சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்?
றிப்தி அலி
புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையினை விட அதிக வரிப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ள கட்டணத்தினை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
"ரமழானுக்காக அன்பளிப்புச் செய்யப்படும் பேரீச்சம் பழங்களை விடுவித்தல், வரி செலுத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றினை ஒழுங்குபடுத்தல்" எனும் தலைப்பில் நேற்று (15) புதன்கிழமை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கு பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நோன்பு காலத்திற்கான பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 4 கோடி 63 இலட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கான வரி மற்றும் தாமதக் கட்டணமாக 3 கோடி 28 இலட்சத்து 61 ஆயிரத்து 109 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சுங்கத் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு ரமழான் மாத்திற்கென 500 மெட்ரிக் தொன் பேரீச்சம் பங்கள் தேவைப்படுகின்றன. இதில் 10 சதவீதமான 50 மெட்ரிக் தொன்னைப் விடுவிப்பதற்காக ஒரு கிலோ பேரீச்சம் பழத்திற்கு 657 ரூபாவும் 22 சதமும் செலவிடப்பட்டுள்ளது. இதில் இவற்றை ஏற்றி இறக்கும் செலவுகள் உள்ளடக்கப்படவில்லை.
மேலும் பேரீச்சம் பழத்திற்கான 08041020 எனும் எச்எஸ் குறியீட்டுக்கு பதிலாக உலர்ந்த விவசாயப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் 08042020 எனும் எச்எஸ் குறியீட்டினை பயன்படுத்தியமையினாலேயே மேலதிக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு 199 ரூபா வரிச் சலுகை வழங்குவதற்கான அனுமதியினை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி அமைச்சரவை வழங்கியுள்ள போதிலும் இவ்வாறு அதிக தொகைப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நன்கொடையாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான Standard Operating Procedures (SOP) இல்லை என்ற விடயம் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மாவட்ட ரீதியாக உள்ள பள்ளிவாசல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல் மற்றும் இராஜதந்திர தொடர்பு, மேலதிக கட்டணத்தினை மீளப் பெறல், சுங்க விடுவிப்பினை துரிதப்படுத்தல், விநியோகத்தில் பின்தங்கிய குடும்பங்களை முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட எட்டு பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் குறித்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் அனுப்பியுள்ள இக்கடித்தின் பிரதிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments (0)
Facebook Comments (0)