கட்டுக்கதைகளால் தடுப்பூசி ஏற்றத் தயங்கும் இளைஞர்கள்!
-எம்.பி.எம்.பைறூஸ்-
“உலகம் முழுவதும் 3.4 பில்லியன் மக்களுக்கு இதுவரை 6 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி பற்றி இன்னமும் சந்தேகம் கொண்டுள்ளவர்களே, உங்களுக்கு நான் கூற விரும்புவது யாதெனில், உலகின் சனத்தொகையில் அரைவாசிப் பேர் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆக, தடுப்பூசி பாதுகாப்பானது என்பதுதான்”
-பிரௌன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அஷீஷ் கே ஜா-
கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உலகெங்கும் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் 30.05.2021 வரை 11,730,305 பேர் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் கூறுகின்றன. இது மொத்த சனத்தொகையில் 54 வீதமாகும்.
இவ்வருடம் ஜனவரி மாத இறுதியில் இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சுகாதாரத் துறையினர், முப்படையினர், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர், 30 வயதுக்கு மேற்பட்டோர் என்ற ரீதியில் கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2021 செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஏனைய தொகுதியினருடன் ஒப்பிடுகையில் இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் ஆர்வமின்மையை அவதானிக்க முடிவதாக சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.
கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன, “இளைஞர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதற்கு தடுப்பூசி ஏற்றினால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சமூக ஊடகங்கள் வழியாக பரவியுள்ள தவறான தகவல்களே காரணம் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத், 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்ற பின்வாங்குவதானது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"நிரூபிக்க முடியாத பல்வேறு கதைகள் பரப்பப்பட்டுள்ளன. தடுப்பூசி ஏற்றுவது ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் என்பது அவற்றில் ஒன்றாகும். இதனைச் சரி என நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை.
இளம் சமூகத்தினர் தம்மைப் பாதுகாப்பதற்காக மாத்திரமன்றி, வீட்டிலுள்ள வயோதிபர்கள், நோயாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள முன்வர வேண்டும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொவிட் 19 தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதலே அது தொடர்பான ஏராளமான போலிச் செய்திகளும் பரவ ஆரம்பித்துவிட்டன. “எமது பொது எதிரி கொவிட்-19. ஆனால் அது பற்றி அதிகம் பகிரப்படும் போலியான தகவல்களும் எமது எதிரிதான் என்பதை மறந்துவிடக் கூடாது” என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்த கருத்தும் “நாம் கொவிட் 19 வைரஸ் பரவலுடன் மாத்திரம் போராடவில்லை. போலியான தகவல் பரிமாற்றங்களுக்கு எதிராகவும் தான் போராடிக் கொண்டிருக்கிறோம்” என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் தெட்ரொஸ் அதானொம் தெரிவித்த கருத்தும் இதன் பாரதூரத்தை உணர்த்துவதாகும்.
கொவிட் 19 முடக்க காலத்திலும் உலக நாடுகளைப் போன்றே இலங்கையிலும் போலிச் செய்திகளின் பரவல் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கதாகும். We are social நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாத புள்ளிவிபரங்களின் படி இலங்கையில் 7.90 மில்லியன் சமூக வலைத்தள பாவனையாளர்கள் இருக்கிறார்கள்.
இலங்கையின் சனத்தொகையை விடவும் 10 மில்லியன் அதிகமான சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான கையடக்கத் தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனை அதிகரிப்பானது இலங்கையில் போலிச் செய்திகள் வேகமாக பரவலடையவும் குறுகிய நேரத்தில் பெருந்திரளான மக்களைச் சென்றடையவும் காரணமாக அமைந்துள்ளன.
இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் அதிகம் பிரபல்யமான சமூக வலைத்தளம் பேஸ்புக் ஆகும். ஆகஸ்ட் 2021 கணிப்பீட்டின்படி, இலங்கையில் 8.4 மில்லியன் பேஸ்புக் பயனர்கள் உள்ளனர்.
இவர்களில் 18 முதல் 34 வயதுக்கிடைப்பட்டவர்கள் 5 மில்லியன் பேர் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். இதுவே இளம் சமூகத்தினர் மத்தியில் அதிகம் போலித் தகவல்கள் சென்றடையக் காரணம் என்பதை இந்த புள்ளிவிபரங்கள் நமக்கு தெளிவாக காண்பிக்கின்றன.
