அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து ஊடகவியலாளர்களுக்கு அரச காணி வழங்கல்
புலனாய்வுக் கட்டுரை
றிப்தி அலி
வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், தனது அரசியல் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து "பிராந்திய ஊடகவியலாளர்கள்" 33 பேருக்கு பெற்றுக்கொடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தின் தரவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 17,510 பேர் காணியற்றவர்களாக உள்ள நிலையில், இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது.
இதற்கு பல அரச நிறுவனங்களும், அதிகாரிகளும் உறுதுணையாக இருந்துள்ளனர். எமது புலனாய்வு தேடலின் மூலம் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
எந்தவொரு அரச நிறுவனத்திலும் பதிவுசெய்யப்படாத மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் சிபாரிசில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் இக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் காணியற்றோருக்கு காணி வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 1972ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க காணி சீர்த்திருத்தச் சட்டத்தின் ஊடாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
காணி வழங்கலுக்கான சிபாரிசு
குறித்த ஆணைக்குழுவின் கீழ் சுமார் 7,000 - 9,000 ஏக்கர் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் காணிகளில் ஒரு தொகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இந்த ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளரிடம் 2019.08.20ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி எஸ். ஸ்ரீகாந் கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் அப்போது வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட சஜித் பிரேதமாசவிடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கம் விடுத்த கோரிக்கையினை அமுல்படுத்த தேசிய வீடமைப்பு அதிகார சபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் இந்த ஆண்டுக்குள் குறித்த காணிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும்" இக்கோரிக்கை கடிதத்தில் மாவட்ட மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 20.07.2019ஆம் திகதி காணிக் கச்சேரி நடத்தப்பட்ட 27 ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்காக ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மயிலம்பாவடி கிராமத்திலுள்ள 1184ஆம் இலக்க காணி, ஆணைக்குழுவின் பணிப்பாளருடைய கள விஜயத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், காணிக் கச்சேரியில் பங்குபற்றியதாக மேலதிக மாவட்ட செயலாளரினால் குறிப்பிடப்பட்ட 27 ஊடகவியலாளர்களின் பெயர்ப்பட்டியலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கமே திகதியிடப்படாமல் வழங்கியுள்ளமை எமது புலனாய்வுத் தேடலின் போது தெரியவந்தது.
இவ்வாறான நிலையில், மேலும் எட்டு ஊடகவியலாளர்களை குறித்த காணி வழங்கலில் இணைத்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் அதிகாரி எஸ்.வீ. ஜீவானந்தனினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு 11.10.2019ஆம் கடிதமொன்று எழுதப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலகத்தின் தகவல் அதிகாரி ஆகியோரினாலேயே மேற்படி எட்டு பயனாளிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 11.10.2019ஆம் திகதி அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயகுமாரினால் ஊடகவியலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்திற்கு காணி வழங்குவதற்காக 35 பயனாளிகளின் பெயர்ப்பட்டியலொன்று காணி சீர்த்திருந்த ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எம். உதயகுமார் - கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
காணி வழங்கல்
இவ்வாறான நிலையில், 2020.08.12ஆம் திகதி முதல் 2020.10.06ஆம் திகதி வரையான இரண்டு மாத காலப்பகுதிக்கு மாத்திரம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், ஊடக இராஜங்க அமைச்சராக செயற்பட்டார். எனினும், தபால் திணைக்களம் மாத்திரமே அவரின் கீழ் காணப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் எனும் அதிகாரத்தினை பயன்படுத்தி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை அவர் முன்னெடுத்திருந்தார்.
இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக, ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் தலா 10 பேர்ச்சஸ் காணிக்கான உரிமம் கடந்த 2021.03.19ஆம் திகதி வழங்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் தற்போதைய சந்தைப் பெறுமதி 3 இலட்சம் ரூபாவாகும். இதற்கமைய ஒன்பது கோடி 90 இலட்சம் ரூபா பெறுமதியான அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2,004 பேர் காணியற்றவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது போன்ற எந்தவொரு வீடமைப்புத் திட்டமும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் காணி வழங்கப்பட்ட காலப் பகுதியில் முன்னெடுப்படவுமில்லை, சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக செயற்படவுமில்லை.
