'இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மைச் சமூகமும் நற்பிரஜைத்துவமும்' எனும் நூல் குறித்த சில அவதானங்கள்

'இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மைச் சமூகமும்  நற்பிரஜைத்துவமும்' எனும் நூல் குறித்த சில அவதானங்கள்

ஸகி பவ்ஸ்
சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்
மலேசியா

பின்புலமும் பிரதான விவாதப் பொருளும்

உலக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில்  சர்வதேசம் தழுவிய சமூகப், பொருளாதார, அரசியல் ரீதியான திருப்புமுனைகளைக் கண்டதொரு காலப் பகுதியாக கடந்த நூற்றாண்டை அரசியல் வரலாற்றாசிரியர்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.

ஏனெனில், இரண்டு உலகப் போர்கள், பழைமை வாய்ந்த நான்கு சாம்ராஜ்ஜியங்களின் வீழ்ச்சி, புதிய அரசுகளது உருவாக்கம், உள்நாட்டு யுத்தங்கள், நாடுகள் பிளவுபடல்,  பனிப் போர், அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றை மைய உலகின் எழுச்சியும் வீழ்ச்சியும், உலகமயமாக்கல், தேசியவாதம், நவீனத்துவம், பின்-நவீனத்துவம் மற்றும் சர்வதேச குடிப்பெயர்வுகள் (International Migration) என முழு உலகினதும் இயல்பான அசைவியக்கத்தை உலுக்கி விடும் நிகழ்வுகளையும் சிந்தனைகளையும் கடந்த நூற்றாண்டில்தான் மனித சமூகம் சந்தித்தது.

அத்தகையதொரு புதிரான உலகை எதிர்கொள்ளும் நோக்குடன் பல நூற்றாண்டுகளாக சமூகங்களுக்கு மத்தியில் செல்வாக்குச் செலுத்தி வந்த கோட்பாடுகளும் கண்ணோட்டங்களும் மீள்வாசிக்கப்பட்டன. மேலும், பல்வேறு புதிய சிந்தனைகளும் முன்வைக்கப்பட்டன.

இப்பொதுப் போக்கினை சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற பிரதான சமூகவியல் துறைகளில் மட்டுமன்றி, சமயம் சார்ந்த உரையாடல்களிலும் இலகுவாக அவதானிக்க முடியும். இதனோடிணைந்த வகையில் புதிய சமூக, அரசியல் சூழலுக்கேற்ப இஸ்லாத்தின் தூதினை தகவமைக்கும் நோக்குடன் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த இஸ்லாமிய கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் இஸ்லாமிய அறிஞர்களும் தீவிர ஆய்வுக்குட்படுத்தினர்.

மட்டுமன்றி, நவீன சவால்களை தாண்டிச் செல்லும் நோக்குடன் புதிய சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் அறிமுகம் செய்தனர். அவ்வாறு, கடந்த இரண்டு தசாப்த காலமாக சர்வதேச இஸ்லாமிய உரையாடல்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் இரு பெரும் பிரதான கருப்பொருள்களை சூழவே இந்நூல் நகர்ந்து செல்கிறது.

அதிலொன்று,  ஒரு முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் தமது இஸ்லாமிய சட்ட வாழ்வை பன்மைச் சூழலில் ஒழுங்குபடுத்திக் கொள்ளல் பற்றியதாகும். இரண்டாவது, இன்றைய உலகில் சமூகங்களை ஒழுங்குபடுத்தும் பிரதான கோட்பாடுகளில் ஒன்றாக கருதப்படும் 'பிரஜைத்துவ சிந்தனை' பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும்.

அவ்விரு உரையாடல்களையும் இணைத்த வகையில் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் தாம் வாழும் நாடுகளில் இஸ்லாமிய நற்பிரஜைத்துவ விழுமியங்களுக்கு சான்று பகரும் வகையில் தங்களது வாழ்வியலை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியையே 'இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மைச் சமூகமும் நற்பிரஜைத்துவமும்' என்ற நூல் பகுப்பாய்வு செய்கிறது.

