நாளை வலய மட்ட பரீட்சை; மாணவர்களுக்கு இன்றே அறிவிப்பு
கல்முனை வலயத்திலுள்ள விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு வலய மட்ட ரீதியில் நாளை (07) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பரீட்சை தொடர்பிலான அறிவித்தல் மாணவர்களுக்கு இன்று (06) திங்கட்கிழமையே வழங்கப்பட்டுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோரொருவர் குற்றஞ்சாட்டினார்.
2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பரீட்சை என்றால் எவ்வாறு மாணவர்களை தயார் பண்ண முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
இப்பரீட்சை தொடர்பிலான அறிவித்தல் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் என். வரணியாவினால் கடந்த 3ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இப்பரீட்சைக்காக வேண்டி கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் உருவாக்கப்பட்ட வட்ஸ்அப் குழுமத்தில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமையே பதிவிடப்பட்டுள்ளது.
மாகாண கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கமைவாக பாடசாலை ஆராய்ச்சி வாரத்தினை முன்னிட்டு 2022ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையாக நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பரீட்சை 4ஆம் தவணை வரையான பாடத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாவவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் கல்முனையிலுள்ள பிரபல பாடசாலையொன்றினால் இப்பரீட்சை 4ஆம் தவணை பரீட்சையாக கருதப்படும் என வட்ஸ்அப் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்வி பணிப்பாளர் என். வரணியாவினை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது முடியவில்லை.
இவ்வாறான நிலையில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்தரனை தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவிய போது,
"இப்பரீட்சை ஒரு மாதிரிப் பரீட்சையாகுமே தவிர தவணைப் பரீட்சையல்ல. மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கில் இப்பரீட்சை நடத்தப்படுகின்றது. மட்டு. மாவட்ட கல்வி அலுவலத்தினால் நடத்தப்படும் பரீட்சையினை நாங்கள் எமது வலய மாணவர்களுக்கும் நடத்துகின்றோம். அத்துடன் இப்பரீட்சைக்குள் புள்ளிகள் கூட கணிப்பிடப்படமாட்டாது. இதனால் மாணவர்கள் இப்பரீட்சை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லலை.
இந்த பரீட்சை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் அதிபர்கள் மாணவர்களுக்கு அறிவிக்காமைக்கு வலயக் கல்வி அலுவலகம் பொறுப்பல்ல" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)