இலங்கையைப் பொறுத்த வரை சுகாதார, மருத்துவ ஆலோசனைகள் எனும் போர்வையில் பரப்பப்படும் போலிச் செய்திகளை நம்பிப் பின்பற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் பேஸ்புக் மூலமாக பகிரப்பட்ட போலியான தகவலை நம்பி, Gaja Madara எனப்படும் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட குடிபானத்தை அருந்திய கம்பஹாவைச் சேர்ந்த 36 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையானது, இலங்கையில் போலிச் செய்திகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்த்துவதாக உள்ளது.
இப்பின்னணியில்தான் தடுப்பூசி தொடர்பான போலிச் செய்திகளும் இன்று சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதன் விளைவே இளைஞர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் பின்வாங்குவதாகும்.
"கொழும்பு மாநகர எல்லைக்குள் தடுப்பூசி பெறத் தகுதியான சுமார் 97 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வசிக்கின்றனர். எனினும் இவர்களில் 20 வீதமானோர் மாத்திரமே இதுவரை தடுப்பூசி ஏற்றிக் கொண்டுள்ளனர்” என கொழும்பு மாநகர சபை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி குறிப்பிடுகிறார்.
இந்த தரவும் இளைஞர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் பின்வாங்குகின்றனர் என்பதை தெளிவாக காண்பிக்கிறது. இதனிடையே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மாளவிகே இது தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
“கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளுக்கமை 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதில் பின்வாங்குகின்றனர். இதற்குக் காரணம் தடுப்பூசிகள் கருவுறுவதைப் பாதிக்கும் அல்லது ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும் என சமூக வலைத்தளங்கள் வழியாக பரவியுள்ள கட்டுக்கதைகளை நம்பியுள்ளமையே ஆகும்.
கொவிட் 19 தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்மைக்குறைபாடு அதிகரிப்பதற்கான ஆபத்து உள்ளதாக சிறு ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி மூலம் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்பதற்கான எதுவித ஆதாரங்களும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை” என அவர் குறிப்பிடுகிறார்.
இளம் சமுதாயத்தினர் மத்தியில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள் அவர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளமை உண்மையே என பேராதனை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் பேராசிரியர் பஸீஹா நூர்தீன் குறிப்பிடுகிறார்.
"தடுப்பூசி மூலம் ஆண்மைக்குறைபாடு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்கான எந்தவித ஆதாரங்களும் இதுவரை ஆய்வு ரீதியாக நிறுவப்படாத நிலையில் அது பற்றி வீணான தகவல்களைப் பரப்புவதை சகலரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்க முடியாது என்ற கருதுகோளும் இளைஞர்கள் தடுப்பூசி ஏற்ற பின்வாங்குவதற்கு மற்றொரு காரணம் என குறிப்பிடும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத், எனினும் எந்தவொரு நாடும் அவ்வாறான எந்தவித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
வெளிநாடு செல்லவுள்ள இளைஞர்கள் தமக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் வகைகள் குறித்து அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான்ன குறிப்பிடுகிறார்.
இளைஞர்களை விழிப்புணர்வூட்டுவதன் அவசியம்
இவ்வாறான கட்டுக்கதைகள் அரசாங்கத்தின் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெகுவாகப் பாதித்துள்ள நிலையில், இது குறித்து மக்களை குறிப்பாக இளம் சமுதாயத்தை விழிப்புணர்வூட்டுவதற்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஓக்டோபர் மாத இறுதிக்குள் 20 முதல் 29 வயதுக்கிடைப்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கி முடிப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. எனினும் இளம் சமுதாயத்தின் ஒத்துழைப்பு முழமையாகக் கிடைக்காத நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் இந்த இலக்கை எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.
இளைஞர்களை விழிப்புணர்வூட்டுவதாயின் பாரம்பரிய வழிமுறைகளைத் தவிர்த்து அவர்களைக் கவரும் வகையில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக போலிச் செய்திகள் மூலம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் தப்பபிப்பிராயங்களை நீக்க நடவடிக்கை எடுப்பதே வெற்றியளிக்கும்.
