முதற் தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள்
சுதந்திர இலங்கையின் 17 ஆவது பாராளுமன்றத் தேர்தல் அல்லது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்று முடிந்தது.
இதன்படி புதிய பாராளுமன்றத்தில் நேரடியாக வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படும் 196 பேரில் 138 புதிய முகங்கள் இந்த பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளனர். இவர்களில் ஒன்பது பேர் முஸ்லிம்களாவர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் 7 புதிய முகங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒருவருமாக நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தி இன்னுமொரு புது முகத்திற்கு தேசியப்பட்டியல் வழங்கியிருக்கிறது. இதனிடையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சிக்கு நேரடியாக கிடைத்த தேசியப்பட்டியலை இன்னும் பகிர்ந்தளிக்கவில்லை.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு தலா ஒவ்வொரு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வரை இறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படையில் தெரிவாகியிருக்கும் முஸ்லிம் புதுமுகங்கள் பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பை இங்கு பார்க்கலாம்.
தொகுப்பு: றிப்தி அலி
மெளலவி முனீர் முழப்பர்:
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம மற்றும் மீயெல்லை பிரதேசங்களில் வாழ்ந்த இவர், வெலிகம அரபா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் மீயெல்ல அல் – மினா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
மினுவாங்கொடையினைச் சேர்ந்த ஆசிரியையினை திருமணம் செய்துள்ள மௌலவி முழப்பர், தற்போது திஹாரியில் வசித்து வருகின்றார். இவர், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் தனது உயர் கல்வியினை நிறைவுசெய்துள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழத்தின் கலைப் பட்டதாரியுமாவார்.
சமூக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காக பல்வேறு செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் இவர் மேற்கொண்டு வருவதுடன், “திறந்த பள்ளிவாசல்” எனும் செயற்திட்டத்தின் பிரதான வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மக்கள் விடுதலை முன்னணியின் “நாம் மனிதர்கள்” அமைப்புடன் இணைந்து பணியாற்றி வரும் இவர், தேசிய மக்கள் சக்தியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவர். அத்துடன் அக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார்.
இன நல்லிணக்கம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக ஒழிப்பு தொடர்பான பல சர்வதேச மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளார். அரபு, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவர் புலமைபெற்றுள்ளார்.
சுமார் 5 சதவீத முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து மேற்பட்ட விருப்பு வாக்குகளை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்கம் இல்யாஸ்:
மாத்தறை மாவட்டத்தின் வெலிகமையினை பிறப்பிடமாகக் கொண்ட அர்கம் இல்யாஸ், மாத்தறை இல்மா முஸ்லிம் வித்தியாலயம், ராகுல வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடப் பொறியியலாளரான இவர், கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றி நாடளாவிய ரீதியில் 110 ஆவது இடத்தினைப் பெற்றார்.
வெலிகம பிரதேசத்திலுள்ள பல சிவில் மற்றும் சமூக அமைப்புக்களுடன் இணைந்து இவர் பணியாற்றி வருகின்றார். மௌலவி முனீர் முழப்பரின் அழைப்பிற்கமைய கடந்த 2022ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தியில் இணைந்த இவர், அந்த ஆண்டு வேட்புமனுக் கோரப்பட்ட வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கினார்.
50,000க்கும் குறைவான முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட மாத்தறை மாவட்டத்தில் 53,000க்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற இவர், தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட விருப்பு வாக்குப்பட்டியலில் 4ஆம் இடத்தினை பிடித்துள்ளார்.
எம்.ஜே.எம்.பைசல்:
புத்தளம், வீரதோடை கிராமத்தினை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கணித பாட ஆசிரியராவார். வீரதோடை முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால செயற்பாட்டாளராவார்.
சாதாரண குடும்பத்தினைச் சேர்ந்த இவர், நீண்ட காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். புத்தளம் மாவட்டத்திலுள்ள சர்வமத அமைப்புக்களுடன் இவர் பணியாற்றி வருகின்றார். அத்துடன் வீரத்தோடை பிரதேசத்தில் இவர் ஒரு பிரபலமான கணித பாட ஆசிரியருமாவார்.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் காலத்திலிருந்து இக்கட்சியுடன் நெருங்கி பணியாற்றி வருகின்றார். இரண்டு பிரதேச சபை தேர்தல்களிலும் இரண்டு பாராளுமன்ற தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல் ஊடாகவே முதற் தடவையாக மக்கள் பிரதிநிதியாக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமாவார். சுமார் 35 வருடங்களின் பின்னர் புத்தளம் மாவட்டத்திலிருந்து ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
எம்.எஸ். உதுமாலெப்பை:
அட்டாளைச்சேனையினை சேர்ந்த இவர், 1987ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அப்போதைய தலைவர் அஷ்ரபின் ஊடாக நேரடி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய முஸ்லிம் கட்சி தலைவர்களுடன் இவர் மிகவும் நெருங்கிச் செயற்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரதி தவிசாளர், கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை இவர் வகித்துள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சராக அதிகூடிய காலம் பணியாற்றிய பெருமை இவரையே சாரும். கிழக்கு மாகாணத்தின் பதில் முதலமைச்சராக இவர் ஆறு தடவைகள் பணியாற்றியுள்ளதுடன் மாகாண அமைச்சரவையின் பேச்சாளராகவும் செயற்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட காலப் பகுதியில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளராக செயற்படும் இவர், முதற் தடவையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
எம்.கே.எம். அஸ்லம்:
குருநாகல் மாவட்டத்தின் தல்கஸ்பிட்டியினை சேர்ந்த இவர், பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றில் சட்டமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார். தல்கஸ்பிட்டி அல் அஷ்ரக் மகா வித்தியாலயம், சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை, மாவனெல்ல சாஹிராக் கல்லூரி மற்றும் பறகஹதெனிய தேசியப் பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தொழிலதிபரான இவர், கடந்த 25 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன் கடந்த 15 வருடங்களாக மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.
