மெல்லத் துளிரும் இயல்பு வாழ்க்கை

மெல்லத் துளிரும் இயல்பு வாழ்க்கை

ஏ.எம்.ஆயிஷா
தென் கிழக்கு பல்கலைக்கழகம்
'வழித்தடம்' - All University Muslim Student Association

இதுவும் கடந்து போகும் என்ற வாய்மொழிக்கு ஏற்ப உலகை உலுக்கிய கொரோனா அச்சத்திலிருந்து தனது இயல்பு வாழ்க்ககையை நோக்கி மெல்ல அடியெடுத்து வைக்கிறது நம் இலங்கை.

பணம், பதவி, புகழ் என்பவற்றில் மோகம் கொண்டு அவற்றின் பின் ஓடும் மனிதர்கள் ஒரு பக்கம், நான் தான் பெரியவன் மார்தட்டிக்கொள்ள போட்டியிடும் வல்லரசுகள் ஒரு பக்கம், உன்னை வென்றே தீருவேன் என ஆயுதம் தரித்து போரிடும் நாடுகள் ஒரு பக்கம், எனக்கு இது போதாது என செல்வம் திரட்டும் பணக்கார வர்க்கமும், நான் இப்படியே இருந்துவிடுவேனோ என ஏழ்மையை கண்டு அஞ்சி தனது முன்னேற்றத்திற்காக ஓடும் ஏழைகள் ஒரு பக்கம் என தனது இலக்கு ஒன்றே குறிக்கோள் என ஓய்வில்லா நதியைப் போல ஓடிக்கொண்டிருந்த மனிதர்களை உயிர் பயம் என்றால் என்ன? இனம், மதம், மொழி கடந்து  மனிதநேயம் என்றால் என்ன? பசி என்றால் என்ன? என்பதை கொஞ்சம் உணர்ந்து கொள்ளுங்கள் என கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் புரிய வைத்துள்ளது.

உண்பதற்கு நேரமில்லை; உறங்குவதற்கும் நேரமில்லை; தன் குடும்பத்தினருடன் செலவழிக்கவும் நேரமில்லை என நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த மானுட இயந்திரங்களை கூண்டுப் பறவைகளாக வீடடில் முடங்க வைத்த இந்த கொவிட் 19 ஆரோக்கியம் ஒன்றே மனிதன் பேணி பாதுகாக்க வேண்டிய சொத்து, சுத்தமும் சுகாதாரமுமே மனிதனின் நீண்ட ஆயுளின் அடிநாளம் என்பதனையும் மனிதர்களுக்கு உணர்த்தியுள்ளது.

கடிகார முல்லைப் போல் அவசர கதியில் ஓடிக்கொண்டிருந்த மனிதர்கள், கேளிக்கை, கொண்டாட்டங்கள் என தமது வாழ்வை எவ்வித துன்பமும் இல்லாமல்  கழித்த யுவன்,யுவதிகள் , பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து திரிந்த மாணவச் செல்வங்கள் என அனைவரையும் lock down எனும் பெயரில் வீட்டுச் சிறையில் அடைத்து மனிதர்களின் யதார்த்த வாழ்வையே முடங்கச் செய்துவிட்டது இந்த கொவிட் 19.

இந்த நோயினால் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டதோடு, மக்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையும், செல்வந்தர்கள் பணமிருந்தும் பசித்திருக்கும் நிலையும், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தடைப்பட்டு அவர்கள் வீட்டில் முடங்கும் நிலையும் ஏற்பட்டது.

வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும்  இயந்திரம் ஒன்றில், அதன் ஒரு சிறிய அச்சானி பிசகினாலும் அது தனது இயக்கத்தை நிறுத்திவிடும். அவ்வாறுதான் இன்று இந்த முழு உலகமும் கொவிட் - 19  இனால் கொத்துக் கொத்தாக இறந்து மடியும் மனித உயிர்களை எங்கனம் பாதுகாப்பது என வழி தெரியாமல், நீ – நான் என்ற போட்டியின்றி நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வதென்று தெரியாமல் ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது.

சமூக இடைவெளி பேணவென வீட்டில் அடைந்து கிடப்பதாலும், நோய் அச்சம், மரண பயத்தினாலும் மக்களுக்கு கவலை அதிகரித்தும், அதிகமானோர் மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையை பொருத்த வiரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகாமல் தடுக்க, சிறந்த சுகாதார நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டதன் விளைவால் கொரோனா வைரஸின் கோரதாண்டவத்தில் இருந்து இலங்கை தப்பியுள்ளது.

எனினும் இன்றைய அளவில் 2000 இற்கும் அதிகமான    கொவிட் 19 நோயாளிகள் இணங்காணப்பட்டிருந்தாலும் அதில் 1800 இற்கும் அதிகமானோர் அதிலிருந்து மீண்டுள்ளதோடு கடந்த ஒரு மாத அளவில் இலங்கை சமூகத்தில் எந்தவொரு கொவிட் - 19 நோயாளிகளும் இணங்காணப்படாததையொட்டி இலங்கையில் அமுலில் இருந்த ஊரடங்கு படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக நீக்கப்பட்டு தற்போது நாடு முழுவதும் நீக்கப்பட்டுவிட்டது.

வேலைகள் நிறுத்தப்பட்டு வெறிச்சோடிக் கிடந்த தொழிற்கூடங்கள் தமது இயல்பை மீட்டெடக்கும் முகமாக முதற்கட்டமாக அரச பணியாளர்கள் மூலம் வழமைக்கு திரும்பியது.

