ஊரை ஏமாற்றும் ஊடகப் பயிற்சிகள்
புலனாய்வு அறிக்கையிடல்
றிப்தி அலி
முன்னணி வானொலி ஒன்றின் முஸ்லிம் பிரிவில் பணியாற்ற வேண்டும் என்பது கெக்கிராவ பிரதேசத்தினைச் சேர்ந்த 26 வயதான முவாத் மர்சூகின் நீண்ட நாள் ஆசையாகும்.
இந்த அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 10 – 12 ஊடக கருத்தரங்குகளில் இவர் கலந்துகொண்டுள்ளார். மௌலவியான முவாத் மர்சூக், தற்போது அக்குறணை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் பணியாற்றுகின்றார்.
இவ்வாறான நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி மாத்தளை பிரதேசத்தில் சாய்ந்தமருதை தளமாகக் கொண்ட லக்ஸ்டோ மீடியாவினால் மாத்தளை நகரில் நடாத்தப்பட்ட இரண்டு நாள் ஊடக கருத்தரங்கு தொடர்பான விளம்பரத்தினை சமூக ஊடகங்கள் வாயிலாக இவர் அறிந்துகொள்கின்றார்.
இந்த ஊடக கருத்தரங்களில் மூத்த ஒலிபரப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளருமான கே. ஜெயகிருஷ்ணா, சிரேஷ்ட ஊடகவியலாளர் நௌசாத் முஹைதீன் மற்றும் சக்தி ரீ.வியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தொகுப்பாளராக கடமையாற்றிய ஷெரோமி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஊடக கருத்தரங்கில் கலந்துகொண்டு மேற்குறிப்பிட்ட வளவாளர்களின் அறிமுகத்தினை பெறுவதனூடாக தனது நீண்ட கால கனவினை நனவாக்கும் நோக்கில் 2,000 ரூபா பணம் செலுத்தி பலத்த ஆவலுடன் இந்த பயிற்சி நெறியில் கலந்துகொள்கின்றார் முவாத் மர்சூக்.
எனினும் எதிர்பார்த்துச் சென்ற யாருமே இந்த ஊடக கருத்தரங்கில் வளவாளர்களாக கலந்துகொள்ளவில்லை என்ற பலத்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மேற்படி கருத்தரங்கில் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ள முடியவில்லை. இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களுக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டோம் என கே. ஜெயகிருஷ்ணா மற்றும் நௌசாத் முஹைதீன் ஆகியோரை நாம் தொடர்புகொண்டு வினவிய போது தெரிவித்தனர். இது தொடர்பில் ஷெரோமியின் கருத்தினை அறிய முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
இதேபோன்று, ஊடக அனுபவமற்றவர்களினால் நடத்தப்படுகின்ற ஊடகப் பயிற்சிகள் காரணமாக பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இலங்கையில் காணப்படுகின்றது.
இதேவேளை, சிறந்ததொரு பெண் செய்தி வாசிப்பாளராக வர வேண்டும் என்ற தனது சிறு வயது கனவினை அடையும் நோக்கில் 24 வயதான பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குளியாப்பிட்டியினை தளமாகக் கொண்டு செயற்படும் பிறைநிலா ஊடக வலையமைப்பினால் அக்குறணை பிரதேசத்தில் நடத்தப்பட்ட நான்கு மாத Advance Certificate in Mass Media ஊடக கற்கை நெறியில் இணைகின்றார்.
வானொலிகளில் தற்போது செய்தி வாசிப்பவர்களைப் போன்று செய்தி வாசிப்பதற்கு தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளும் நோக்கிலேயே அவர் இந்த பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ளார்.
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகியவற்றின் வெகுஜன தொடர்புத்துறை, அறிவிப்புத்துறை, செய்திப் பரிமாணங்கள், விளம்பரத்துறை உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் இந்த பயிற்சி நெறியில் விரிவுரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு 3,000 ரூபா பதிவுக் கட்டணம் உட்பட 19,000 ரூபா பணம் பாத்திமாவிடமிருந்து அறவிடப்பட்டுள்ளது.