பதிவு செய்யப்படாதவர்களுக்கும் காணிகள்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் தரவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019, 2020/21ஆம் ஆண்டுகளுக்காக 32 பேர் மாத்திரமே பிராந்திய ஊடகவியலாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 தமிழர்களும், 12 முஸ்லிம்களும் உள்ளடங்குவர்.
குறித்த காணி வழங்கலின்போது முஸ்லிம் ஊடகவியலாளர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளனர். பதிவுசெய்யப்பட்ட 20 தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நிலையில், 33 தமிழ் ஊடகவியலாளர்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்ட விடயமானது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் மேற்கொண்ட புலனாய்வு தேடலின் போது, 2019.11.21ஆம் திகதி உயிரிழந்த பிராந்திய ஊடகவியலாளரான ஓய்வுபெற்ற கிராம அலுவலகருக்கும் காணி வழங்கப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் சார்பில் அவருடைய மனைவியான ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் இக்காணியினை பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராக பதவி வகிக்கும் ஆறு குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராந்திய ஊடகவியலாளர், காணி இல்லாமையினால் உறவினரின் வீட்டில் வசித்து வருவதாக அடையாளப்படுத்தப்பட்டு குறித்த பயனாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு காணி வழங்கப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வீடமைப்பு அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 'முல்லை' வீட்டுத் திட்டத்தில் காணியுடன் வீடு பெற்றுக்கொண்ட பிராந்திய ஊடகவியலாளரும் இக்காணி வழங்கலில் உள்வாங்கப்பட்டுள்ளமை எமது தேடலின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் அம்பாறை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளராக 2019, 2020/21ஆம் ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒருவரும் இக்காணிப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அரச தொழில்
அது மாத்திரமல்லாமல், அரச தொழிலில் ஈடுபடுகின்ற பலர் பிராந்திய ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு காணிகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் தாபன விதிக்கோவை 30இன் பிரகாரம் அரச உத்தியோகத்தரொருவர் பிராந்திய ஊடகவியலாளர் உட்பட எந்தவொரு தொழிலையும் அமைச்சு செயலாளரின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது.
அவ்வாறு அனுமதி வழங்கப்படுமிடத்து, மேலதிக தொழிலில் இருந்து கிடைக்கின்ற கொடுப்பனவில் குறிப்பிட்ட சதவீதத்தை திரட்டு நிதி வரவுக் கணக்கில் வைக்கப்பட வேண்டும் எனவும் தாபன விதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பிராந்திய ஊடகவியலாளர்களாக பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களில் எத்தனை பேர் இவ்வாறு அனுமதி பெற்று பணியாற்றுகின்றனர் என்பது பாரிய கேள்விக்குரியாகும்.
ஊடக அமைச்சு
தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரமே ஊடக அமைச்சின் அசிதிசி காப்புறுதி மற்றும் கடனுதவி போன்ற நலன்புரித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த காணி வழங்கலில் ஊடக அடையாள அட்டை இல்லாத 13 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதில் ஊடக அமைச்சில் பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களின் பிராந்திய ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இம்மாவட்டத்தினைச் சேர்ந்த நான்கு தமிழ் ஊடகவியாளர்கள், இக்காணி வழங்கலில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, "மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் ஊடக அமைச்சிற்கு எதுவும் தெரியாது" என அமைச்சின் மேலதிக செயலாளர் ருவான் சத்குமார தெரிவித்தார்.
இவ்வாறான நலன்புரித் திட்டங்களை முன்னெடுக்கும் அரச நிறுவனங்கள், ஊடக அமைச்சுடன் இணைந்து செயற்படுவது சிறப்பானதாகும் என அவர் குறிப்பிட்டார்.
"அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு 'ஊடகவியாலாளர்' என்ற அடிப்படையில் காணி வழங்கியமை முற்றிலும் தவறானது" எனவும் ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.நிலந்தனும், பொருளாளர் பீ.சசிகரனும் அரச காணியினை பெற்றுக்கொண்ட நிலையில் தற்போது வெளிநாடொன்றில் வசித்து வருகின்றனர்.
