சீன ஜனாதிபதியிடம் நற்சான்றிதழைக் கையளித்தார் பாலித கொஹொன
சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கொஹொன ஏப்ரல் 14ஆந் திகதி மக்கள் சீனக் குடியரசின் தலைவரான ஸி ஜின்பிங்கிடம் தனது நற்சான்றிதழ்களைக் கையளித்தார்.
முன்னாள் தூதுவரை திரும்ப அழைக்கும் கடிதத்தையும் அவர் முறையாகக் கையளித்தார். நற்சான்றிதழ்களைக் கையளிப்பதன் மூலம், கலாநிதி கொஹொன சீனாவிற்கான இலங்கைத் தூதுவராக முறையாக சீனாவின் அரச தலைவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
கொவிட்-19 அச்சுறுத்தலை பாரியளவில் சீனா சமாளித்திருப்பினும் கூட, புதிய வடிவிலான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நற்சான்றிதழை கையளிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.
30 தூதுவர்களும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியும் சம்பிரதாயபூர்வமாக அரச விருந்தினர் மாளிகையிலிருந்து மக்கள் அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், நற்சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னர் அவர்களுக்கு அங்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
நற்சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களுக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி ஸி ஜின்பிங், "தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களில் நட்பு நாடுகள் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும் சீனா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகக்" குறிப்பிட்டார்.
"80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் சீனா தடுப்பூசிகள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது. ஐ.நா. வை மையமாகக் கொண்ட பல்தரப்பு அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய வர்த்தக முறைமை ஆகியவற்றை சீனா ஆதரிக்கும். 14வது ஐந்தாண்டுத் திட்டம் சீனாவை நவீன சோசலிச நாடாக மாற்றியடைக்கும். நட்பு மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் சீனா தனது உறவுகளை முன்னெடுக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது உரையைத் தொடர்ந்து, ஜனாதிபதியுடனான தூதுர்களின் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டது. முன்னதாக 2020 டிசம்பர் மாத நடுப்பகுதியில், சீன மக்கள் குடியரசிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி கொஹொன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)