ஐந்து மாதங்களின் பின்னர் வியாழேந்திரனின் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
சுமார் ஐந்து மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் அமைச்சிற்கு புதிய செயலாளரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு அமைச்சின் புதிய செயலாளராக டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதியின் செயலாளரான கலாநிதி பி.வீ.ஜயசுந்தரவினால் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்று நோய் மற்றும் கொவிட்ட ஒழிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா செயற்பட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென அமைச்சர் வியாழேந்திரனின் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
புதிய அமைச்சரவை நியமனத்தின் போது ஊடக மேம்பாடு மற்றும் தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சராக எஸ். வியாழேந்திரன், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் 6ஆம் திகதி பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வரை குறித்த அமைச்சின் செயலாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றிடத்தினை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்ட டாக்டர் அமல் ஹர்ஷா டி சில்வா, சுகாதார சேவையில் 34 ஆண்டுகள் அனுபவமும், சுகாதார நிர்வாக சேவையில் 24 வருட அனுபவமும் கொண்டவராவார்.
பேரதெனியா பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்ற இவர் காலி கராபிட்டி போதனா வைத்தியசாலை மற்றும் பொரளை குழந்தைகள் போதானா வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளராகவும், மேல் மாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளராகவும், சுகாதார கல்வி பணியகத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பல பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)