அதில், இஸ்லாமிய உலக நோக்கிற்கும் நவீன பிரஜாவுரிமைச் சிந்தனைக்கும் இடையில் கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள் இல்லை என வாதிக்கிறார் நூலாசிரியர். மேலும், நவீன பிரஜாவுரிமைச் சிந்தனையின் தூண்களில் ஒன்றான தேசப்பற்றை பிழையானதொரு உணர்வாக இஸ்லாம் கருதவில்லை.

ஆனால், பல்லின சூழலில் ஒரு தேசத்தின் எழுச்சிக்கு இனங்களுக்கும் சமூகங்களுக்கும் மத்தியிலான சகவாழ்வும் பரஸ்பர புரிந்துணர்வுமே அடிப்படையாகும் என்ற செய்தியையும் அவர் அழுத்தமாக முன்வைக்கிறார்.

நூலாசிரியர் உஸ்தாத் அகார் முஹம்மத் கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக இக்கருத்துக்களை வலியுறுத்தி வருபவர். மட்டுமன்றி, இலங்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் தமது சமூக மற்றும் சட்டவாழ்வை இலங்கை முஸ்லிம்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்திய முதன்மையானவர்களில் ஒருவராகவும் அவரைப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் ஆய்வுக் கட்டுரைகளாகவும் பொது மன்ற உரைகளாவும் விஷேட விரிவுரைகளாகவும் உஸ்தாத் அகார் அவர்கள் முன்வைத்த ‘முஸ்லிம் சிறுபான்மை வாழ்வியல் மற்றும் இஸ்லாமிய பிரஜைத்துவ சிந்தனை பற்றிய கருத்துக்களையே இந்நூல் தொகுத்தளிக்கிறது.

அந்த வகையில் இதுவொரு தொகுப்பு நூல் என்பதனை மனங்கொள்ள வேண்டும். இந்நூலினுடைய முழுமுதல் நோக்கமும் இக்கருத்துகளை இன்னும் தீவிர சமூக உரையாடலுக்கு உட்படுத்துவதாகும்.  

நூலின் கட்டமைப்பும் முறையியலும்

இந்நூலின் கட்டமைப்பைப் பொறுத்தவரை, சிறுபான்மை வாழ்வியல் மற்றும் பிரஜைத்துவ சிந்தனை பற்றிய இரு அறிமுக அத்தியாயங்களையும் பிராஜாவுரிமைச் சிந்தனை, தேசப்பற்று, சகவாழ்வு போன்ற எண்ணக்கருக்களை இஸ்லாமிய கண்ணோக்கில் பகுப்பாய்வு செய்யும் மூன்று பிரதான அத்தியாயங்களையும் அது உள்ளடக்கியிருக்கிறது.

இறுதியாக, ஆய்வின் விதந்துரைகளை நூலாசிரியர் தனியானதொரு அத்தியாயத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவ்வாறு, நூலினுடைய விவாத ஒழுங்கும் தொகுப்பு முறையும் ஆய்வியல் நியமனங்களை தழுவியதாக அமைந்துள்ளதனை புரிந்து கொள்ள முடியும்.

என்றாலும், இது ஆய்வாளர்களை மட்டுமே இலக்கு வைத்து எழுதப்பட்ட ஆய்வு நூலுமல்ல. அதேபோன்று, எந்தவித ஆய்வியல் நியமங்களையும் கருத்திற் கொள்ளாமல் தொகுக்கப்பட்ட 'ஜனரஞ்சக' நூலுமல்ல. மாறாக, ஆய்வுப் பண்பாடுகளை உள்வாங்கிய நிலையில் சமூகத்தில் சகல மட்டத்தினரும் பயன் பெறக்கூடிய வகையில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

நூல் முன்வைக்கும் முக்கியமான சிந்தனைகளும் அதன் முக்கியத்துவமும்

இந்நூல் எமது உரையாடல் புலத்தில் பழக்கப்பட்டுப்போன பல்வேறு கண்ணோட்டங்களை விசாரணை செய்வதற்கூடாக நஜ்பிரஜைத்துவம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோக்கினை முன்வைக்க விரும்புகிறது.

அந்த வகையில் ஆரம்ப அறிமுக அத்தியாயத்தில் 'பிரஜைத்துவ சிந்தனை' என்பது இன்று, நேற்று தோன்றிய ஒன்றல்ல என்ற கருத்து ஆழமாக வலியுறுத்தப்படுவதனை புரிந்து கொள்ள முடியும்.

