ஸ்ரீலங்கா கிரிகெட்டை 6ஆம் திகதி ஆஜராகுமாறு கோப் குழு மீண்டும் அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிகெட்டை 6ஆம் திகதி ஆஜராகுமாறு கோப் குழு மீண்டும் அழைப்பு

ஸ்ரீலங்கா கிரிகெட் நிறுவனம் எதிர்வரும் 06ஆம் திகதி மீண்டும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிகெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கிரிகெட் நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய தயார்ப்படுத்தலுடன் வருகைதராத காரணத்தால் அக்கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரு மாதத்தில் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே கிரிகெட் நிறுவனம் ஏப்ரல் 06ஆம் திகதி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையிலான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழு அரசாங்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய மார்ச் 23ஆம் திகதி லங்கா மினரல் சான்ட்ஸ் லிமிடட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையில் புதிய ஏற்றுமதி செயற்பாட்டு வலயங்களை  அமைக்கும் நடவடிக்கைகள் குறித்த மதிப்பீடு பற்றி மார்ச் 24ஆம் திகதி இக்குழுவில் ஆராயப்படவுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனம் எதிர்வரும் மார்ச் 26ஆம் திகதி கோப் குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இதனை விடவும், ஏப்ரல் 07ஆம் திகதி தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்திச் சபையும், ஏப்ரல் 20ஆம் திகதி இலங்கை உதைபந்து சம்மேளனம் மற்றும் ஏப்ரல் 23ஆம் திகதி தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் என்பன அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன.