கனேடியப் பிரதமரின் தமிழ் இனப்படுகொலை நினைவு தின கருத்தை இலங்கை நிராகரிப்பு

கனேடியப் பிரதமரின் தமிழ் இனப்படுகொலை நினைவு தின கருத்தை இலங்கை நிராகரிப்பு

கனேடியப் பிரதமரின் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் தொடர்பான கருத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜூலை 23ஆந் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் தொடர்பாக மேற்கொண்ட குறிப்பை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு முற்றாக நிராகரிக்கின்றது.

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்தும் குறிப்பிடுவதானது, உள்நாட்டு வாக்கு வங்கித் தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டதாக அமைவதுடன், இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்ததாக மாட்டாது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட சமூகங்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடா மற்றும் அதன் தலைவர்களை இலங்கை கேட்டுக்கொள்கின்றது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.