எனினும், “இந்த ஊடக பயிற்சி நெறியின் போது மைக் ஒன்றையாவது எனது கண்ணில் காட்டவில்லை” என அழுதவாறு கூறினார் பாத்திமா. அது மாத்திரமல்லாமல் கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் நிறைவு செய்யப்பட்ட இந்த பயிற்சி நெறிக்கான சான்றிதழ் இன்று வரை வழங்கப்படாது தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறு ஏமாற்றும் பல ஊடக கல்வி நிறுவனங்கள் நாட்டின் பல பாகங்களில் இயங்கி வருகின்றமை எமது ஆய்வுகளினூடாக தெரியவந்துள்ளது. எவ்வித ஊடக அனுபவமும் இல்லாதவர்களினாலேயே இப்படியான ஊடக கற்கை நிலையங்கள் நடத்தப்படுகின்றமை முக்கியமான விடயமாகும்.
அது மாத்திரமல்லாமல், கொரோனா வைரஸ் பரவலினை அடுத்து இப்படியான ஊடக நிறுவனங்கள் இணையத்தளத்தின் ஊடாக பல ஊடக கற்கை நெறிகளை நடாத்துவதாக் கூறி பல இலட்சக்கணக்கான ரூபாய்களை அப்பாவி இளைஞர், யுவதிகளிடமிருந்து கொள்ளையடித்துள்ளமை எமது தேடலின் மூலம் தெரியவந்தது.
லக்ஸ்டோ மீடியா
பகுதி நேர அறிவிப்பாளராக சில வானொலிகளில் கடமையாற்றிய கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான ஏ.எல். அன்சார், லக்ஸ்டோ மீடியாவின் ஸ்தாபகராவார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவர் எந்தவொரு ஊடக நிறுவனத்திலும் கடமையாற்றவில்லை என்பது எமது தேடலில் அறிய முடிந்தது. எனினும் கடந்த 15 வருடங்களாக லக்ஸ்டோ மீடியாவினால் ஊடகப் பயிற்சி நடத்தப்படுவதாக அன்சார் கூறினார்.
இந்த நிறுவனத்தினால் வர்த்தக நிறுவனங்களின் விளம்பர அனுசரனையினைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 'திறமைக்கான தேடல் விருது' வழங்கப்பட்டதுடன் சில ஊடகக் கருத்தரங்களும் நடத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இந்நிறுவனத்தினால் அடிக்கடி பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு, எவ்வித பொறிமுறையும் இல்லாமல் எழுந்தமானமாக பட்டங்கள் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாத்தளை ஸாஹிரா கல்லூரிக்கு அருகாமையிலுள்ள கிரஸன்ட் பாலர் பாடசாலையில் கடந்த ஏப்ரல் 12ஆம், 13ஆம் திகதிகளில் இரண்டு நாள் ஊடக செயலமர்வொன்றை லக்ஸ்டோ மீடியா ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கென தனியான வட்ஸ்அப் குழுமமொன்று கடந்த மார்ச் 22ஆம் திகதி உருவாக்கப்பட்டு, அதில் சுமார் 110 பேர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்தக் குழுமம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் மேற்படி செயலமர்விற்கான விளம்பரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கான 2,000 ரூபா கட்டணத்தினை சம்பத் வங்கியின் சாய்ந்தமருது கிளையிலுள்ள ஏ.எல் அன்சாரின் 1126 5755 8772 எனும் கணக்கிலக்கத்திற்கு செயலமர்விற்கு முன்னராகவே வைப்புச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பணத்தினைச் செலுத்திய 27 பேர் கலந்துகொண்ட இந்த செயலமர்வின் விரிவுரையாளர்களாக லக்ஸ்டோ மீடியாவின் நிறுவுனர் ஏ.எல். அன்சார் மற்றும் பிறை எப்.எம் வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர் ஏம்.ஏ.நசீர் ஆகியோர் மாத்திரமே கலந்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் 2017/18ஆம் ஆண்டுக்கான ஊடகவியல் டிப்ளோமா பாடநெறியினை அண்மையில் நிறைவுசெய்தவர்களாவர். இதற்கான இறுதிப்பரீட்சை கடந்த ஏப்ரல் 18ஆம் நடைபெற்றது.
"காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற்ற ஒருநாள் மாத்திரம் நடைபெற்ற இக்கருத்தரங்கில் செய்தி அறிவிப்பு, விளம்பர அறிவிப்பு போன்றவை தொடர்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன" என அதில் கலந்துகொண்ட முவாத் மர்சூக் தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்த அமைப்பினால் நடத்தப்பட்ட ஊடக கருத்தரங்கில் வழங்கப்பட்ட சான்றிதழே மாத்தளை செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு, பின்னர் அது ஏற்பாட்டாளர்களினால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“புனித ரமழான் நோன்பு ஆரம்பிப்பதனாலும், சித்திரை புதுவருடம் காரணமாகவும் பங்குபற்றுநர்களின் வேண்டுகோளிற்கமைய இரண்டு நாள் செயலமர்வினை ஒரு நாளாக மட்டுப்படுத்தினோம்” என ஏ.எல். அன்சார் தெரிவித்தார். எனினும், கட்டணக் குறைப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிறை நிலா
பிறை நிலா ஊடக வலையமைப்பின் நிறுவுனரான சப்ராஸ் அபூபக்கர், தற்போது அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வருகின்றார்.
கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் டிப்ளோமாவினை நிறைவுசெய்துள்ள இவர், எந்தவொரு ஊடக நிறுவனத்திலும் முழு நேரமாக கடமையாற்றாமல், பகுதிநேர அறிப்பாளராகவும், புனித ரமழான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் நிகழ்ச்சிகளை தொகுப்பதற்கான உதவியாளராகவும் கடமையாற்றியதாக எமது தேடலின் மூலம் தெரியவந்தது.
காலஞ்சென்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியினை பயன்படுத்தியே இவரது 'பிறைநிலா' இளைஞர்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தப்பட்டது. “கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காத்தான்குடி, கெகுணுகொல்ல, அக்குறணை போன்று பல பிரதேசங்களில் பிறைநிலா நிறுவனத்தினால் ஊடகப் பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டு வருகின்றது” என சப்ராஸ் அபூபக்கர் கூறினார்.
இந்நிறுவனத்தினால் ஒரு நாள் இலவச கருத்தரங்கு நடத்தப்பட்டு 3,500 ரூபா பெறுமதியான இரண்டு நாள் ஊடக செயலமர்வு மற்றும் நான்கு மாத ஊடக பயிற்சி நெறி ஆகியவற்றுக்கான விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவது வழமையாகும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு முழுமையான செய்முறைப் பயிற்சி, அனுபமும், தேர்ச்சியுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்களினால் பயிற்சி, அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், களச் சுற்றுலா, திறமையானவர்களுக்கு எமது ஊடக வலையமைப்பில் இணைந்து பயணிக்க வாய்ப்பு இன்னும் பல சலுகைகள் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், சப்ராஸ் அபூபக்கரினாலேயே இந்த ஊடகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்குறணையில் இடம்பெற்ற நான்கு மாத பயிற்சிநெறி முழுமையாக அவரினாலேயே நடத்தப்பட்டமை இதற்கான ஆதரமாக குறிப்பிட முடியும். இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலிற்கு பின்னர், இணையத்தளத்தின் ஊடாக இவர் ஐந்து நாள் பயிற்சி நெறியொன்றினை தற்போது முன்னெடுத்துள்ளார்.
