுப்பது அவசியமாகும். கொவிட் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க தொடர்ந்து ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தினால் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்படும்.
பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய இரு பிரதான துறைகளை கருத்திற் கொண்டு அரசாங்கம் தீர்மானங்களை இனி எடுக்கும்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)