ஊழல் எதிர்ப்புக் கொள்கை ஆதரவின் மூலமாக பொருளாதார ஆளுகையை மேம்படுத்த ஜப்பான் உறுதி

ஊழல் எதிர்ப்புக் கொள்கை ஆதரவின் மூலமாக  பொருளாதார ஆளுகையை மேம்படுத்த ஜப்பான் உறுதி

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) இலங்கையின்இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியான திருமதி. அசுசா குபோடா ஆகியோர் சிரேஷ்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் ‘ஊழலுக்கு எதிரான கொள்கை ஆதரவின் ஊடாக பொருளாதார ஆளுகையை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டம்’ என்ற
தலைப்பில் புதிய செயற்திட்டத்தை நேற்று (12) செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கையெழுத்திடுகையின் மூலமாக ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியானது, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்களிப்பாளராக அடையாளம் காணப்பட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இடைவெளிகளுடன், அடையப்பட்ட அபிவிருத்தி வெற்றிகளை மாற்றியமைத்துள்ளது.

புதிய செயற்திட்டமானது காலஎல்லைக்குட்பட்ட, அதிக செலவீனமுடைய தேசிய கொள்கை சீர்திருத்தம், பங்குதாரர்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பலவீனத்திலிருந்து மீண்டெழு திறனுடைய பொருளாதாரம் மற்றும் நம்பகரமான ஜனநாயகத்தை நோக்கி நாடு எழுவதற்கு தேவையான வரைபடத்தை வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட நிறுவன இயலளவு ஆகியவற்றினூடாக இலங்கையின் ஊழலுக்கு எதிரான சூழலை வலுப்படுத்தும் நோக்கில் பணியாற்றுகின்றது.

இலங்கை அரசாங்கத்தாலும் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினாலும் அமுலாக்கப்படுகின்ற "ஊழலுக்கு எதிரான கொள்கை ஆதரவின் மூலமாக பொருளாதார ஆளுகையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டம்" ஜப்பான் அரசாங்கத்தால் 137 மில்லியன் JPY (அண்ணளவாக 931,000 USD) ஜப்பானிய துணை வரவு செலவுத் திட்டத்தின் (JSB) மூலமாக ஆதரிக்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட நடவடிக்கை (1) சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை வலுப்படுத்த முயலுதல் (2) நிதி மற்றும் வரிக் குற்றங்களை எதிர்த்துப் போராடும் முக்கிய நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் (3) மூன்று முக்கிய விளைவுகளின் கீழ் மூலோபாய நடவடிக்கை மூலம் ஊழலுக்கு எதிராக போராடுவதை சுற்றியுள்ள மூலோபாய நிறுவன மற்றும் தனிப்பட்ட திறன்கள் மற்றும் இயலளவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜப்பானின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி,

"ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்க வர்த்தகச் சூழலை உருவாக்குகின்றன.

இவ்விடயத்தில் முன்னேற்றத்தை ஆதரிப்பதை ஜப்பான் நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, வர்த்தக உறவை விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றது. நியாயமான பொருளாதார நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான முன்முயற்சிகளை மேம்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். எங்களின் கூட்டு முயற்சிகளின் உறுதியான பெறுபேறுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.

ஊழல் எதிர்ப்பு சூழலுக்குள் இலக்கு வைக்கப்பட்ட, கால எல்லைக்குட்பட்ட, இயலளவு மேம்பாடானது, தடுத்தல், விசாரணை மற்றும் வழக்குத் தொடருதல் மூலமாக ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான அணுகுமுறையை உறுதிப்படுத்த இலங்கைக்கு உதவும்.

இது ஊழலுக்கு எதிரான அரணாகச் செயற்படும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி, சமூக - பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு முக்கியமான அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், வினைத்திறனான மற்றும் யூகிக்கக்கூடிய பொது சேவை
வழங்கலுக்கு பங்களிப்பு செய்கின்றது.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் பங்கு குறித்து ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியான திருமதி. அசுசா குபோடா கருத்துத் தெரிவிக்கையில்,

"இலங்கைக்குத் தேவையான சீர்திருத்தங்களை வினைத்திறனாக அமுல்படுத்தி அதன் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படையான அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை முற்றிலும் அவசியமானதென்பது தெளிவாகிறது.

ஜப்பானுடனான பங்காண்மை பொருளாதார ஆளுகையை வலுப்படுத்துவதற்கு ஆதரவாக எங்களுடைய தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை நிறைவு செய்வதுடன் நிறுவனங்களுக்கு தடையின்றி ஒத்துழைப்பதற்கு வலுவூட்டலளிக்கும் ஓர் முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றது.

JSB இனுடைய ஆதரவு அவர்களின் தனிப்பட்ட இயலளவுகளை மட்டுமல்லாது மிக முக்கியமாக, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபடுவதற்கான அவர்களின் கூட்டுத் திறனை மேம்படுத்தும் ஓர் ஊக்கியாக செயற்படும். இந்த சந்தர்ப்பத்திற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் உள்ள நாங்கள் ஜப்பான் அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

திட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள், நிலையான அபிவிருத்திக்கான சமாதானமான மற்றும் உள்ளடங்கலான சமூகங்களை ஊக்குவிப்பதன் மூலமும், அனைவருக்கும் நீதிக்கான அணுகலை வழங்குவதன் மூலமும், அனைவருக்கும் வினைத்திறனான, அனைத்து நிலைகளிலும் பொறுப்பு வாய்ந்த மற்றும் உள்ளடங்கலான நிறுவனங்களை கட்டியெழுப்புவதன் மூலமும், நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (SDG16) இலக்கு 16 ஐ அடைவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.