காந்தார பௌத்த நாகரீகம் பௌத்த மத சுற்றுலாவிற்கு உகந்த இடமாகும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
பாகிஸ்தானில் உள்ள காந்தார பெளத்த நாகரீகம் இலங்கையர்களின் பௌத்த மத சுற்றுலாவிற்கு சிறந்த இடமாகும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ரோயல் கல்லூரி பெளத்த சகோதரத்துவத்தின் தலைமை ஆலோசகர் கவரகிரியே பிரேமதான தேரர் ஆகியோர் இணைந்து அண்மையில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த வருடம் இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழுவின், தனது மறக்க முடியாத அனுபவத்தை நினைவுகூர்ந்த ஆனந்த தேரர், பெளத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் முயற்சிகளை சுட்டிக் காட்டியதோடு, இலங்கை பெளத்த பயணிகளுக்கு ஒரு புதிய, தனித்துவமான இடமாக பாகிஸ்தான் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் மற்ற மதங்களுக்கு இடமில்லை என்று தான் முன்பு நினைத்ததாகவும், தனது பாகிஸ்தான் விஜயமானது, பாகிஸ்தான் குறித்த தனது கருத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டதாகவும் தேரர் குறிப்பிட்டார்.
"பாகிஸ்தான் மக்கள் மிகவும் விருந்தோம்பல் மற்றும் மற்ற மதங்களை மதிக்கக் கூடியவர்கள். மேலும் அவர்கள் மற்ற மதங்களைப் பின்பற்றுவோரை அவர்களது மதங்களை சுதந்திரமாக கடைப்பிடிக்க அனுமதி வழங்குகிறார்கள்" என்றும், பாகிஸ்தானில் கடந்து சென்ற ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலிருந்தும் பௌத்த பிக்குகள் பெற்ற வரவேற்பை நினைவுகூர்ந்தார்.
பெளத்த மதகுருமார்கள், பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்திக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
ரோயல் கல்லூரி பெளத்த சகோதரத்துவத்தின் தலைமை ஆலோசகர் கவரகிரியே பிரேமதான தேரர் கருத்துத் தெரிவிக்கையில்,
"தொன்றுதொட்டு, பாகிஸ்தானும் நமது நாடான இலங்கையும் ஒரு சுமூகமான உறவை அனுபவித்து வருகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இரு நாடுகளும் ஆசிய நாடுகளாக இருப்பதால், நாம் வளமான மரபுகள் மற்றும் கலாச்சாரத்தால் பிணைக்கப்பட்டுள்ளோம்.
அதன்படி, புத்த மதமும் இஸ்லாமும் மனிதகுலத்திற்கு ஒரு பாரிய சேவையை செய்துள்ளன. பாகிஸ்தானின் புகழ்பெற்ற காந்தார நாகரீகம் மற்றும் புத்தரின் மிகவும் புனிதமான நினைவுச் சின்னங்கள் சிலவற்றின் பெருமைமிக்க பாதுகாவலராக பாகிஸ்தான் இருப்பது, இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கான பௌத்தமத யாத்திரைகளை ஊக்குவிப்பதற்கான பெரும் வாய்ப்பினை வழங்குகிறது.
காந்தாரப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் பல் நினைவுச் சின்னங்களில் ஒன்று பாகிஸ்தானில் உள்ள தக்ஸிலா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
கி.பி 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 7ஆம் நூற்றாண்டு வரை காந்தார பெளத்த நாகரிகம் அதன் மகிமையின் உச்சத்தை அடைந்த பகுதி இது. மேலும், உலகின் பழமையான புத்த பல்கலைக்கழகமான பாகிஸ்தானில் உள்ள தக்ஸிலா, 12 ஆம் நூற்றாண்டின் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் புனிதமான புத்த கலைப்பொருட்கள் சிலவற்றில் தாயகமாக உள்ளது.
அது தவிர, அனுராதபுரத்தில் உள்ள போதி மரத்தின் மரக்கன்று ஒன்று இலங்கை அரசாங்கத்தால் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும் இது தக்ஸிலா அருங்காட்சியகத்தின் தோட்டங்களில் வளர்கிறது.
உலகெங்கிலும் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களுக்கும் பாகிஸ்தானானது பாதுகாப்பான மற்றும் திறந்த ஒரு நாடு என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.
மேலும், பாகிஸ்தானும் இலங்கையும் கடந்த காலத்தின் மிகவும் கவர்ச்சியான பெளத்த நாகரிகங்களில் ஒன்றான, வளமான மத பாரம்பரியத்தை கொண்ட பாகிஸ்தானின் பெளத்த மததளங்களை ஊக்குவிக்க ஒரு பணிக்குழுவை அமைக்க தீர்மானம் கொண்டுள்ளன என்பதையும் நான் அறிவேன்.
இலங்கை எப்போதும் நபிகள் நாயகம் போதித்த உண்மையான இஸ்லாத்தின் வழியில் நின்றது என்றும் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இஸ்லாத்தின் மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர் மற்றும் நபிகள் நாயகத்தை மிகவும் நேசிக்க கூடியவர்.
பாகிஸ்தான் பிரதமரது தொலைநோக்கும், நம்நாட்டு தலைவர்களின் தொலைநோக்கும் கைகோர்த்து இந் நாடுகளை வாழ்வதற்கான சிறந்த இடங்களாக மாற்றி வருகின்றன.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து, அங்கு அமைதியும் நல்லிணக்கமும் எவ்வாறு மேலோங்கி நிற்கிறது என்பதையும், மிக முக்கியமாக புத்த மதத்திற்கு கொடுக்கப்பட்ட அந்தஸ்தையும் தாங்களே பார்க்க வேண்டும் என்றும் நமது இலங்கை மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
அண்மையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து தயாரித்த பாகிஸ்தானில் உள்ள காந்தார நாகரிகம் பற்றிய ஆவணப்படம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"காந்தார" என்ற தலைப்பிலான இந்த ஆவணப்படம், இலங்கை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சின் உதவியுடன், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கையின் சித்திவிநாயகர் சினி ஆர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றால் கூட்டாக தயாரிக்கப்பட்டது.
இவ் ஆவணப்படமானது, பாகிஸ்தானின் காந்தார புத்த பாரம்பரிய தளங்களின் காட்சி பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)