இதில் - செய்தி சேகரித்தல், செய்தி எழுதுதல், செய்தி வாசித்தல் தொடர்பில் ஐந்து மணித்தியாலம் விரிவுரை நடத்தப்படுவதுடன், இதற்காக ஒருவரிடமிருந்து 3,500 ரூபா கட்டணமாக அறிவிடப்படுகின்றது. “இதுவரை ஐந்து தொகுதிகளைச் சேர்ந்த 35 – 40 பேருக்கு பயிற்சி வழங்கியுள்ளேன்” என சப்ராஸ் கூறினார்
இதேவேளை, “அக்குறனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட கற்கை நெறியில் கலந்துகொண்டவர்கள் இறுதி செயற்திட்டத்தினை நிறைவு செய்யாமையினாலேயே அவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கப்படாமைக்கான காரணமாகும்” என சப்ராஸ் மேலும் தெரிவித்தார்.
எனினும் 100 பொன்மொழிகளை எழுதவும், அறிவிப்பாளருக்கான தகுதிகள் என்ன?, செய்தியாளருக்கான தகுதிகள் என்ன?, உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், ஒரு அறிவிப்பாளர் எவ்வாறு மொழியினை உச்சரிக்க வேண்டும் உள்ளிட்ட 16 கேள்விகளை இறுதி செயற்திட்டமாக இவர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜே.எம். மீடியா
யூரீவி எனும் கேபிள் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவரும் கொழும்பு பல்கலைக்கழக ஊடகவியல் டிப்ளோமாவினை நிறைவுசெய்துள்ள ராசீத் மல்ஹர்டீன் மற்றும் அவரது சகோதாரர் ரஷா மல்ஹர்டீன் ஆகியோர் இணைந்து 'ஜே.எம். மீடியா' எனும் ஊடக கல்வி நிறுவனத்தினை மாவனல்லையில் நடாத்தி வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தினால் ஊடக கற்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ராசீத் தெரிவித்தார். எனினும் கடந்த ஜனவரி 22ஆம் திகதி முதலே இந்நிறுவனம் மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பகுதி நேர Certificate in Mass Media (Basic Vocational Skill) பயிற்சி நெறிக்கான நிலையமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த கற்கைநெறியின் விரிவுரைகள் அத தெரண தமிழ் இணையத்தளத்தின் பொறுப்பாளர் எஸ். சரவணபவன் மற்றும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம். பைரூஸ் போன்ற நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்களினால் நடாத்தப்படுவதாக ராசீத் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எஸ். சரவணபவன் மற்றும் எம்.பீ.எம். பைரூஸ் ஆகியோரை தொடர்புகொண்டு வினவியதற்கு, கடந்த 2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒரேயொரு தடவை மாத்திரம் இந்த நிறுவனத்தில் விரிவுரை நிகழ்த்தினோம் என இருவரும் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், ராசீத் மற்றும் ரஷா சகோதரர்களினாலேயே இந்த நிறுவனத்தின் ஊடக கற்கைக்கான விரிவுரைகள் நடத்தப்படுவதாக இதில் கலந்துகொண்ட மாணவரொருவர் எமக்குத் தெரிவித்தார்.
எமது நிறுவனத்தில் பயிற்சிபெற்ற பலர் இன்று யூரீவி, கெபிடல் எப்.எம். போன்ற பல இடங்களில் கடமையாற்றுவதாக ராசீத் மல்ஹர்டீன் பெயர்களுடன் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, இந்த விடயத்தினை அவர்கள் முற்றாக நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜே.எம். மீடியாவில் ஊடகக் கற்கையினை நிறைவுசெய்த ஒருவர், இலங்கை இதழியல் கல்லூரியிலும் ஊடகப் பயிற்சினை நிறைவு செய்துள்ளார்.