அதனையொட்டி தனியார் நிறுவனங்களும் தமது வழமையை நோக்கி திரும்பியுள்ளன. வீட்டுச்சிறையில் அடைந்திருந்த மனித இயந்திரங்கள் எல்லாம் தமது ஓட்டத்தை ஓட ஆரம்பித்துவிட்டன. 

எனவே வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்தை எட்டும் முன், மீண்டும் தனது எழுச்சியை நோக்கி மெல்லத் தலை தூக்குகிறது. எனினும், ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய குட்டையாய் முடங்கியுள்ளதால் நாட்டின் உற்பதிகள் உள்நாட்டுச் சந்தையில் மலிந்து கிடப்பதை சாலையோரங்களில் புதிதாக முளைத்து காணப்படும் கடைகள் மூலம் காணலாம்.

Lock down  இன் ஆரம்பத்தில் எதிர்பாரா விதமாக கிடைத்த நீண்ட விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடிய மாணவச் செல்வங்கள் பழகப்பழக பாலும் புளிக்கும் என்பதற்கேற்ப நாளாக நாளாக வீட்டுச்சிறையில் அடைந்து கிடப்பதை வெறுத்து எப்போதடா பள்ளி செல்வோம், நம் நண்பர்களை காண்போம் என சந்தோஷ வானில் சிறகடிக்கும் அவர்களது பள்ளி நாட்களுக்காய ஏங்க ஆரம்பித்துவிட்ட நிலையில், சிறகொடிந்த பறவைகளாய் வீட்டில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் முகமாக கட்டம் கட்டமாக பாடசாலைகளும் மீளாரம்பம் செய்யப்படுகின்றன.

பல்கலைக்கழக மாணவர்களும், கல்வியியற் கல்லூரி மாணவர்களும் வீட்டிலிருந்து online மூலம் தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தாலும் எப்போதடா நமது விரிவுரை மண்டபங்களையும், வகுப்பறைகளையும் மீண்டும் காண்போம் என காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் முகமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மத ஸ்தலங்களும் மக்களுக்கான உரிய சுகாதார நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 50 பேருக்கான அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளன.

முடக்கப்பட்டிருந்த அரச சேவைகளும் பொதுமக்களுக்காக மீளாரம்பம் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி அதற்கான வேலைதிட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

ஆரம்பத்தில் கிரிக்கட் ஸ்கோர் பார்ப்பதை போல் கொவிட் - 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை பார்த்து பயந்த மக்கள்  சுமார் 3 மாத காலம் வீட்டில் அடைப்பட்டு, தண்ணீரின்றி  தத்தளிக்கும் மீனைப்போல் வெளிக்காற்றை சுவாசிக்க முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த மக்கள் புத்துணர்வை தேடி சுற்றுலாக்களும் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

பொதுமக்களின் நலன் கருதியும்,கொவிட் 19 பரவலை தடுப்பதற்காகவும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புனின்றனர். சுகாதார நலன் கருதி மக்கள் அணியும் முகக்கவசங்களும், வீதியில் பொது இடங்களில் கைகளை கழுவுவதற்காக  ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குழாய்களுமே கொரோனா எனும் வைரஸை மக்களுக்கு ஞாபகமூட்டுவதாக இருக்கின்றன.

சாலைகளில் காணப்படும் வாகன நெரிசல்களும், மொய்க்கும் ஈக்களாய் சந்தைகளில் முந்தியடிக்கும் மக்கள் கூட்டமும், நடைபாதையையே மூழ்கடிக்கும் சன நெரிசல்களுமே மக்களில் பெரும்பாலானோர் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர் என்பதனை உணர்த்துவதாக உள்ளன.

சிறந்த சுகாதார நடவடிக்கைகளை பேணும் நாடு என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாராட்டைப் பெறவும், மக்களை கொவிட் 19 இன் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக சிறந்த முறையில் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டும், lock down  காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும், அவர்களின் சிரமங்களை குறைக்கவும், மக்களுக்காக நிவாரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கிய இலங்கை அரசாங்கத்தினதும் சுகாதார அமைச்சினதும் திட்டமிடப்பட்ட சேவை நடவடிக்கைகள் இல்லையேல் துரிதமாக மீளப்பெற்ற இவ்வியல்பு வாழ்க்கை சாத்தியமில்லை.

எவ்வளவு தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டாலும் மனதின் ஓரம் கொரோனா அச்சம் ஒட்டிக்கொண்டிருப்பதை மக்கள் கவனமாக கடைபிடிக்கும் சுகாதார நடவடிக்கைகள் மூலம் உணர்ந்துக்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

கொவிட்-19  இற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அதன் தீவிரம் உலகில் இன்னும் இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், ஏன் நம்நாட்டிலே புதிய கொவிட்-19  நோயாளிகள் இனங்காணப்பட்டாலும்,  நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கின்றோம் என்ற மனநிலை இலங்கை மக்களை மெல்ல மெல்ல தமது இயல்பு வாழ்க்கைக்கு நகர்த்திவிட்டது. எதையும் துணிந்து எதிர்கொள்ளும் மன தைரியம் கொண்ட மனிதன் சொல்வான் இது மட்டுமல்ல இதுவும் கடந்து போகும்.