அதாவது, கிரேக்க யுகத்திலிருந்தே அறிமுகமானதோர் எண்ணக்கரு என்பதுடன் ஒவ்வொரு கட்டத்திலிலும் வித்தியாசமான பல வடிவங்களில் அது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நவீன கால பிரஜாவுரிமைச் சிந்தனையின் வடிவமும் தத்துவமும் 17ஆம் நூற்றாண்டுகளிலிருந்து தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த ஒன்றாகும் என்பதனையும் தெளிவாக நூல் வரையறை செய்கிறது.

இதுவொரு மிக முக்கியமான குறிப்பாகும். ஏனெனில், வரலாற்றில் வாழ்ந்த எல்லாச் சமூகங்களும் ஏதோ ஒரு வகையில் பிரஜைத்துவ சிந்தனைக்கு பங்களிப்பு செய்திருக்கின்றன. இந்தக் கோணத்தில் நின்று நோக்கும்போது, மனித நாகரிகத்தை இணைக்கும் பொதுக் கோட்பாடுகளில் ஒன்றாக 'பிரஜாவுரிமைச் சிந்தனையை' முன்வைக்க விரும்புகிறார் நூலாசிரியர்.

எனவே, இஸ்லாமிய கண்ணோக்கில் நின்று அதனை ஆதாரப்படுத்துவதும் அதனை மேலதிக உரையாடலுக்கு உட்படுத்துவதும் மனித நாகரிகத்திற்கு செய்யும் பங்களிப்பாகவும் மனங்கொள்ள வேண்டும். நூலினுடைய அணிந்துரையில் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்கள், “எந்தவொரு அறிவையும் ஒவ்வொருவரும் அவரவரது கலாச்சாரம் சார்ந்து உள்வாங்கிக் கொள்வது அடிப்படையானது” என்று  குறிப்பிடுகிறார்.

உண்மையில், அதுவோர் ஆரம்ப அடிப்படை என்பதனை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், நீண்ட கலாச்சாரப் பாரம்பரியங்களைக் கொண்ட சமூகங்கள் தமது பண்பாடுகளின் மீது நின்று பிராஜவுரிமைச் சிந்தனையை இன்னும் நிறைவான கோட்பாடாக மாற்றியமைப்பதற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்ய முடியும் என்றும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு வசனத்தில் சொன்னால், மதங்களுக்கு இடையிலான உரையாடல் ((Inter-Faith dialogue) தளத்தினுடைய வீச்சு சமூக-அரசியல் சிந்தனைகளை ஒன்றிணைத்து நெறிப்படுத்துவதனை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டிருயிருக்கிறது. அதற்கான அடிப்படை யாதெனில், பிராஜைத்துவ சிந்தனையை மனித நாகரிகத்தின் சொத்தாக நோக்குவதாகும். இதனை நூல் அழுத்தமாக வலியுறுத்திச் சொல்வதனை அவதானிக்க முடியும்.

அதனோடிணைந்த வகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்கள் மட்டுமே இஸ்லாமிய பூமியாகும். ஏனைய, நாடுகளும் பிராந்தியங்களும் 'அந்நியர்கள் வாழும் பிராந்தியம்' என்று சில சிறுபான்மை முஸ்லிம் சமூகங்கள் புரிந்து கொள்வதுண்டு.

இதற்கு இஸ்லாமிய வரலாற்றில் தொழிற்பட்ட ‘தாருல் இஸ்லாம்’ மற்றும் ‘தாருல் குப்ர்’ என்ற இரட்டை பிரிப்பு முறை ஆதாரமாக அமைந்திருக்கலாம். ஆனால், உத்தியோகபூர்வ எல்லைகளற்ற 'யுத்தம்' என்ற கருவியை மாத்திரம்  தழுவியதாக வெளியுறவுக் கொள்கை நடைமுறைகள் காணப்பட்ட சாம்ராஜ்ஜிய உலக ஒழுங்கில் முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட பிரிப்பு முறை 'தாருல் குப்ர்' மற்றும் 'தாருல் இஸ்லாம்' எண்ணக்கருவே தவிர, அல்குர்ஆனின் நிழலில் பெறப்பட்டதொரு சிந்தனையல்ல என்று பல நவீன இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால், அத்தகையதொரு வரலாற்று சூழலிலும் சமதானத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் இஸ்லாமிய அறிஞர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே 'தாருல் அஹ்த்' என்ற கோட்பாட்டை இஸ்லாமிய அறிஞர்கள் வரலாற்றில் முன்வைத்தர்கள்.

