சிங்களத்தினைக் கற்போம் சமூகத்தினை வளர்ப்போம்!
சமகால இலங்கையின் சமூக – பொருளாதார - அரசியல் – தளத்தில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே. அரசியல் ரீதியாக இச்சவால்களை வெற்றிகொள்வதற்கான வாய்ப்புக்கள் நாளாந்தம் அருகிவருகின்றன.
எண்ணிக்கை அடிப்படையில் எமது அரசியல் பலம் என்பது சுமார் பத்து சதவீதமானது மட்டுமே. கடந்த காலத்தில் இப்பலத்தினைக்கொண்டு நாம் நிறையவே சாதித்திருக்கின்றோம். அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவ்வப்போது கைகூடியிருந்தது.
ஆனால் அந்தநிலை தொடர்ந்தும் நிகழப்போவதில்லை. சமூகத்தளத்தில் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புக்கள் நிறையவே இருக்கின்றன. ஒருசிறுபான்மை சமூகம் என்ற வகையில் நமது பொறுப்புக்களை நாம் உணர்ந்து செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது.
எந்த சிங்கள அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சதாவும் எங்களுக்காக குரல்கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. நாம் எண்ணிக்கையால் மிகச் சிறுபான்மையாக இருப்பதனால், தேர்தல் அரசியலை இலக்குவைத்துச் செயற்படும் சிங்களத் தலைவர்கள் எவரும் எமது அபிலாசைகளில் வெளிப்படையான அக்கறையினை காட்ட விரும்பப் போவதில்லை.
ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களை நாம் வெற்றிகொள்ள முடியும். அதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. சிங்கள மக்களின் பழக்க வழக்கங்களை, நம்பிக்கைகளை, மொழியினை, கலாசாரத்தினை நாம் அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் குறித்து சிங்கள் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு உளவியலை சமூக ரீதியாக வெற்றி கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது நம்பிக்கையின் கலாசாரத்தின் முக்கியத்துவத்தினை நாகரீகமான முறையில் மற்றையவர்களுக்கு எடுத்தியம்ப வேண்டும். ஊடக அரசியல் வியாபாரிகளால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படுகிற போது, அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள எம்மை தயார்படுத்த வேண்டியுள்ளது.
முஸ்லிம்கள் தேச விரோதிகளாக காட்டப்படுகின்ற போது, இலங்கை தேசத்திற்கு முஸ்லிம்கள் வழங்கிய மகத்தான அர்ப்பணிப்புக்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
இதற்காக தாய் மொழியினைக்கை விடாத அதேநேரம், சிங்கள மொழியினைக் கற்பது காலத்தின் கட்டாயமாகும். சிங்கள மொழியில் புலமையுள்ள உலமாக்கள், சமூகத் தலைவர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வாறானவர்களால் சமூகம் வழிநடத்தப்படுகிற போது, எமது அரசியலும் இலங்கை தேசத்திற்கு ஏற்புடையதாகமாறும் என்பதில் ஐயமில்லை. வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்கள மொழியில் அதிக பரிட்சயத்தினைக் கொண்டுள்ள போதிலும் அங்கும் சிங்கள மொழி மூலமான கல்வியினைத் தொடர்பவர்கள் தொகை மிகவும் சொற்பமாவே உள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். சிங்கள மொழி மூலமான கற்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரவலாக விஷ்தரிக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும்.
எம்.ஏ.எம்.பௌசர்
சிரேஷ்டவிரிவுரையாளர் - அரசறிவியல்துறை
தென் கிழக்கு பல்கலைக்கழகம்
Comments (0)
Facebook Comments (0)