அக்கட்சியின் தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் குழு உறுப்பினராகவும் தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட செயற்குழுவின் உறுப்பினராகவும் இவர் செயற்பட்டு வருகின்றார்.
ஏ.எச்.எம்.அலவிக்கு (1994 – 2000) பின்னர் குருநாகல் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவரேயாவார். குருநாகல் மாவட்டத்தில் கடந்த 24 வருடங்களாக வெற்றிடமாகக் காணப்பட்டு வந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இவரின் வெற்றியின் மூலம் பூரணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அஷ்ரப் தாஹீர்:
நிந்தவூரினைச் சேர்ந்த இவர், பிரபல தொழிலதிபராவார். தனது 15ஆவது வயதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போராளியாக இணைந்த இவர் சுமார் 25 வருடங்களாக அக்கட்சியின் உறுப்பினராக செயற்பட்டார். பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்த இவர், அக்கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளராகவும், அரசியல் அதிகார சபை உறுப்பினராகவும் தற்போது செயற்படுகின்றார்.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக மூன்று தடவைகள் இவர் செயற்பட்டுள்ளார். இக்காலப் பகுதியில் பல அபிவிருத்திப் பணிகள் இவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதற் தடவையாக பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டுள்ள இவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இரண்டாம் நிலையினைப் பெற்றார்.
றியாஸ் பாறூக்:
அக்குறணையினைச் சேர்ந்த இவர், அக்குறணை அஸ்ஹர் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். தொழிலதிபரான இவர், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் – மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால உறுப்பினருமாவார்.
பாராளுமன்றத் தேர்தலில் நான்காவது தடவையாக போட்டியிட்ட சமயத்திலேயே இவர் வெற்றி பெற்றுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஹரிஸ்பத்துவ அமைப்பாளராக செயற்படும் இவர், தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினருமாவார்.
பஸ்மின் ஷெரீன்:
கல்ஹின்னையினை பிறப்பிடமாகவும் கம்பளையினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தொழிலதிபராவார். கம்பளை பிரதேசத்திலுள்ள பல சமூக சேவை அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், முதற் தடவையாக இந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கல்ஹின்ன அல் மனார் கல்லூரியின் பழைய மாணவரான இவர், கடந்த இரண்டு வருடங்களாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து முழு நேரமாக பணியாற்றி வருகின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் கம்பளை தொகுதி அமைப்பாளர் குழுவின் உறுப்பினருமாவார்.
டாக்டர் றிஸ்வி சாலி:
காலி, ஹிரும்புரவினை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், கடந்த 38 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகின்றார். நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றியுள்ளார்.
மருதானையிலுள்ள கலீல் தனியார் வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக வைத்தியராக இவர் பணியாற்றி வருகின்றார். தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான இவர், பாராளுமன்றத் தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட போதே வெற்றி பெற்றுள்ளார்.
ஏ. ஆதம்பாவா:
சாய்ந்தமருதினைச் சேர்ந்த இவர், கல்முனை ஸாஹிராக் கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல் – ஜலால் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவராவார். இவர், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பட்டதாரியாவார்.
அமைச்சர்களான சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதாச ஆகியோர் இவருடைய பல்கலைக்கழக சம வருட நண்பர்கள். பல்கலைக்கழக காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட்ட இவர், இக்கட்சியின் ஆதரவுடன் 1998ஆம் ஆண்டு கிழக்கு மாகாண வேலையற்ற பட்டாரிகள் அமைப்பினை உருவாக்கி அதன் தலைவராக செயற்பட்டார்.
உயிரியல் பாட ஆசிரியராக அரச தொழிலில் இணைந்த இவர், தேசிய ரீதியாக பல வைத்தியர்களை உருவாக்கியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர், அக்கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமாவார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நேரடி அரசியலுக்குள் நுழைந்த இவர், தேசிய மக்கள் சக்தியினை அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கட்டியெழுப்புவதற்காக தீவிரமாக பணியாற்றினார். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஒரே முஸ்லிம் இவரேயாவார்.
Comments (0)
Facebook Comments (0)