எது எப்படியோ, உலகத்தை இஸ்லாமிய பூமி மற்றும் இஸ்லாமல்லாத பூமி என்ற பிரிகோடுகளில் நின்று நோக்காமல் 'அல்லாஹ்வின் பூமி' (அர்ழுல்லாஹ்) என்ற அல்குர்ஆனிய கண்ணோட்டத்தின் மீது நின்று புரிந்து கொள்ளுமாறு நூலினுடைய  மூன்றாவது அத்தியாயம் வாதிக்கிறது.

அதாவது, உலகில் இஸ்லாமிய நிலம், இஸ்லாம் அல்லாத நிலம் என்ற இரண்டு வகையான நிலங்கள் இல்லை. முழு உலகமுமே அல்லாஹ்வின் பூமிதான். ஆகவே, தனது அடிப்படையான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் நிலையில் உலகில் எந்தப் பிரதேசத்தையும் தனது 'Home Country' ஆக தெரிவுசெய்து கொள்வதற்கான அனுமதியை ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கிறது என்பது நூல் முன்வைக்கும் மற்றொரு மிக முக்கியமான மேலதிக உரையாடலுக்கான குறிப்பாகும்.

இஸ்லாமும் பிரஜைத்துவ சிந்தனையும் உடன்படும் இரண்டாவது புள்ளி மனிதர்கள் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டமாகும் என்பது நூல் முன்வைக்கும் பிறிதொரு வாதமாகும். அதாவது, முஸ்லிம்கள் முஸ்லிம்களுடன் உறவு பாராட்டுவதும் அவர்கள் தங்களுக்கு மத்தியில் இணைந்து சமாதானமாக வாழ்வதும் மட்டுமே 'இஸ்லாமிய வாழ்வாகும்' என்ற பொதுவான ஊகத்தை நூலாசரியர் விமர்சனம் செய்கிறார்.

இதற்கு முஸ்லிம் சமூகத்திற்குள்ளால் ஆழமாக பதிந்துள்ள ஒரே உம்மத் என்ற சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்கலாம். முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான பிணைப்பை புனிதமானதாக இஸ்லாம் கருதுகிறது. ஆனால், அதனை மட்டுமே இஸ்லாம் வலியுறுத்தவில்லை.

மாறாக, மனித சமூகத்திற்கு மத்தியிலான ஒற்றுமையையும் அது பேசுகிறது. நவீன  அரசியல் பரிபாஷையில் சொல்வதாயின், மனிதத்துவத்தைப் பாதுகாக்கும், போஷிக்கும் சர்வதேச உறவொன்றைக் (International Relations) கட்டியெழுப்புமாறு அல்குர்ஆன் அழைப்பு விடுக்கிறது. மட்டுமன்றி, ஒரு தேசத்திற்குள் இணைந்து வாழும் பிரஜைகளும் தங்களுக்கு மத்தியில்  சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றதொரு உள்நாட்டுக் கொள்கையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு, ஒரு தேசத்தில் வாழும் பிரஜைகள் தங்களுக்கு மத்தியில் இணைந்து வாழ்வதும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் ஒற்றுமைப்படுவதும் சகல தேசங்களும் இணைந்து சர்வதேச சமூகம் என்ற வகையில் நீதி, சமாதானம், பரஸ்பர ஒத்துழைப்பு போன்ற விழுமியங்களைத் தழுவியதாக ஓர் ஒழுங்கின் கீழ் வருவதும் ஒன்றுக்கொன்று முரணான விடயமல்ல என்பதனையே நூலாசிரியர் அங்கு அழுத்தி முன்வைக்க விரும்புகிறார்.

