உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள்; விசாரணைகள் குறித்து அரசாங்கம் பராமுகம்: ஐக்கிய தேசியக் கட்சி
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சிக்குவந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் குறித்து பராமுகத்தோடிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் ஆட்சிக்குவந்து இரண்டு மாதம் கடந்துள்ள நிலையில் தேர்தலின்போது வழங்கிய எந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதென்று ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
"ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றிக்கு உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் பெரிதும் சாதகமாகியிருந்தன. தேர்தல் பிரசாரங்களின்போது தாக்குதலை பெரிதும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இதன்போது தாக்குதலுடன் இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் பலர் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தாம் ஆட்சிக்குவந்து இரு மாதத்திற்குள் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல செயற்றிட்டங்களை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தனர். பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் இவர்கள் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். இந்நிலையில் இவர்கள் ஆட்சிக்குவந்து இரண்டு மாதகாலமாகியுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு ஒப்படைப்பதற்காக கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்குப் பெரிதும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஆனால் ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகிலிருந்த நிலத்தை இவ்வாறு ஒப்படைக்க தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விதுர விக்கிரமநாயக்க அதிருப்தி தெரிவித்துள்ளதையும் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.
முல்லைத்தீவு -– குருக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஆலயம் தொடர்பில் கடந்த தினங்களில் பெரிதும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த அரசாங்கம் இன்றைய தினம் (நேற்று) அங்கு பொங்கல் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவே எமது அரசாங்கத்தின் ஆட்சியின் போது இடம்பெற்றிருந்தால் எங்களை இனவாதிகளாகவும் , பௌத்த மதத்திற்கு எதிரிகளாகவும் சித்திரித்திருப்பார்கள்.
காட்டு யானையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் யானை வேலி அமைத்துதருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் அவர்களுக்கு துப்பாக்கிகளை பெற்றுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதான் இந்த அரசாங்கத்தின் தீர்வுகாணும் முறை.
அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இவர்தான் மணல் மற்றும் மண்ணை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தையும் இரத்து செய்தவர். இவரின் இந்த செயலால் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமப் பகுதிகளில் கனரக வாகனங்களை கொண்டு சென்று மணல் மற்றும் மண் ஏற்றிச் செல்லப்படுகின்றன.
இதன் காரணமாக புதிதாக அமைக்கப்பட்டிருந்த கிராமப்புறப் பாதைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கோட்டாபயவின் வெற்றிக்கு அவரிடம் பெரிதும் இணைந்திருந்த ஒரு சிலருக்கு சாதகமான விடயங்கள் கிடைத்திருந்தாலும் , மத்தியதர வகுப்பினருக்கு எவ்வித நலனும் கிடைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்த்து கவலையடைந்தே உள்ளனர்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)