கொவிட்19க்கு பின்னரான காலப்பகுதியில் வர்த்தக, முதலீட்டை ஊக்குவிக்க இலங்கை - இந்திய வர்த்தக அமைப்புக்கள் உறுதி
கொழும்பு வர்த்தக மன்றம் மற்றும் இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக மன்ற சம்மேளனம் (FCCISL) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஏற்றுமதி சங்கங்களின் சம்மேளனம் (FIEO) கொவிட் 19க்கு பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக காணொளி மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கலந்துரையாடலில் கொழும்பிலுள்ள இந்தியக உயர் ஸ்தானிகராலயம் மற்றும் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் வளர்ச்சியின் முக்கியத்துவம் தொடர்பாக FIEO, FCCISL மற்றும் கொழும்பு வர்த்தக மன்றம் ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன் இம்மூன்று துறைகளிலும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர்.
ஏற்றுமதியை இலக்கு வைத்த உற்பத்திகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்த நிலையில் FCCISL மற்றும் கொழும்பு வர்த்தக மன்றங்கள் இலங்கையின் பல்வேறு துறைகளில் காணப்படும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தன.
கொவிட் 19 காரணமாக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு புதிய தந்திரோபாயங்களை உருவாக்கவேண்டிய தேவை இரு நாடுகளினதும் வர்த்தக சமூகத்துக்கு இருப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல் பிரிவின் தலைமை அதிகாரி நேஹா சிங் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறைப்பதற்காக குறிப்பாக இலத்திரனியல் மூலச் சான்று பத்திரத்தை (e-Certificates of Origin) விநியோகித்தல் போன்ற புதிய மாற்று நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
FCCISL. அமைப்பின் தலைவர் கருத்து தெரிவிக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடியினால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 265 பில்லியன் அமெரிக்க டொலர் ஊக்குவிப்பு நிதி கேள்விகளுக்கு புத்துயிரளிக்கும் நிலையில் அதனடிப்படையில் இலங்கை - இந்திய வர்த்தக செயற்பாடுகள் மேம்படுமென தெரிவித்தார்.
கேள்வி-பதில் அமர்வுடன் இந்த கலந்துரையாடல் நிறைவடைந்த அதேநேரம் வர்த்தக ரீதியான கேள்விகளுக்கு சமநேரத்தில் பதிலளிப்பதற்கான இணைய பொறிமுறையொன்றை FIEO அமைப்புடன் இணைந்து ஆரம்பிப்பதற்கு கொழும்பு வர்த்தக மன்றம் முன்மொழிந்திருந்தது.
Comments (0)
Facebook Comments (0)