தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு 9.5 கோடி ரூபா செலவு; 5 வருடங்களுடன் ஒப்பிடுகையில் அதிக நிதி
றிப்தி அலி
நாடு பாரிய பொருளாதார நெருடிக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்ற 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்விற்கு 9 கோடி 47 இலட்சத்து 65 ஆயிரத்து 564 ரூபா மற்றும் 75 சதம் செலவளிக்கப்பட்டுள்ள விடயம் தகவல் அறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் இந்த வருட நிகழ்விற்கே அதிக நிதி செலவளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மிகப் பிரமாண்டமான முறையில் இந்த வருடம் நடத்தப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வினை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஏற்பாட்டு செய்திருந்தது.
இதற்காக செலவளிக்கப்பட்ட நிதித் தொகை தொடர்பில் இராஜாங்க அமைச்சிற்கு கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி தகவல் அறியும் விண்ணப்பமொன்று சமர்பிக்கப்பட்டது.
உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் தகவல் அதிகாரியான நிர்வாகப் பிரிவிற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் பீ.எஸ்.பி. அபேயவர்த்தனவினால் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதி வழங்கப்பட்ட பதிலிலேயே இந்த விடயம் தெரியவந்தது.
இதில் மேடை அமைத்தல், கொடிக் கம்பங்கள் விநியோகம் மற்றும் செஞ்கம்பளம் விநியோகத்துக்காக அரச தொழிற்சாலைகள் திணைக்களத்திற்கு 3 கோடி 76 இலட்சத்து 29 ஆயிரத்து 900 ரூபாவும், கலாச்சார கண்காட்சி நடைபவணியை நடத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு 1 கோடி 90 இலட்சத்து 6 ஆயிரத்து 640 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக நடமாடும் மலசலகூடத்திற்காக 1 கோடி 52 இலட்சத்து 96 ஆயிரத்து 358 ரூபாவும், விருந்தோம்பலிற்காக 29 இலட்சத்து 36 ஆயிரத்து 321 ரூபா மற்றும் 70 சதமும், டிஜிட்டல் திரைக்காக 16 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவும் செலவளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்தது.
அத்துடன், தேசிய சுதந்திர தின நிகழ்விற்கு தேவையான மின்சார வசதிக்காக 1 கோடி 11 இலட்சத்து 5 ஆயிரத்து 412 ரூபா மற்றும் 11 சதமும், நீர் வசதிக்காக 21 இலட்சத்து 64 ஆயிரத்து 594 ரூபாவும், 64 சதமும் ஒலிபெருக்கி முறைமைகள் மற்றும் கதிரைகளுக்காக 25 இலட்சத்து 34 ஆயிரத்து 648 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)