இவ்வாறான, பரந்துபட்ட சமூக ஒத்துழைப்பை வலியுத்தும் சிந்தனைகளை மறுக்கும் மிகச் சில கடும்போக்காளர்கள் 'அல்-வலாஉ வல் பராஉ' என்ற எண்ணக் கருவை ஆதாரம் காட்டுவதுண்டு. அதாவது, முஸ்லிம்கள் முஸ்லிகளுடன் மட்டுமே ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள முடியும் என்ற கருத்தையே 'அல்-வலாஉ வல் பராஉ' எண்ணக் கரு நாடுவதாக அக்கடும்போக்காளர்கள் வாதிக்கிறார்கள்.

ஆனால், மார்க்கத்திற்கு விசுவாசமாக நடத்தல் என்பதும் தேசத்திற்கு விசுவாசமாக நடத்தல் என்பதும் பரஸ்பரம் முரண்பட்டுக் கொள்ளும் இரு விடயங்கள் அல்ல. மறுபுறம், நல்ல அம்சங்களுக்கு விசுவாசமாக நடப்பதும் மனித சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் சதித் திட்டங்களிலிருந்து விலகி நடப்பதுமே 'அல்-வலாஉ வல் பராஉ' என்பதாகும். சுவாரஷ்யம் என்னவென்றால், சமூகங்களைப் பிரிக்கும் எண்ணக்கருவாக கடும்போக்காளர்கள் முன்வைக்கும் 'அல்-வலாஉ வல் பராஉ' எண்ணக்கருவை, நன்மையின்பால் சமூகங்களை ஒன்றிணைப்பதற்கான இணைப்புப் பாலமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கூடாக, அக்குறித்த சிந்தனையின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுகிறார் நூலாசிரியர்.

அதனுடைய கோட்பாட்டியல் விளைவு என்னவென்றால், இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகள் எதிர் பிற மதங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்டமைப்புகள் எதிர் நவீன அரசியல் கட்டமைப்புகள் என்ற விதத்தில் உலகையும் அதன் அரசியல் கட்டமைப்புகளையும் நோக்கும் பிளவுப்பட்ட பார்வையை (Binary World View) தாண்டிச் செல்வதற்கு நூல் முற்படுகிறது. இதுவும் இந்நூல் முன்வைக்கும் மிக முக்கியமான சிந்தனைப் பங்களிப்பாக கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்.

இஸ்லாமிய பிரஜாவுரிமைச் சிந்தனையின் பிரயோகம்

இந்நூல் நற்பிரஜைத்துவம் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை ஓர் கோட்பாடாக மாத்திரம் முன்வைக்கவில்லை. மாறாக, பிரயோக ரீதியான பரிமாணமொன்றையும் நூல் கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்நூலினுடைய முதல் இரண்டு அத்தியாயங்களான இஸ்லாமும் நற்பிரஜைத்துவமும், இஸ்லாமும் தேசப்பற்றும் போன்ற அத்தியாயங்கள் கோட்பாட்டுத் தெளிவை வழங்குகின்றன.

அதேநேரம், நற்பிரஜைத்துவமும் சகவாழ்வும் என்ற அத்தியாயத்தை ஒரு பிரயோக ரீதியான தலைப்பாகவே புரிந்து கொள்ள முடியும். இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு 'பிராஜாவுரிமைச் சிந்தனை' தொடர்பாக சமகால அரசியல் சிந்தனையாளர்களுக்கு மத்தியில் நிலவும் பல்வேறுபட்ட உரையாடல்களை அடையாளப்படுத்திக் கொள்வது அவசியம்.

ஏனெனில், இன்றைய உலகில் பிரஜாவுரிமைச் சிந்தனை என்பது தீர்க்கமான முடிவு காணப்பட்டதொரு விடயம் அல்ல. மாறாக, குறித்த சிந்தனை மற்றும் அதன் பிரயோகத்தில் ஏராளமான சிக்கலிருப்பதாக அரசியல் சிந்தனையாளர்களே எழுதிச் செல்கிறார்கள்.

குறிப்பாக, ஆரம்பத்தில் பிராஜாவுரிமைச் சிந்தனை என்பது முதலாளித்துவவாதிகளை மட்டுமே அது பலப்படுத்துகிறது என்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டது. அதாவது, எல்லாப் பிரஜைகளும் சமம் என்று கூறப்பட்டாலும் அந்த சமத்துவ சிந்தனை பிரயோகத்தில் இல்லை.

