முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் 9 மாடி கட்டிடத்தினை புத்தசாசன அமைச்சிற்கு கையளிக்க தீர்மானம்

முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் 9 மாடி கட்டிடத்தினை புத்தசாசன அமைச்சிற்கு கையளிக்க தீர்மானம்

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்காக தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற 9 மாடி கட்டிடத்தினை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சிற்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், நேற்று (09) திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – 10, டீ.ஆர் விஜயவர்த்தன மாவத்தையில் உள்ள இந்த 9 மாடிக் கட்டிடமே புத்தசாசன அமைச்சிற்கு வழங்கப்படவுள்ளது.

புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சு, அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் பல இடங்களில் செயற்பட்டு வருகின்றன.

குறித்த நிறுவனங்கள் அனைத்தினையும் ஒரு கட்டிடத்தில் நடத்திச் செல்வதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது. இதற்கு பொருத்தமான இடமாக முஸ்லிம் சமய விவகார மற்றும் கலாசார திணைக்களத்திற்காக  தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற 9 மாடி கட்டிடம் இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த திணைக்கள கட்டிடத்தினை  புத்தசான அமைச்சிற்கு கையளிக்க அமைச்சரவை தீர்மானித்தது. அத்துடன்  தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்தவுடன் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சு, அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை இங்கு தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்த்கது.