ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்

ரொஹான் குணரத்னவின் நூலும் சர்ச்சைகளும்

றிப்தி அலி

"ஈஸ்டர் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து ஐந்து இஸ்லாமிய அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையினை இலங்கை அரசாங்கம் நீக்கியதை மீள் பரீசிலனை செய்ய வேண்டும்.

இந்த தடை நீக்கம் ஒரு 'மோசமான தவறாகும்'. இது போன்று கடும்போக்கான இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மற்றும் புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்கக்கூடாது.

அடுத்த பத்தோ அல்லது இருபதோ வருடங்களில் இன்னுமொரு சஹ்ரானை உருவாக்க வேண்டும் என்றால் இஸ்லாமிய சமயத் தலைவர்கள் மீதான தடையினை நீக்குங்கள்.

இந்தியாவினைச் சேர்ந்த பி.ஜேயினாலேயே சஹ்ரான் மற்றும் நௌபர் ஆகியோர் அடிப்படைவாதிகளாக மாற்றப்பட்டனர். எல்லா சமயத்திலும் அடிப்படைவாதிகள் காணப்படுகின்றனர்.

இதனால், அடிப்படைவாதிகளை புனவர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இலங்கைக்கு மிக அவசியமாகும். இது இன்னும் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் நாம் மற்றுமொரு தாக்குதலை சந்திக்க வேண்டிவரும்".

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சர்வதேச பயங்கராவத நிபுணர் என தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் ரொஹான் குணரத்ன நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியே இதுவாகும்.

'இலங்கையின் உயிர்த்த ஞாயிறு படுகொலை: சர்வதேச சமூகத்திற்கான பாடங்கள்' எனும் தலைப்பில் அவர் எழுதிய நூல் கடந்த வெள்ளிக்கிழமை (28) கொழும்பு – 07 இலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்னம், முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, வசந்த கருணாகொட முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் காலஞ்சென்ற அமைச்சர் அலவி மௌலானாவின் புதல்வர் நகீப் மௌலான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் உரையாற்றும் போதே ரொஹான் குணரத்ன மேற்கணடவாறு குறிப்பிட்டார்.

ஜம்இய்யதுல் அன்சாரி சுன்னத்துல் முஹம்மதியா, அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் ஜமாஅத் மற்றும் யுனைட்டட் தௌஹீத் ஜமாஅத் ஆகிய இஸ்லாமிய அமைப்புக்கள் உட்பட 11 அமைப்புக்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2021.04.13ஆம் திகதி இலங்கையில் தடை செய்யப்பட்டது.

இத்தடைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அது மாத்திரமல்லாமல், குறித்த தடையினை நீக்குமாறு பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இக்கோரிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ச, அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் மேலே பெயர் குறிப்பிடப்பட்ட ஐந்து அமைப்புக்கள் மீதான தடையினை நிபந்தனைகளுடன் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

இதற்கமைய, குறித்த தடையினை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த வியாழக்கிழமை (27) பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை கேள்விக்குட்படுத்துவதற்கான அதிகாரத்தினை ரொஹான் குணரத்னவிற்கு வழங்கியது யார்?

அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களான வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய ராஜரட்னம் ஆகியோர் முன்னிலையிலேயே இவர் ஜனாதிபதியினை கேள்விக்குட்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

தடைசெய்யப்பட்ட 11 அமைப்புக்களில் மேற்படி ஐந்து அமைப்புக்களுக்கும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்பே பாதுகாப்பு அமைச்சு இந்த தடை நீக்கியுள்ளது. ஏனைய ஆறு அமைப்புக்கள் மீதான தடை தொடர்கின்றன.

மேற்படி குறித்த இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும் பல்வேறு வகையான நலன்புரித் திட்டங்களை பாரியளவில் முன்னெடுத்திருந்தனர். இதனால் நாட்டுக்குள் பாரியளவிலான அந்நியச் செலாவணிகள் கொண்டுவரப்பட்டன.

எனினும், குறித்த தடையினை அடுத்து இந்த அமைப்புக்களின் அனைத்து செயற்திட்டங்களும் நிறுத்தப்பட்டதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கத்தியாகியதுடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது சொல்லொண்ண துயரங்களையும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.

இதேவேளை, "குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம்" என நாட்டிலுள்ள முக்கிய சில முஸ்லிம் அமைப்புக்கள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியினை நேரடியாக சந்தித்து கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தன.

இக்கோரியினை நிராகரித்த அமைச்சர் அலி சப்ரி, குறித்த நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சுமார் 18 நிமிட உரையொன்றினை நிகழ்த்தினார்.

ரொஹான் குணரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் இஸ்லாம் மற்றும் அல்குர்ஆன் தொடர்பில் எடுத்துக் கூறவே இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அமைச்சர் அலி சப்ரி தன்னைச் சந்தித்த அமைப்புக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நூல் வெளியிட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கக்கூடாது என முஸ்லிம் அமைப்புக்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் குறித்த நூல் வெளியீட்டில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என்று ரொஹான் குணரத்ன  கூறுகின்ற அடிப்படைவாதிகளை புனவர்வாழ்வளிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உள்நாட்டில் ஏற்கனவே பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்த புனவர்வாழ்வளிப்பு செயற்திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த புனர்வாழ்வளிக்கும் திட்டம் அமுலுக்கு வருமானால் அதன் கீழ் அரசுக்கு எதிரான சகலரும் கைது செய்யப்பட்டு அடிப்படைவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படலாம் என இதனை எதிர்க்கும் தரப்புக்கள் நியாயமான காரணங்களை முன்வைக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட ரொஹான் குணரத்ன, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதியின் நடவடிக்கையினை ரொஹான் குணரத்ன கேள்விக்குட்படுத்தியுள்ளார். இதேவேளை, ரொஹான் குணரத்னவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய பிரச்சகரான பிஜே விசேட வீடியோவென்றினை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கருத்து வெளியிடுகையில்,

"அப்துர் ராசீகின் ஊடாக தன்னை தொடர்புகொண்ட ரொஹான் குணரத்ன வுடன் சுமார் இரண்டரை மணி நேர கலந்துரையாடலொன்றை இணை வழியாக மேற்கொண்டேன்.

இதன்போது பயங்கரவாதம் தொடர்பில் அவரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பூரண விளக்கம் வழங்கினேன். இந்த கலந்துரையாடலை அடுத்து, அப்துர் ரசீகிற்கு ரொஹான் குணரத்ன அனுப்பிய வட்ஸ்அப் தகவலில் PJ is a practical leader எனக் குறிப்பிட்டிருந்தார்" என்றார்.

இப்படி பிஜேயினை அன்று புகழந்த ரொஹான் குணரத்ன, இன்று பிஜேயினை விமர்சிக்கின்றமை எதற்காக எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரொஹான் குணரத்னவின் நூலில் அடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நிபுணர்கள் அடங்கியுள்ள குழுவினர் வாசித்து சமூகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான பதில்கள் வழங்கப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூகம் மீது அவர் கொண்டுள்ள தப்பபிப்ராயங்கள் நீக்கப்பட வேண்டும்.