உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் பாரபட்சம்

உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் பாரபட்சம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் லபார் புறக்கணிப்பு
அப்பீல் கோர்ட் தலைவர் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்

றிப்தி அலி

புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

தற்போது வெற்றிடமாகவுள்ள நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஆர்.எம். சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் சிரேஷ்டத்துவத்தில் முறையே 1ஆம், 2ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் காணப்பட்டனர். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3ஆவது சிரேஷ்டத்துவத்திலுள்ள நீதியரசர் லபார், உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை என்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசரர்களான புவனகே அலுவிகார, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோரின் ஓய்வினை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார்.  நீதியரசர் மேனகா விஜேயசுந்தர சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாக செயற்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதியதியாக நியமிக்கப்பட்டார். அதிலிருந்தே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, நீதியரசர்களான சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகிய இருவரும், நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக  நியமிக்கப்பட்டனர்.

இவர்களைப் போன்றே நீதியரசர் லபாரும் நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்ற நீதியரசாரக தற்போது இவர் நியமிக்கப்படாமையினால் எதிர்வரும் ஜுன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயது வரையே கடமையாற்ற முடியும்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்ன, குறித்த பதவியிலிருந்து இம்மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இவருக்கு எதிராக விரைவில் குற்றப் பிரேரணையொன்று  கொண்டுவரப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து இவர் இராஜினாமாச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி இவர் 63 வயதை அடையவுள்ளமையினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஓய்வுபெறவுள்ளார்.

நீதவானாக தனது நீதித் துறையை ஆரம்பித்த நீதிரயசர் நிசங்க பந்துல கருணாரத்ன பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரானார். உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு இவருடைய பெயர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்; முன்மொழியப்பட்டது.

எனினும், அரசியலமைப்பு பேரவையினால் குறித்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு பேரவையின் இந்த தீர்மானத்தினை சவாலுக்குட்படுத்தி சட்டத்தரணி ஒருவரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் இந்த மனுவினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில அவதானிப்புகளை நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்னவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு பயன்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அறியப்படுகின்றது.

இதேவேளை, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்களை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.