இலங்கை - கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை - கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் நேற்று (28) வெள்ளிக்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவு இடம்பெற்றது.
இலங்கைக்கான கியூபத் தூதுவர் அனட்ரேஸ் மார்செலோ கொன்சாலேஸ் கெரிடொவும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் யூ.பி.அபேவிக்ரம தெரிவுசெய்யப்பட்டார்.
1959 முதல் கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இங்கு உரையாற்றிய சபாநாயகர் நினைவுகூர்ந்தார். இந்த உறவுகளை மேம்படுத்துவதற்குப் பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஒரு முக்கியமான தளமாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படக் கூடிய வகையில் சுகாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார்.
இங்கு உரையாற்றிய இலங்கைக்கான கியூபத் தூதுவர் அனட்ரேஸ் மார்செலோ கொன்சாலேஸ் கெரிடொ, நட்புறவு சங்கத்தின் மூலம் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார். கடந்த சில தசாப்தங்களாக கியூபா மீது இலங்கை காட்டிய நட்பு மற்றும் ஆதரவுக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்த நட்புறவுச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிற்குத் தன்னைத் தேர்ந்தெடுத்தமைக்காக நன்றி தெரிவித்த புதிய தலைவரும், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான சுனில் குமார கமகே, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் கியூபா அடைந்துள்ள முன்னேற்றத்தையும் பாராட்டினார்.
கியூபாவின் அறிவு மற்றும் அனுபவத்தை, குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திய அவர், இலங்கை-கியூபா உறவுகளை வலுப்படுத்த அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.
இக்கூட்டத்தில் நன்றியுரையாற்றிய இலங்கை - கியூபா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் யூ.பி.அபேவிக்ரம, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால உறவை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தினார்.
Comments (0)
Facebook Comments (0)