“ஜே.எம். மீடியாவில் தான் பெற்ற பயிற்சிக்கும், இதழியல் கல்லூரியில் பெற்ற பயிற்சிக்குமிடையில் பாரிய வேறுபாட்டைக் கண்டதுடன், அங்கு கற்றதைவிட விரிவாக நிறைய விடயங்களை செய்முறையுடன் இலங்கை இதழியல் கல்லூரியில் கற்றுக்கொண்டேன்” என அவர் குறிப்பிட்டார்.
நோர்த் மாஸ் மீடியா
“வவுனியாவில் செயற்படும் நோர்த் மார்ஸ் மீடியா நிறுவனம் , கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஊடகப் பயிற்சியளித்து வருகின்றது” என அதன் நிறுவனர் நபீஸ் அபுதாஹீர் தெரிவித்தார்.
எவ்வித ஊடக அனுபவமுமற்ற இவரினால் நடத்தப்படுகின்ற இந்த நோர்த் மார்ஸ் மீடியா நிறுவனம், ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்.
இதேவேளை, குறித்த நிறுவனத்தின் முகாமையாளராக செயற்படும் ஏ.ஏ.எம்.மிஸ்பா, தற்போது இணையத்தளத்தின் ஊடாக கட்டணம் அறவிட்டு வானொலி அறிவிப்பு தொடர்பான பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை எமது தேடலின் ஊடாக அறியமுடிந்தது.
எவ்வாறாயினும் இவர், யூரீவி கேபிள் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பின்போது பலவந்த அடிப்படையில் இராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்டன் மீடியா அகடமி:
ஹட்டனில் செயற்படும் இந்த நிறுவத்தினை ஆர்.ஜே. லங்கேஷ் என்பவர் நடத்தி வருகின்றார். குறிப்பிட்டதொரு காலப் பகுதிக்குள் ஸ்டார் தமிழ் வானொலி, சூரியன் எப்.எம்., தாளம் எப்.எம். போன்ற பல வானொலிகளில் இவர் கடமையாற்றியுள்ளார்.
2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா மாஸ் மீடியா எனும் ஊடக கல்வி நிறுவனமொன்றினை இவர் கொழும்பில் நிறுவியிருந்தார். எனினும் சில காலங்களில் அது இழுத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இறுதியாக இவர் கெபிடல் எப்.எம். வானொலியில் கடமையாற்றியிருந்தார். இதன் பின்னரே ஹட்டன் மீடியா அகடமியினை இவர் நிறுவியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான ஊடக பாடத்திற்கு ஆட்களை கவர்ந்தெடுக்கும் நோக்கில் இந்த அகடமியின் ஆலோசனை சபை உறுப்பினர்களாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பிரபலமான ஆசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் மலைய இளைஞர்களை இலக்குவைத்து நான்கு மாத ஊடக கற்கை நெறியொன்றினை கடந்த ஜனவரியிலிருந்து இவர் நடத்தி வருகின்றார். இதற்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படுகின்றது. இதன் முதற் தொகுதியில் பங்குபற்றிய 12 பேருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி ஹட்டனில் இடம்பெற்றது.
“இங்கு பயிற்சியினை நிறைவு செய்தவர்களில் ஐந்து பேர் வானொலி மற்றும் அச்சு ஊடகங்களில் கடமையாற்ற தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் தமிழ் எப்.எம். வானொலியில் அறிவிப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்” என்று லங்கேஸ் கூறினார்.
இது தொடர்பில் தமிழ் எப்.எம். வானொலியின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவியபோது, “ஹட்டன் மீடியா அகடமியில் கற்கைநெறியினை நிறைவுசெய்த எவரும் எமது வானொலியில் அண்மையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை” என்றார்.
