புர்கா தடை: அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா?

புர்கா தடை: அரசு பின்வாங்கியது தற்காலிகமாகவா?

றிப்தி அலி

"இலங்கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் நேற்று நான் கையெழுத்திட்டுள்ளேன். விரைவில் அதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கும்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசகேர கடந்த சனிக்கிழமை (13) களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் குறிப்பிட்டிருந்தார்.

இதே தகவலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலும் அவர் உறுதிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியது.  

இலங்கை அரசியலமைப்பின் 10ஆவது மற்றும் 14ஆவது ஷரத்தின் பிரகாரம் சமயச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. இந்த சரத்துக்களின் பிரகாரம், சகல சமயங்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்பதுடன் நபரொருவரின் விருப்பத்தின் பிரகாரம் சமயத்தை தெரிவு செய்து கொள்வதற்கான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் சமயம் தொடர்பான ஒன்று கூடல், வழிபாடு மற்றும் சமய போதனை என்பனவற்றுக்கான உரிமை ஆகியவற்றினை வழங்கியுள்ளது.

இது போன்று, உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்திலும் சமயச் சுதந்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய அவரவர் தமது சமயங்களை, நம்பிக்கைகளை, சுதந்திரத்தை தனிப்பட்ட ரீதியிலோ மற்றவர்களோடு சேர்ந்து சமூகமாகவோ, இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ மாற்றிக் கொள்ளல், தனது சமயம், போதனைகள் மீதான நம்பிக்கைகள், பின்பற்றல், வழிபடுதல், அவற்றை அனுசரித்துச் செல்லல் என்பனவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிமைகள்; உள்ளன.

இதற்கு மேலதிகமாக ICCPR என்று அழைக்கப்படும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் 18ஆவது ஷரத்திலும் சயமச் சுதந்திரம் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரகடனம் மற்றும் ICCPR உடன்படிக்க ஆகியவற்றில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இவ்வாறான  நிநிலையில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே "முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவிற்கு இலங்கையில் தடைவிதிக்கப்படவுள்ளது. புர்கா அணிவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். சிறு வயதில் தான் பழகிய முஸ்லிம் நண்பர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், புர்கா என்ற ஆடையை அணியவில்லை.

மத அடிப்படைவாதிகளால் இலங்கையில்  அண்மைக் காலத்திலேயே புர்கா அறிமுகப்படுத்தப்பட்டதால், அதற்கு கட்டாயமாக தடை விதிக்கப்படும்" எனவும் அமைச்சர் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டமையானது இலங்கையில் முஸ்லிம்க் மீதான மத அடக்குமுறையினை மற்றுமொரு நகர்வாகவே நோக்கப்படுகின்றது.

பயங்கரவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் காரணமாக 269 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட அவசர கால சட்ட பிரகடணத்தின் ஊடாக புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்த தடை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22ஆம் திகதி வரை தொடர்ந்து. எனினும் ஓகஸ்ட் 22ஆம் திகதிக்கு பின்னர் அவசர காலச் சட்டம் நீடிக்கப்படாமையில் புர்காவிற்கான இந்த தடை செயழிந்தது.  

இவ்வாறான நிலையில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் புர்காவினை தடை செய்யுமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பான  வாக்கெகெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியானமை சர்வதேச சமூகத்தினதும், மனித உரிமைகள் அமைப்பினதும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இந்த செய்திக்கு சர்வதேச ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களும் புர்கா தடைக்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வெளியிட்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா போன்ற உள்ளிட்ட பல அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் இந்த தடைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

அது மாத்திரமல்லாமல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.எம்.சுஹைர் "இந்த தடை ஒரு சட்டவிரேதமானதாகும்" என்றார். முகத்திரை அணிவதை தடுப்பது தொடர்பில் சட்டம் கொண்டுவருவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாகவும் எதிர்ப்பு வெளியிட்டது.

"மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் பாகுபாடு மற்றும் சகிப்புத்தன்மை  காட்டுவது மனித கன்னியத்திற்கு ஒரு அவமதிப்பாகும்" என சமய சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹமட் சஹீத் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானம், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளை மறுப்பது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டிப்பதாக இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அமைச்சரின் கருத்தானது ICCPR  சட்டத்தின் 18ஆவது மற்றும் 27ஆவது சரத்துக்களை மீறுவதாக உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் அமைச்சரின் கருத்தினை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக மறுதலிக்க வேண்டும் என்றும் ஓ.ஐ.சி காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

https://t.co/BjrnFSoesO
The likely ban on Niqab #SriLanka will only serve as injury to the feelings of ordinary Sri Lankan Muslims and Muslims across the globe. At today's economically difficult time due to Pandemic and other image related challenges faced by the country

— Ambassador Saad Khattak (@SaadKhtk) March 15, 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரைவயில் இலங்கைக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான், இந்த தடை தொடர்பில் கவலை வெளியிட்டிருந்ததுடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஸாட் கஹட்டாக் இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

"புர்காவை இலங்கையில் தடை செய்வது சாதாரண இலங்கை முஸ்லிம்கள் மற்றும் பூகோள ரீதியான முஸ்லிம்களின் மனோ நிலையை பாதிக்கும். தற்போது கொவிட்-19 தொற்று காரணமாக பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் தருணத்தில் இந்த விடயம் வெளிப்பட்டுள்ளது.

