தூத்துக்குடியில் நீர்மூழ்கிக் கப்பல்: இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை
தூத்துக்குடி கடற் பிரதேசத்தில் நீர்மூழ்கிக் கப்பலொன்றை பணியில் ஈடுபடுத்தியமை தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
"தூத்துக்குடிக்கு நீர்முழ்கியை திடீரென நகர்த்தியது இந்தியா; பாதுகாப்பு குறித்து கரிசணை" என யாழ்ப்பாணத்தினை தளமாகக் கொண்டு வெளியிடப்படும் காலைக்கதிர் செய்தியொன்றினை வெளியிட்டது.
இது தொடர்பில் விடியல் இணையத்தளம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளரை தொடர்புகொண்டு வினவியது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்தியாவின் தூத்துக்குடியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்றினை நிரந்தரமாக கடமையில் ஈடுபடுத்துவதாக கூறும் ஊடக அறிக்கைகளை நாம் பார்வையிட்டுள்ளோம்.
இவ்வாறு நீர்மூழ்கி கப்பலை அங்கு நிறுத்துவது குறித்த ஊகங்களின் அடிப்படையிலான இந்த செய்தி அறிக்கைகள் அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளன.
இந்திய கடற் படையின் நடவடிக்கைகள் உள்ளிட்ட இவ்வாறான செயற்பாடுகள் குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க விரும்பவில்லை.
இருந்தபோதிலும், செயற்பாட்டு ரீதியான தேவைகள் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் இந்தியாவையும் அதன் நலன்களையும் பாதுகாப்பதற்கான இலக்கினை முழுமையாக அடைவதற்காகவும், நீர்மூழ்கிக் கப்பல்களையோ அல்லது ஏனைய தேசிய சொத்துக்களையோ பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான முடிவுகள் இந்திய அதிகாரிகளால் எடுக்கப்படுகின்றன'' எனக் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)