பிரித்தானியாவிலும் இவ்வாறு இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான போலிச் செய்திகளின் தாக்கம் கண்டறியப்பட்டதையடுத்து, பிரித்தானிய அரசாங்கம் பி.பி.சி. வலையமைப்புடன் இணைந்து பாரிய வழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்றை நடாத்தியது.
இதன் மூலம் இளைஞர்களை தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன்பால் ஊக்குவிக்க முடிந்தது. அத்துடன் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான யூடியூப், ஸ்நாப்சட், ரெட்டிட், மற்றும் டிக் டொக் போன்ற சமூக வலைத்தளங்களுடன் இணைந்து பிரித்தானிய அரசாங்கமும் அந்நாட்டு தேசிய சுகாதார சேவையும் இணைந்து தடுப்பூசி தொடர்பில் திட்டமிட்ட பிரசாரங்களை முன்னெடுத்தன.
அதேபோன்று அமெரிக்காவின் பல நகரங்களும் தமது நகரில் வாழும் இளைஞர்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சந்தேகங்களை களையவும் சமூக வலைத்தளங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டங்களை வகுத்து அவற்றில் வெற்றி கண்டன.
சமூக வலைத்தளங்களில் செல்வாக்குச் செலுத்துபவர்களை இனங்கண்டு அவர்கள் மூலமாக திட்டமிட்ட விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சந்தேகங்கள் களையப்பட்டன. அவ்வாறான வேலைத்திட்டங்களே இலங்கைக்கும் அவசியமாகின்றன.
அந்த வகையில் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி முழு உலகிலும் இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபல்யம் பெற்றுள்ள ‘மெனிகே மகே ஹித்தே’ பாடலைப் பாடிய யொஹானி மூலமாக இளம் சமுதாயத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது வரவேற்கத்தக்க நகர்வாகும். இந்த வேலைத்திட்டம் வெறுமனே ஒரு களிப்பூட்டலாக மாத்திரமன்றி இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவியுள்ள தடுப்பூசி தொடர்பான போலிச் செய்திகளுக்கு ஆதாரபூர்வமான தெளிவுகளை வழங்குவதாகவும் அமைதல் வேண்டும். அதன் மூலமே அடுத்த மாத இறுதிக்குள் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த இளவயதினருக்கும் தடுப்பூசியை வழங்குவதை சாத்தியப்படுத்த முடியும்.
சுகாதார பணியகம் - பேஸ் புக் நிறுவனம் இணைவு
தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்¬களில் பகிரப்படுகின்ற நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்தவும் அது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டவும் பேஸ்புக் நிறுவனமும் சுகாதார மேம்பாட்டுப் பணியகமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய "கொவிட் 19 சம்பந்தமான தவறான தகவல்களுக்கு எதிராக போராட ஆறு குறிப்புகள்" எனும் தலைப்பிலான விழிப்பூட்டல் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அவையாவன:
1.வெறுமனே ஒரு தலைப்பை மட்டுமல்லாது, முழுக் கதையையும் அறிந்து கொள்ளுங்கள்.
2.ஒரு நம்பகரமான ஆதாரமே உங்கள் பாதுகாப்பான தெரிவாகும் .
3.வதந்திகளை அல்லாது, உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4.நம்பகரமான ஆதாரங்களிலிருந்து முழுமையான பின்னணியையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்
5.ஒரு தவறான கதை ஒரு நண்பரினால் அல்லது குடும்ப அங்கத்தவரினால் பகிரப்பட்டிருந்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு உண்மையைத் தெளிவுபடுத்துங்கள்
6. உங்கள் உணர்வுகளை ஆராய்ந்து பாருங்கள் ஆழமாகச் சிந்தியுங்கள் எனும் 6 வழிகாட்டல்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கையில் கொவிட்-19 தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை சுகாதார அமைச்சும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் மாத்திரமே வெளியிடுகிறது. இதன் சமூக வலைத்தள பக்கங்களில் மூன்று மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
அவற்றைப் பின் தொடர்வதன் மூலம் கொவிட் 19 தொடர்பான நம்பகமான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பிரித்தறியக் கூடியதாக இருக்கும் என்பது திண்ணம்.
Comments (0)
Facebook Comments (0)