பாதுகாப்பு என்ற பெயரில், இந்த விடயத்தை முன்னெடுப்பது, சர்வதேச ரீதியாக பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதவிர, சர்வதேச ரீதியாக நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தும் விடயமாக கருத முடியும்" என இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.  

புர்கா தடைக்கு எதிராக கருத்து வெளியிட்ட கொழும்பினை தளமாகக் கொண்டு செயற்படும் இராஜதந்திரி இவர் மாத்திரமேயாவார். இலங்கை விவகாரத்தில் முஸ்லிம் நாடுகள் பகிரங்கமாக கருத்து வெளியிடுவதில்லை.

குறிப்பாக கட்டாய ஜனாஸா எரிப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் பல அழுத்தங்களை பிரயோகித்த பிரபோதும் பகிரங்கமாக எதையும் கூறவில்லை.

இவ்வாறான நிலையிலே பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் பகிரங்க அறிக்கை முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. அது மாத்திரமன்றி,  இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினை கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளிவகார அமைச்சில் சந்திந்து புர்கா தடை தொடர்பான பாகிஸ்தானின் அதிருப்தி வெளிப்படுத்தினார்.

இதனிடையே புர்காவினை தடை செய்யும் அரசாங்கம், ஏன் நிகாபினை தடை செய்யவில்லை என சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வந்தன.

இதனையடுத்து புர்கா மற்றும் நிகாப் ஆகிய இரண்டையும் தடை செய்யவுள்ளதாக மீண்டும் அமைச்சர் சரத் வீரசேகர கடந்த திங்கட்கிழமை (15) தெரிவித்தார். எனினும்,  அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட புர்கா தடைக்கான அமைச்சரவை பத்திரம் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இது தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த அமைச்சரவை பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல, "இந்த புர்கா தடையினை ஒருபோதும் அவசரப்பட்டு மேற்கொள்ள முடியாது முடியாது. இது தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட பின்னரே தீர்மானிக்கலாம்.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே புர்கா தடை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் எந்த வகையிலும் ஜெனிவா அமர்வுகளை தாக்கம் செலுத்தாது" என அவர் பதலளித்தார்.

அத்துடன் "இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடனான சுமூக உறவு பேணப்படுகிறது. அதில் எவ்வித சிக்கலும் காணப்படவில்லை. இலங்கையில் மாத்திரம் இந்த தடைக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உலக நாடுகள் பலவும் இந்த புர்காவை தடை செய்துள்ளன" என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.  

இதேவேளை, புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வதற்கான தீர்மானம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை (16) அறிவித்தது.

"இது ஒரு முன்மொழிவு மாத்திரமேயாகும் என்றும், இது கலந்துரையாடல்களின் கீழ் உள்ளதாகது" என வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

"ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கு அமைவாக தேசியப் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்தும் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை உருவாக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனுமான ஒரு பரந்த உரையாடலை அரசாங்கம் ஆரம்பிப்பதுடன், தேவையான ஆலோசனைகள் நடைபெறுவதற்காகவும், ஒருமித்த கருத்தை எட்டுவதற்காகவும் போதுமான நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இதேவேளை, "பாகிஸ்தான் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. இலங்கை அரசாங்கத்தின் தேவைகேற்ற விதத்திலேயே தாம் செயற்படுகின்றேம்" என அமைச்சர் சரத் வீரசேகர கூறினார்.

புர்கா தடை தொடர்பான விடயம் விரைவில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் புர்கா தடை தொடர்பான தீர்மானத்தினை கைவிட்டுள்ளதாக அரசாங்கம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை. இதனால், குறித்த விடயம் ஜெனீவா பிரேரணை முடிவடையும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

மார்ச் மாத இறுதியில் ஜெனிவா அமர்வுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதன் பிற்பாடு அரசாங்கம் இந்த தடையை அவசரப்படுத்துவதற்கான சாத்தியப்படுகளை மறுப்பதிற்கில்லை.

உள்நாட்டில் இதற்கு எதிராக கருத்து தெரிவிக்கவோ, போராடவோ பலரும் தயங்குகின்ற நிலையில், சர்வதேச அழுத்தங்கள் மாத்திரமே இலங்கை முஸ்லிம்களுக்கு கைகொடுக்கும் என்பது நிதர்சனம்.