கட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் முழக்கம் மஜீத்
றிப்தி அலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அதன் உண்மையான போராளியான முழக்கம் மஜீத் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஏ.எல் அப்துல் மஜீதினை இழந்து தவிக்கின்றது.
பெருந் தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் தான் 'முஸ்லிம் முழக்கம்' என்ற முகுடம் இவருக்கு சூட்டப்பட்டது. தனது கம்பீரக் குரலினால் பொதுமக்களை கவரும் வகையில் உணர்ச்சிபூர்வமான அரசியல் மேடைகளில் பேசக்கூடிய சிறந்த மேடைப் பேச்சாளராக இவர் காணப்பட்டார்.
இதனாலேயே காலஞ்சென்ற அமைச்சர் அஷ்ரபினால் 'முழக்கம்' என்ற மகுடம் இவருக்கு சூடப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் ஊடாக பதவிகளை அனுபவித்தவர்களும் இவரை ஒரு மேடைப் பேச்சாளராகவே பார்த்தார்களே தவிர, சமூக அந்தஸ்தினை வழங்கும் பதவிகளை வழங்க முன்வரவில்லை.
அரசியல் தலைவர்களின் ஒத்தாசையோடு விதிமுறைகளை வளைத்து மிக உயர்ந்த பதவிகளை வகிக்காத ஒருவர் மஜீத். கட்சியும் தானும் வீடுமென்றிருந்தாலும் அரசியல் மேடைகளில் நெருப்பில் புடம்போட்ட வார்த்தைகளில் அனல் பறக்கும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை வளர்ப்பதற்காக அக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபுடனும், தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் நாட்டின் அனைத்து முளைமுடுக்கெல்லாம் சென்று பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது உயிரை துச்சமென நினைத்து விடுதலைப் புலிகளின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கட்சியும் அதன் தலைமைத்துவமும் எடுத்த தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு கலைக்கப்பட்ட வட – கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார்.
எனினும், குறிப்பிட சில காலமே அப்பதவியினை அவரால் தொடர முடிந்தது. காரணம், மாகாண சபை கலைக்கப்பட்டமையேயாகும். இக்காலப் பகுதியில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் பொறுப்பாளராக தற்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செயற்பட்டார். இவருடன் முழக்கம் மஜீத் நெருங்கிய தொடர்பினை பேணியதாக இக்கட்டுரையாளரிடம் பல தடவைகள் கூறியுள்ளார்.
இதன் பின்னர் இவருக்கு எந்தவொரு அரசியல் பிரதிநிதித்துவமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலையான விடயமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் நேற்று வந்தவர்கள், கட்சியிலிருந்து வெளியேறி கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எல்லாம் இந்தக் கட்சி பல பதவிகளை வழங்கி அழகு பார்த்தது.
ஆனால், மரணம் வரை கட்சிக்கும் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் விசுவாசமாக இருந்த இவருக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படாமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர், தேசிய கொள்கை பரப்புச் செயலாளர், சிரேஷ்ட பிரதித் தலைவர் மற்றும் தவிசாளர் போன்ற பல முக்கிய பதவிகளை இவர் வகித்துள்ளார்.
இக்கட்சியின் தவிசாளராக பதவி வகித்தவர்கள் அனைவரும் கட்சியின் தலைமைக்கு பல நெருக்கடிகளை வழங்கியிருந்தனர். எனினும் முழக்கம் மஜீத் அதில் விதிவிலக்கானவராகவே காணப்பட்டார்.
முழக்கம் மஜீத், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக செயற்பட்ட காலப் பகுதியில் கட்சியின் தலைமைக்கு எதிராக எந்தவொரு செயற்பட்டிலும் இடம்பெறவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். கடந்த 2013ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலிருந்த கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட பிரதி மேயர் வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டார்.
இதற்காக வேண்டி நற்பட்டிமுனையினைச் சேர்ந்த ஏ. தௌபீக், தனது உறுப்பினர் பதவியினை விட்டுக்கொடுத்தார். முஸ்லிம் காங்கிரஸுடன் மாத்திரம் நின்றுவிடாது முஸ்லிம் அரசியல் தொடர்பிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்டிருந்தார். முஸ்லிம் அரசியல் வரலாறுகளை ஒரு நொடியில் கூறக் கூடியவராகவும் இவர் காணப்பட்டார்.
இவர், தீவிர வாசிப்பு பழக்கத்தினையும் கொண்டவராவார். மரணிக்கும் வரை விடிவெள்ளி பத்திரிகையினை தொடர்ச்சியாக வாசித்து வந்தார். அது மாத்திரமல்லாமல் இப்பத்திரிகையில் வெளியாகும் முஸ்லிம் அரசியல் தொடர்பான கட்டுரைகள் தொடர்பில் ஆசிரியர் பீட உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதும் அவருடைய வழக்கமாகும்.
கடந்த 1999 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்து மறுநாள் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏதிராக இடம்பெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவத்தில் இவரது தங்கையும் தங்கையின் மகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது கட்சிக்காக அவர் முகங்கொடுத்த பாரிய இழப்பாகும். இப்படிப்பட்டவருக்கு குறிப்பிட்ட சில காலமாவது தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற விடயம் அவர் மரணித்த பின்னர் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகக் காணப்பட்டது.
இக்கட்சியினால் முழக்கம் மஜீதிற்கு பல தடவைகள் அநீதி இழைக்கப்பட்ட போதிலும் அவர் கட்சியினை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை. கட்சி மீது கொண்ட பற்றே இதற்கான காரணமாகும்.
இப்படிப்பட்ட ஒருவரினால் மாத்திரமே இந்தக் கட்சியின் வரலாற்றினை எழுத முடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்திற்கு இடமேயில்லை. அதனையும் கட்சிக்காக அவர் செய்துவிட்டுச் சென்றுள்ளார். தனது இறுதிக் காலத்தில் கட்சியின் வரலாற்றை தொகுப்பதில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
கல்முனையினைச் சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான முஹம்மது நபீலிற்கே அவர் இந்தப் பொறுப்பினை வழங்கியுள்ளார். கவிஞர் நபீலை அழைத்து, முழக்கம் மஜீத் சொல்வதை நபீலின் மொழியில் எழுத வேண்டுமென்று முத்தமிட்டு அணைத்துக் கொண்டு இருவரும் எழுத ஆரம்பித்துள்ளனர்.
கிட்டமுட்ட ஒரு சிறு பகுதியே மீதமிருப்பதாக கவிஞர் நபீல் தனது பேஸ்புகில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நூலினை வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு தற்போது முஸ்லிம் காங்கிரஸின் கைகளிலேயே உள்ளது. எனினும், முழக்கம் மஜீத் கூறிய விடயங்கள் மாத்திரமே இந்த நூலில் வெளிக்கொணரப்பட வேண்டும்.
மாறாக வேறு சிலரின் அழுத்தம் காரணமாக முழக்கம் மஜீத் குறிப்பிடாத விடயங்களை ஒருபோதும் இந்த நூலில் வரலாறாக உள்ளடக்க இடமளிக்கப்படக்கூடாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை அருள்வானாக!
Comments (0)
Facebook Comments (0)