அது சமனற்ற விதத்திலேயே பிரயோகிக்கப்படுகிறது என்று அக்கருத்தை முன்வைத்தவர்கள் குறிப்பிட்டார்கள். பின்பு, 'சமூக பிராஜவுரிமைத்துவம்' (Social Citizenship) என பிரஜாவுரிமைச் சிந்தனை புதியதொரு வடிவம் பெற்றது. தொடர்ந்து, சம பிராஜாவுரிமைச் சிந்தனை பெரும்பான்மைச் சமூகங்களையே பலப்படுத்துகிறது.

ஒரு நாட்டில் வாழும் கலாச்சார ரீதியான, மொழி ரீதியான சிறுபான்மைச் சமூகங்களை அது கண்டு கொள்வதில்லை என்றதொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பின்னர், மத ரீதியான சிறுபான்மைகள் ஒடுக்கப்படுவதாகவும் அவர்கள் தமது நாடுகளில் பிரஜாவுரிமைச் சமத்துவத்தை சரியாக அனுபவிப்பதில்லை என்றும் கூறப்பட்டது. விளைவாக, புதிய அரசியல் தளமாற்றங்களுக்கு ஏற்ப பிரஜாவுரிமைச் கோட்பாட்டை மீள்நிர்ணயம் செய்யும் பன்மைக் கலாச்சாரம் (Multi-Cultural Citizenship) என்ற சிந்தனை முன்வைக்கப்பட்டது.

இத்தகைய பிராஜாவுரிமைச் சிந்தனை தொடர்பான இவ்வுரையாடல்களில் அவதானிக்க முடியுமான முக்கியமான பண்பு யாதெனில், ஒரு நாட்டில்  பாதிக்கப்படும் இனக் குழுக்களது உரிமைகளை சட்ட ரீதியாக உத்தரவாதப்படுத்துவதினுடாக பிராஜவுரிமைச் சமத்துவ சிந்தனையை அடைந்து கொள்வதற்கு முடியும் என அரசியல் கோட்பாட்டாளர்கள் சிந்திக்கிறார்கள் என்பதாகும்.

ஏனெனில், நவீன ஐரோப்பாவின் மதச்சார்பற்ற சமூகங்களை கருத்திற் கொண்ட நிலையிலேயே நவீன கால பிரஜாவுரிமைச் சிந்தனையும் அதன் அமுலாக்கத்தில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நவீன காலத்தில் பொது நலன்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் சட்ட ரீதியான ஒப்பந்தமொன்றின் மூலம் பிணைக்கப்பட்ட சமூகக் குழுவே 'பிரஜைகள்' என்பதாக நாடப்படுகிறது. ஆக, அதில் ஏதேனுமொரு இனக் குழு பாதிக்கப்படும்போது, அவ்வொப்பந்தத்தை மீளவும் நிர்ணயம் செய்வதற்கூடாக சமத்துவத்தை அடைந்து கொள்வதற்கு கோட்பாட்டாளர்கள் முயல்கிறார்கள்.

இத்தகைய சமகால பிரஜாவுரிமைச் சிந்தனை மற்றும் அது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான உரையாடல்களின் ஒளியில் நோக்கும்போது, பல்லின சூழலில் ஏனைய சமூகத்தினர்களை அங்கீகரித்து வாழ்வதனை ஓர் ஆத்மீகப் பெறுமானமாக ஒரு பிரஜை நோக்காதவிடத்து,  அதனால் ஏற்பட முடியுமான சமூக முரண்பாடுகளை வெறும் சட்ட ஏற்பாடுகளினால் மட்டுமே தீர்க்க முடியாது என்ற செய்தியையே நூலின் ஐந்தாவது அத்தியாயம் வலியுறுத்திச் சொல்கிறது.