இவ்வாறான நிலையில், தபால் மூல நான்கு மாத கால தமிழ் மொழி மூலமான Diploma in Mass Communication / Media (O/L, A/L students) கற்கை நெறி ஹட்டன் மீடியா அகடமியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என இந்த அகடமியின் பேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பஸ்லுல்லாஹ் முபாரக்:
இவர் நியூஸ் பெஸ்ட் செய்திப் பிரிவில் சுமார் நான்கு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றி அண்மையில் அங்கிருந்து வெளியானார். தற்போது யூடியூப் சனலொன்றினை நடத்திவருகின்ற இவர், இணையத்தளத்தின் ஊடாக ஊடக வகுப்புகளை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு வார இறுதியில் 4 நாட்கள் தலா 1 மணி நேரம் இடம்பெறும் இந்த ஊடக கற்கைக்காக 6,000 ரூபா கட்டணத்தை, கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
வகுப்பின் இறுதியில் பெறுமதியான சான்றிதழ் வீட்டுக்கு தபாலில் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்ட இப்பயிற்சிநெறியில், தொலைக்காட்சி செய்தி வாசித்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு, தொலைக்காட்சி செய்தி அறிக்கையிடல் மற்றும் தொலைக்காட்சி செய்தி தயாரிப்பு என்பன பயிற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நிலைமை காரணமாக இணையவழிக் கற்பித்தலில் நடைபெறும் இந்த கற்கைநெறிக்கான வகுப்புகள் கடந்த 24ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேற்குறிப்பிடப்பட்டவைகள் போன்ற எந்தவொரு அங்கீகாரமும் பெறப்பட்டாத பல ஊடக நிறுவனங்கள் எமது நாட்டின் பல பிரதேசங்களில் செயற்பட்டு வருகின்றமை எமது தேடலின் ஊடாக அறிய முடிந்தது. இதற்காக இவர்கள் இலங்கையின் முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களை அழைத்துவந்து, நிகழ்ச்சிகளை நடத்துவது வழமையாகும்.
பின்னர் அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இவர்களே எல்லாவற்றையும் செய்து பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அங்கீகாரமற்ற இப்படியான ஊடக நிறுவனங்களை நடத்துபவர்கள் அனைவரும் ஊடக தொழிலினை இழந்தவர்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.
அங்கீகாரத்தினை உறுதிப்படுத்தல்
இந்த நிறுவனங்களின் அங்கீகாரத்தினை உறுதிப்படுத்துவதற்கான தேடலில் ஈடுபட்டபோது பல உண்மைகள் வெளியே வந்தன. பிறை நிலா ஊடக வலையமைப்பு என நாட்டின் எந்தவொரு அரச நிறுவனத்திலும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
எனினும் கொரெம்பாவ எனப்படும் குளியாப்பிட்டிய கிழக்கு பிரதேச செயலகத்தில் சப்ராஸ் அபூபக்கரின் பெயரின் கீழ் 'அபூ கிரியேஷன்ஸ்' எனும் பெயரிலான வியாபாரப் பதிவொன்று பெறப்பட்டுள்ளது. இதற்கு கிடைக்கப்பெற்ற பதிவிலகத்தினை இவர் பிறைநிலா ஊடக வலையமைப்பின் விளம்பரங்களிற்கும் பயன்படுத்தி வருகின்றமையினை அவதானிக்க முடிந்தது.
லக்ஸ்டோ மீடியா - சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஊடாக கலாசார திணைக்களத்தின் கீழ் கலை, ஊடக மற்றும் கலாசார அமைப்பாக CDA/06/04/01/AMP/030 எனும் பதிவிலகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கலைக்கப்பட்ட வட - கிழக்கு மாகாண சபையில் கலை, இலக்கிய சமூக அபிவிருத்தி அமையம் (லக்ஸ்டோ) எனும் பெயரில் கலாசார அமைப்பாக பதிவுசெய்யப்பட்ட NEP/EM/CA/SM/06/2006 எனும் பதிவிலகத்தினையும் லக்ஸ்டோ மீடியா சட்டவிரோதமாக தற்போது பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, நோர்த் மாஸ் மீடியா மற்றும் ஹட்டன் மீடியா அகடமி ஆகியன ஊடக அமைச்சில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் ஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், “ஊடக கற்கை நிலையங்களை பதிவுசெய்யும் முறைமையொன்று ஊடக அமைச்சில் இல்லை” என அமைச்சின் செயலாளார் ஜகத் பீ. விஜயவீர தெரிவித்தார்.