இது தொடர்பில் இச்சங்கத்தின் தலைவர் வீ. கிருஷ்ணகுமாரை தொடர்புகொண்டு வினவிய போது, "கற்கைநெறியொன்றில் கலந்துகொள்வதற்காக தற்போது வெளிநாடு சென்றுள்ள எமது சங்கத்தின் செயலாளரும், பொருளாளரும் விரைவில் நாடு திரும்புவார்கள்" என்றார்.
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு
இதேவேளை, இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இக்காணி வழங்கலில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளது.
இக்காணி வழங்கலில் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் மாவட்ட செயலகத்தின் தகவல் அதிகாரியான எஸ்.வீ. ஜீவானந்தனை தொடர்புகொண்டு வினவியதற்கு, "காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினாலேயே இக்காணிகள் வழங்கப்பட்டமையினால் தனக்கும் எந்தவித தொடர்புமில்லை" என்றார்.
எனினும் தகவலறியும் விண்ணப்பத்திற்கு பத்தரமுல்லையிலுள்ள காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் தலைமையகத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்களில் மாவட்ட ஊடக அதிகாரியும், மட்டு. மாவட்ட செயலகமுமே மேற்படி பயனாளிகளின் பெயர்பட்டியலை தெரிவுசெய்துள்ளமை ஊர்ஜீதமாகியுள்ளது.
"இக்காணி வழங்கலில் முஸ்லிம் ஊடகவியலாளர்களை நாங்கள் ஒருபோதும் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை. அவர்கள் எம்முடன் இணையாமல் தனித்து செயற்படுவதே வழமையாகும்.
இதனால் எமது சங்கத்தின் உறுப்பினர்களை மாத்திரமே இக்காணி வழங்கலுக்காக நாம் சிபாரிசு செய்தோம்" என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் வீ. கிருஷ்ணகுமார் குறிப்பிட்டார்.
இக்காணி வழங்கல் தொடர்பில் முஸ்லிம் ஊடக சங்கங்களிடம் நாங்க கூறிய போதிலும் அவர்கள் பெயர்ப் பட்டியலை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை
இதேவேளை, "இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் சிபாரிசுக்கமைய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளரினால் மேற்படி ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்குவதற்கான நில அளவைக் கட்டளை விநியோகிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது" என காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் என். விமலராஜ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு ஊடகவியலாளரிடமிருந்தும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு காணி வழங்குவது தொடர்பில் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவுமில்லை, ஆணைக்குழுவினால் காணிக் கச்சேரி நடத்தப்படவுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் பேசுபொருளான விவகாரம்
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காணி மோசடிகளை மூடி மறைக்கும் நோக்கில் இம்மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டொன்றினை இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
இம்மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி மோசடிகள் தொடர்பில் தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை. இதுதொடர்பில் தேடி ஆராய்ந்தபோது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என். விமல்ராஜ், மாவட்டத்திலுள்ள எல்லா ஊடகவியலாளர்களுக்கும் 10 பேர்ச் காணிகளை வழங்கி அவர்களின் வாயை மூடியுள்ளார் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மாவட்டத்தில் ஆணைக்குழுவின் கீழுள்ள காணிகள் பிழையான வகையில் மோசடி செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே ஊடகவியலாளர்களுக்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மோசடியான முறையில் வழங்கப்பட்டுள்ள காணிகள் மீளப் பெறப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர் முன்வைத்தார்.
வியாழேந்திரனின் பதில்
இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனை தொடர்புகொண்டு வினவியபோது,
"மட்டு. மாவட்ட ஊடகவியலாளர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் விண்ணப்பித்து, சட்டரீதியாகவே இந்தக் காணிகளை பெற்றுக்கொண்டனர்.
நான் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் குறித்த விடயத்தினை துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டேன். எனினும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு காணி வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.
எவ்வாறாயினும் ஊடக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கே இக்காணிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்தமையினால் அவர்களுக்கு காணி வழங்கப்பட்டது. முஸ்லிம் ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்திருந்தார்களா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)