இன்னொரு வசனத்தில் சொன்னால், சமகால பிரஜாவுரிமைச் சமத்துவ சிந்தனை  எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு ஓர் ஆத்மிகக் காரணியுமிருக்கிறது என்பதனையும் மறைமுமாக நூல் தொட்டுக் காடுகிறது. அதாவது,  பல்லின சமூகங்கள் வாழும் தேசத்தில் முஸ்லிம்கள் சகவாழ்வுடனும் பொது விவகாரங்களில் பங்கேற்றும் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற செய்தியை மட்டுமே மேலோட்டமாக அவ்வத்தியாயம் வலியுறுத்த வரவில்லை.

மாறாக, அவ்வாறு முரண்பாடுகளைக் களைந்து, இணைந்து பயணிப்பதனை ஓர் ஆத்மிகப் பெறுமானமாக நோக்க வேண்டும். அப்போதுதான் பிரஜைகளுக்கு மத்தியிலான முரண்பாட்டை முழுமையாகத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற செய்தியையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. அந்த வகையில், ஒரு நிலபுல எல்லைக்குள் வாழும் சமூகங்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான தேசிய உரையாடலை நெறிப்படுத்தும் இஸ்லாமிய முன்மொழிவொன்றை முன்வைப்பதாகவே பிரஜாவுரிமைச் சிந்தனையும் சகவாழ்வு தொடர்பான அத்தியாயத்தை அடையாளம் காணலாம்.

இந்தக் கோணத்தில் நோக்கும்போது,  மனித குல ஒருமைப்பாடு மற்றும் பரஸ்பரம் மனிதர்களை அங்கீரித்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் வழிகாட்டல்கள் மற்றும் அது பற்றிய வரலாற்றாதாரங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதனை உணர்ந்து கொள்ள முடியும்.

இஸ்லாமிய உலக நோக்கில் சமத்துவ சிந்தனையும் அதன் அமுலாக்கமும் எவ்வாறு ஆத்மிக கண்ணோட்டங்களுடன் இணைந்து பயணக்கின்றன என்பது பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது கீழ்வருமாறு எழுதிச் செல்கிறார்:

“சட்டத்தின் முன் யாவரும் சமம்” என்பது சட்டத்துறையில் இஸ்லாத்தின் கொள்கையாக மாத்திரமன்றி அது, அதிசயிக்கத்தக்க விதத்தில் அமுல்படுத்தப்பட்டமையையும் காண முடிகின்றது. ஷரீஆ சட்டத்தின் முன் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள அனைவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள். ஓரு யூதப் பெண் மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் நிரபராதி என்பதனை நிரூபிக்க சில அல்குர்ஆன் வசனங்களையே இறக்கியருளினான் இறைவன்.” (பக்கம்- 59).

இறுதிக் குறிப்பு

கடைசியாக, இந்நூல் மிகச் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டதாகும். பல முக்கியமான கருத்துக்கள் சுருக்கமாக கூறப்பட்டுள்ளன. ஏனெனில், இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பிரஜாவுரிமைச் சிந்தனை தொடர்பான சமூக உரையாடல்களை துவங்கி வைக்கும் நோக்கில் எழுதப்பட்டதாகவே இம்முயற்சியைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, இதனுடைய இரண்டாம் பதிப்பு சற்று விரிவுபடுத்தப்பட்டதாக அமைவது சிறப்பானதாகும். அவ்வாறு, இந்நூல் இரண்டாம் பதிப்பைக் காணும்போது மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய  சில விடயங்கள் இருக்கின்றன.

அதிலொன்று, பாரம்பரிய இஸ்லாமிய எண்ணக் கருக்கள் எவ்வாறு அக்கால சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் ஒழுங்குகளுடன் இணைந்து பயணித்தன மற்றும் எவ்வாறு அவை நவீன கால அரசியல் ஒழுங்குகளிலிருந்து அவை வித்தியாசமானதாக காணப்பட்டன என்பதனை தெளிவாக பிரித்து முன்வைக்கும் ஓர் அத்தியாயமும் உள்ளடக்கப்படலாம்.

அத்தகையதோர் அத்தியாயம் நூலுக்கான அறிமுக அத்தியாயமாக அமைவது பொருத்தமானதாகும். ஏனெனில், இஸ்லாமிய வரலாற்றில் பல சமூக அரசியல் எண்ணக்கருக்களுக்கு முன்வைக்கப்பட்ட விளக்கங்களும் பார்வைகளும் அவ்வக்கால சமூக, அரசியல் ஒழுங்குகளை முன்வைத்து கொடுக்கப்பட்டவையாகும்.

