பிரதேச செயலாளரரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரிக்க முற்பட்டவருக்கு விளக்கமறியல்
எம் எஸ் எம் நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலாளரரின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரையை போலியாக தயாரிப்பதற்கு முற்பட்ட நபர் ஒருவர் காத்தான்குடி பொலிசாரினால் நேற்று முன் தினம் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச செயலாளர் யு. உதய சிறீதரின் பெயர் பொறிக்கப்பட்ட இறப்பர் முத்திரையை தயாரிப்பதற்கு முற்பட்ட போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த நபர் காத்தான்குடியிலுள்ள அச்சகமொன்றில் பிரதேச செயலாளரின் இறப்பர் முத்திரை தபாரிப்பதற்கு முற்பட்ட போது குறித்த அச்சக உரிமையாளர் பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதேச செயலாளர் காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தி முறைப்பாடு செய்யவே குறித்த நபர் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிரதேச செயலாளரரின் இறப்பர் முத்திரை போன்று போலியான முறையில் தயாரித்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தின் போது வாகன போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திரத்தை போலியான முறையில் வழங்க முயற்சித்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபர் நேற்று வியாழக்கிழமை (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.ஏ.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
Comments (0)
Facebook Comments (0)