கட்டாரிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்க முடியாத அவல நிலை

கட்டாரிலுள்ள இலங்கையர்களின் பிள்ளைகளை தரம் 1 இற்கு அனுமதிக்க முடியாத அவல நிலை

றிப்தி அலி

கட்டாரில் தொழில்புரியும் நூற்றுக்கு மேற்பட்ட இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கைப் பாடசாலையில் தரம் ஒன்றிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள விடயம் தற்போது தெரியவருகின்றது.

கட்டாரின் தலைநகரான டோஹாவிலுள்ள ஸ்டாஃபோர்ட் இலங்கை பாடசாலை – டோஹா (Stafford Sri Lankan School Doha) எனும் பாடசாலையிலேயே  முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்டாரில் தொழில்புரியும் இலங்கையர்கள் 140 பேரின் பிள்ளைகளை எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி தரமொன்று அனுமதிக்க முடியாத நிலையொன்றினை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த பிள்ளைகள் அனைவரும் இப்பாடசாலையிலேயே முன்பள்ளிக் கல்வியினையும் கற்றுள்ள நிலையிலேயே தரம் ஒன்றிற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இம்மாணவர்களை வேறு பாடசாலைகளில் அனுமதிக்க முடியாது கஷ்டப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பெற்றோரெருவர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

கட்டாரில் கல்வி கற்கும் ஒரு மாணவர் கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் கீழ் கட்டாயம் பதிவுசெய்யப்பட வேண்டும். இப்பாடசாலையில் 2023ஆம் ஜனவரி மாதம் 2,299 மாணவர்கள் கல்வி கற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

"இதில் 1,079 மாணர்கள் மாத்திரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்டனர்.  ஏனைய 1,220 பேர் பதிவுசெய்யப்படவில்லை" என குறித்த பெற்றோர் தெரிவித்தார்.

"இதேவேளை, இந்த வருடத்தின் ஜனவரி மாதம் 1,980 மாணவர்கள் இப்பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் 1,595 பேர் மாத்திரமே கட்டார் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, 385 மாணவர்கள் பதிவுசெய்யப்படவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்டாரின் கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சினால் இப்பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை விட அதிக மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பெற்றோர் குற்றஞ்சாட்டினார்.

இதனாலேயே எங்கள் பிள்ளைகளுக்கு தரம் ஒன்றுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயற்படும் இப்பாடசாலை, கடந்த 2001ஆம் கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஒத்துழைப்புடன் திறக்கப்பட்டது. தரம் - 01 முதல் உயர் தரம் வரை எடக்சொல் பாடத்திட்டம் கற்பிக்கப்படுகின்றது.

இந்தப் பாடசாலையின் போஷகராக கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் செயற்படுகின்றார். அத்துடன் இந்தப் பாடசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஹோடாவிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் இரண்டு இராஜந்திரிகள் பதவி வழி உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

இதற்கமைய, டோஹாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மபாஸ் முஹைதீனிடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்ட சுமார் 100 பெற்றோர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றினை கடந்த மே 6ஆம் திகதி அனுப்பியுள்ளனர்.

எனினும், குறித்த கடிதத்திற்கு இலங்கை தூதுவரிடமிருந்தோ, தூதுவராலயத்திலிருந்தோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.