இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற ஆறாவது சர்வதேச யோகா தின நிகழ்வு
ஆறாவது சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இலங்கை இராணுவம் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியன ஒன்றிணைந்து விசேட யோகா அமர்வு ஒன்றினை நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் செய்திகளும் இந்த நிகழ்வில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள், உயரதிகாரிகள் ஏனைய படையினர் ஆகியோருடன் இணைந்து இந்த அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை பாதுகாப்பு படை மேற்கு தலைமையகம் - பனாகொட மற்றும் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அக்கடமி ஆகியவையும் இந்த அமர்வில் இணையவழி மூலமாக இணைந்திருந்தன
கொவிட்19 பெருநோயினை எதிர்கொள்வதில் இலங்கை இராணுவத்தினர் முன்னின்று செயற்பட்டிருந்தமைக்காக பாராட்டுகளை தெரிவித்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிப்பதிலும் மன அழுத்தத்தை குறைப்பதிலும் யோகா மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை வழங்கிவரும் பங்களிப்பு தொடர்பாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இன்று உலகளாவிய ரீதியில் இருக்கும் பல மில்லியன் கணக்கான மக்கள் தமது இன மத நிற மொழி வேறுபாடுகள் எதுவும் இன்றி யோகா பயிற்சிகள் சிலவற்றை செய்வதன் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, சுயம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஞானம் பெறுதல் ஆகியவை சார்ந்த பலன்களை அனுபவிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உரை நிகழ்த்துகையில், "இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கூட்டொருமைப்பாட்டினை யோகா மேலும் வலுவாக்குவதாக" குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் நிலைமைகளுக்கு அமைவாக சர்வதேச யோகா தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமைக்காக அவர் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இணையவழி மூலமாகவும் இப்பயிற்சிகளை மேற்கொண்டமை ஆன்மா, உடல் மற்றும் மனம் ஆகியவற்றை இணைக்கும் ஆரோக்கியம்சார் யோகா செயற்பாடுகளை அனைவரும் அனுபவிப்பதற்கு அரியதொரு சந்தர்ப்பத்தை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் பங்கேற்றுள்ளனர். சுகாதார நடைமுறைகள் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை பேணப்பட்ட நிலையில் இம்முறை இராணுவத்தினருடனான யோகா அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.
இதேவேளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு ஏனைய பல நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
Comments (0)
Facebook Comments (0)