உதாரணமாக, உலகை 'தார்' என்ற கண்ணோக்கில் மதிப்பீடு செய்யும் எண்ணக்கருவாக இருக்கலாம். அதே போன்று இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நிலப் பிராந்தியங்களில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களை 'திம்மிக்கள்' என்ற பிரயோகத்தினூடாக அடையாளப்படுத்துவதாக இருக்கலாம். அதனோடிணைந்த வகையில், ஜிஸ்யா என்ற பதப் பிரயோகத்தையும் சுட்டிக் காட்ட முடியும்.

மேலும், இஸ்லாமிய பாரம்பரிய இலக்கியங்களில் ஆயுதப் போராட்டம் பற்றிய கருத்துகளைப் புரிந்து கொள்வதற்கு நவீனத்துவத்திற்கு முந்திய சூழலில் சாம்ராஜ்ஜிய உலக ஒழுங்கில் சமூகங்களது வெளியுறவுக் கொள்கை எவ்வாறு வடிவம் பெற்றிருந்தது என்பது பற்றிய அறிவு அடிப்படையாகும்.

இவை ஒவ்வொன்றும், அக்கால அரசியல் ஒழுங்கில் நீதியானதாகவும் சமத்துவத்தையும் சர்வதேச அமைதியையும் நிலைநாட்டக் கூடியதாகவும் அமைந்திருந்தன என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால், நவீன அரசியல் சிந்தனையின் ஒளியில் அக்கால சமூக- அரசியல் எண்ணக்கருக்களை புரிந்து கொள்ள முற்படும்போதுதான் பிழையான புரிதல்கள் ஏற்படுகின்றன.

எனவே, சமகால அரசியல் தத்துவம், கோட்பாட்டுப் பின்புலம் மற்றும் அதனடிப்படைகளை முன்னிறுத்தி நவீன இஸ்லாமிய சமூக- அரசியல் எண்ணக்கருக்களை முன்வைப்பதற்கான தேவை இங்குதான் எழுகிறது.  இந்த விடயத்தை வலிறுத்தும் வகையில் ஓர் அத்தியாயம் உள்ளடக்கப்படுவது நூலின் உரையாடலை ஆழமாக புரிந்து கொள்வதற்கு உதவி செய்யலாம்.

இரண்டாவது, இந்நூல் தேசிய விவாதத்தை வேண்டி நிற்கும் குறிப்புகளை உள்ளடக்கியிருக்கிறது. எனவே, அவை ஏனைய சகோதர மொழிகளிலும் உரையாடலுக்காக முன்வைக்கப்பட வேண்டும். அப்படியொரு தளத்திற்கு நூலை நகர்த்திச் செல்வதாக இருந்தால் “பிரஜைத்துவ சிந்தனையும் பல்லின சூழலில் தேசத்தைக் கட்டியெழுப்புதலும்- ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பு நூலினுடைய கருப்பொருளுக்கு பொருத்தமானதாக அமையலாம்.

அப்போது அதுவொரு மொழிபெயர்ப்பாக மட்டுமே அமையாமல் இலங்கையினுடைய சமூக- அரசியல் மற்றும் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப கருத்துகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு புதிய நூலாக அமைவதே சிறந்ததாகும்.

ஏனெனில், நூல் இறுதியாக வலியுறுத்துவது போன்று நற்பிரஜைத்துவ பண்பாடுகளை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத சமூகக் குழுக்களால் பல்லின சமூகமொன்றில் சுமுகமான சமூக வாழ்வை, பரஸ்பர ஒத்துழைப்பை யதார்த்தத்தில் சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாது.

எனவே, சிறுபான்மைச் சமூகங்கள் மட்டுமன்றி, நாட்டில் வாழும் சகல பிரஜைகளும் நற்பிரஜைத்துவத்தின் பண்பாடுகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அத்தகையதொரு பொதுவுரையாடலுக்கு இஸ்லாமிய கண்ணோக்கில் நின்று பங்களிப்புச் செய்யும் வகையில் அந்நூல் அமைவது வரவேற்கத்ததாகும்.