இதனால், இந்த நோர்த் மார்ஸ் மீடியா மற்றும் ஹட்டன் மீடியா அகடமி ஆகியவற்றின் ஊடக அமைச்சின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் காண்பிக்க முடியுமா என நாம் கேட்டதற்கு, அதனை அவர்கள் நிராகரித்துடன் அலுவலகத்திற்கு வந்தால் நேரில் பார்வையிட முடியும் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, நோர்த் மார்ஸ் மீடியா நிறுவனத்தினால் இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்ட வானொலி அறிப்பாளர் பயிற்சி நெறியொன்றுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி வழங்கப்பட்ட சான்றிதழில் எந்தவொரு பதிவிலக்கமும் பயன்படுத்தப்படவில்லை.
அத்துடன் குறித்த சான்றிதழில் கையெழுத்திட்டுள்ள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் முகாமையாளர் ஆகிய இருவரினதும் பெயர்களுக்கு அருகில் ஊடகப் பட்டம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள போதிலும், அதனை எந்த நிறுவனத்திலிருந்து பெற்றனர் என்று குறித்த சான்றிதழில் குறிப்பிடப்படவில்லை.
இது போன்ற பல நிறுவனங்கள் அப்பாவி இளைஞர்களை ஊடக கல்வி எனும் போர்வையில் ஏமாற்றி வருகின்றன. இந்த நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை அறியமாலேயே ஏமாற்றப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.
இன்னும் சிலர் இதனை வெளியில் சொல்வதற்கு அஞ்சுகின்றனர். ஊடக அனுபவமற்றவர்கள், ஊடகத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறாதவர்களின் ஊடாக கல்வி அறிவினைப் பெற்ற மாணவர்கள், ஊடகத்துறை இவ்வளவுதான் என நினைத்துக்கொண்டு தங்களுக்கு விரும்பிய வகையில் இணையத்தளங்களையும், இணைய வானொலிகளையும், பேஸ்புக் ரீ.விகளையும், பேஸ்புக் பக்கங்களையும் இவர்கள் நடத்தி வருகின்றனர்.
முறையான ஊடக அறிவைப் பெறாத இவர்கள், எவ்வித ஊடக ஒழுக்கக் கோவையையும் பேணுவதில்லை என்பது முக்கிய விடயமாகும். அதுமாத்திரமல்லாமல், பேஸ்புக் நேரலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களை பிரபல்யப்படுத்தும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று பணம் சம்பாதிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் பக்கங்களை நடத்துகின்றன இப்படியானவர்கள், தங்களுக்கென தாங்களே ஊடக அடையாள அட்டைகளை அச்சிட்டு களச் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் ஊரடங்குச் சட்டம், லொக்டவுன் அமுலிலுள்ள நேரங்களில் தங்களின் சொந்த தேவைகளுக்காக இந்த ஊடக அடையாள அட்டைகளை பயன்படுத்துவது தொடர்பிலும் எமது புலனாய்வின் மூலம் அறிய முடிகின்றது.
ஊடக அமைச்சு
இதேவேளை, “ஊடக கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தக்கூடிய முறைமையொன்று இதுவரை ஊடக அமைச்சில் இல்லை” என அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜயவீர தெரிவித்தார்.
போலி ஊடகக் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அமைச்சிற்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் எந்த இடமுமில்லை என அவர் குறிப்பிட்டார்.
“எவ்வாறாயினும் ஊடகக் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்” என ஊடக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, “ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் கனவில் பயிற்சி பட்டறைகளில் உங்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்” என இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் கடந்த 27 வருடங்களாக பணியாற்றி வரும் மஃபாஹிர் மசூர் மௌலானா, ஊடக தாகம் உள்ள இளைஞர்களிடம் பேஸ்புக் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)