பொத்துவிலில் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு இடம்பெறுவதாக கருணா குற்றச்சாட்டு
எம்.எஸ்.சம்சுல் ஹுதா
ஜனாதிபதியின் ஒரு கிராம பிரதேச செயலகப் பிரிவிற்கு சத்திப்பொல வேலைத்திட்டத்தின் கீழ் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் 27 கிராம சேவகர் பிரிவில் வாராந்த சந்தை (சத்திப்பொல) அமைக்கப் பெறுவதற்கு எதிராக பொத்துவில் பிரதேச சபையின் சில உறுப்பினர்கள் உட்பட பொத்துவில் பிரதேச மக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
2020.02.07ம் திகதி பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் தலைமையில் இடம்பெற்ற விஷேட கூட்டத்தில் வாராந்த சந்தை அமைப்பு தொடர்பான பிரேரணை முன் வைக்கப்பட்டதுடன் அதில் பங்குபற்றிய 18 உறுப்பினர்களும் எவ்வித மறுப்பு தெரிவிக்கவில்லை.
பின்னர் இது தொடர்பான திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முறையான அனுமதி பெற்றப்பட்டு மதிப்பீட்டறிக்கை பொத்துவில் பிரதேச சபை தொழிநுட்ப உத்தியோகத்தரால் தயாரிக்கப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் குறித்த வேலைத்திட்டத்திற்கு எதிராக தற்போது பொத்துவில் பிரதேச தமிழ் மக்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபையின் 12 உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் பொத்துவில் தமிழ் மக்கள், பொத்துவில் முஹுது மகா விகாராதிபதி ஆகியேரால் முறைப்பாடு செய்யப்பட்டு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் 2020.05.12ம் திகதி இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் குறித்த வாராந்த சந்தை கட்டுமாணப்பணிகளை இடைநிறுத்துவதற்கான பிரரேணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு முன்னாள் பிரதி அமைச்சர் வினாயாகமூர்த்தி முரளிதரன் இன்று விஜயம் செய்தததுடன் குறித்த பிரச்சினை தொடர்பில் அப்பகுதி கோயில் நிருவாகத்தினர் மற்றும் தமிழ் மக்களிடம் கலந்துரையாடினார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"அதாவது, இது பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சிறிய பிரச்சினையாகும். ஆலையடிப் பிள்ளையாளர் கோயில் என்பது 1,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
இவ்வாலயத்தின் முன் முகப்பிற்கு முன்னால் பொத்துவில் பிரதேச சபையினால் ஒரு சந்தை நிர்மாணிக்கப்படுகின்றது. உண்மையில் இதுவொரு தேவையற்ற ஒரு சந்தையாகவே இப்பகுதி மக்கள் பார்ப்பதுடன் நானும் பார்க்கின்றேன்.
ஏனெனில் ஒரு கோவிலின் முன்னால் ஒரு சந்தை அமைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். இக்காணியானது ஏற்கனவே சிறுவர் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டதாகவும், கடந்த பிரதேச சபை ஆட்சியில் பதியப்பட்டதாகவும் இருக்கின்றது.
இருக்கின்ற போதும் தற்போதுள்ள பிரதேச சபை மக்களின் விருப்பை மீறி இவ்விடததில் சந்தையைக் கட்டுவது என்பது தேவையற்ற விடயமாகும். ஏனெனில் இவ்விடத்திலிருந்து 200 மீற்றரில் பொதுச் சந்தையுள்ளது.
இது திட்டமிட்ட ஒரு நில ஆக்கிரமிப்பாகவே நாங்கள் கருதுகின்றோம். இதனை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். இது ஏற்கனவே புனித பூமியாகவிருக்கின்ற இடம். இங்கு சந்தை அமைக்கின்ற போது குப்பைகள் வரும், தற்போது மரக்கறி வியாபாரம் செய்வதாக கூறுவார்கள்.
பின்னர் இறைச்சி, மீன் வியாபாரங்களை மேற்கொள்வீர்கள் எனவே இதனை இங்குள்ள எந்த தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் பொத்துவில் பிரதேச சபையின் சில உறுப்பினர்கள் கூட இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனையும் மீறித் தான் இன்று பிரதேச சபை இதனை கட்ட ஆரம்பித்துள்ளது. இவைகளை பார்க்கின்ற போது திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பாகவே உள்ளது. இது தொடர்பாக நான் உரிய அதிகாரிகளிடமோ அல்லது அதிமேதகு ஜனாதிபதியிடமோ கொண்டு சென்று தடுத்து நிறுத்துவோம்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)