ஹஜ் ஏற்பாடுகளில் இம்முறையும் குளறுபடிகள்; அறிக்கை கோரினார் சவூதிக்கான இலங்கை தூதுவர்
றிப்தி அலி
"முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிசிப்பது புனித ஹஜ் கடமைகளில் ஒன்றாகும். எனினும், எமது ஹஜ் முகவர் அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் ஏற்பாடு செய்யாமையினால் குறித்த கடமையினை தவறவிட்டேன்" என இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் பங்கேற்ற இலங்கை ஹாஜியொருவர் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
இதற்கான முழுப் பொறுப்பினையும் எமது ஹஜ் முகவரே பொறுப்பேற்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் எமது ஹஜ் முகவரிடம் வினவிய போது, இலங்கை ஹஜ் குழுவே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்ற பதிலே கிடைக்கப் பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஹஜ் கடமையினை நிறைவேற்றச் செல்லும் ஹாஜிகள், துல்ஹஜ் மாதத்தின் 9ஆம் நாள் அரபாவில் ஒன்றுகூடி லுஹர் மற்றும் அஸர் ஆகிய தொழுகைகளை சேர்த்து தொழுதுவிட்டு அரபா பேருரையில் பங்கேற்பர்.
அன்று சூரியன் மறைந்தவுடன் ஹாஜிகள் அனைவரும் அரபாவிலிருந்து முஸ்தலிபா நோக்கிச் செல்வர். இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை (27) இரவு அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்லத் தயாராக இருந்த சுமார் 150 இலங்கை ஹாஜிகளுக்கான பஸ் ஏற்பாடுகள் உரிய நேரத்திற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதனால், அரபாவில் பஸ்ஸின்றி தவித்த இலங்கை ஹாஜிகள் மத்தியில் பதற்றமான சூழலொன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஹாஜிகள், இலங்கை ஹஜ் குழுவினை தொடர்பு தங்களின் ஆத்திரத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து நள்ளிரவு தாண்டி 2 மணிக்கே இரண்டு பஸ்கள் இந்த ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் பயணித்த இலங்கை ஹாஜிகள், சுபஹ் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்ட பின்னரே முஸ்தலிபாவினை சென்றடைந்துள்ளனர். இதனால் குறித்த ஹாஜிகள் முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிசிப்பதை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல இலட்சம் ரூபா செலவளித்து ஹஜ்ஜிற்காகச் சென்ற இலங்கை ஹாஜிகள், இது போன்று பல்வேறு விதமான சொல்லொன்னா துயரங்களை இம்முறை அனுபவித்துள்ளனர். இதில் ஒருவருரின் உள்ளக் குமுறலே இதுவாகும்.
இலங்கையிலிருந்து 3,500 பேர் இம்முறை ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிற்கு சென்றிருந்தனர். இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் பேஸா மூலம் சுமார் 130 பேரும் சென்றிருந்தனர்.
அத்துடன் மன்னரின் விருந்தினராக ஹஜ் கடமையினை நிறைவேற்ற இலங்கையிருந்து 10 பேரும் சென்றிருந்தனர். இவர்களின் நலன்களை கவனிப்பதற்காக இலங்கை ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் நான்கு பேரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசல் உட்பட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நான்கு பேரும் மக்கா சென்று புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றினர்.
ஹாஜிகளின் நலன்களை கவனிக்கச் சென்ற மேற்படி எட்டுப் பேருக்காக ஹஜ் நியத்திலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பணம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், இவர்களினால் இலங்கை ஹாஜிகளின் நலன்கள் ஒழுங்கான முறையில் கவனிக்கப்பட்டதா என்பது இன்று வரை கேள்விக்குறியாகும்.
இதேவேளை, புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்ற அனைவரும் சவூதி அரேபிய நேரப்படி கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை மாலை மினாவில் ஒன்றுகூடினர். இதன்போது இலங்கையினைச் சேர்ந்த சுமார் 200 ஹாஜிகள் தங்குவதற்கு கூடாரமின்றி சிரமப்பட்டுள்ளனர்.
எனினும், அரபாவிற்கு செல்ல வேண்டும் என்ற முக்கியத்துவத்தில் அவர்கள் அங்கிருந்து அரபா நோக்கி பயணித்துவிட்டனர். அரபா சென்ற இதே இலங்கை ஹாஜிகளுக்கு அங்கும் கூடார வசதிகள் ஏற்படுத்தப்பட்டிக்கவில்லை.
இதனால், பெண்கள் உட்பட பெருமளவிலான இலங்கை ஹாஜிகள் அரபாவில் தங்குவதற்கு கூடாரமின்றி கடும் வெயிலுக்கு மத்தியில் சிரமப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ஒரு நாள் மாத்திரமே அரபாவில் தரிசிப்பதனால் இலங்கை ஹாஜிகளின் ஏனைய கூடாரங்களில் இவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், குறித்த கூடாரங்களில் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், அடுத்த மூன்று நாட்கள் தங்குவதற்காக மீண்டும் மினா சென்ற இலங்கை ஹாஜிகளில் சுமார் 200 பேரே தங்குமிட வசதியின்றி அவஸ்தைப்பட்டுள்ளனர்.
இதனால், மினாவில் இலங்கை ஹாஜிகள் தங்கிய பகுதியில் பாரிய பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கைக்கான சவூதி தூதுவர் பீ.எம். அம்சா உடனடியாக ஸ்தளத்திற்கு விஜயம் செய்து இலங்கை ஹாஜிகளின் பிரச்சினையினை தீர்த்துவைத்துள்ளார்.
றியாதிலுள்ள இலங்கை தூதுவர் தலையீடு செய்யும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்றால் முஸ்லிம் சமூகத்தின் சொத்தான ஹஜ் நிதியத்திலிருந்து நிதியினைப் பெற்றுக்கொண்டு ஹாஜிகளின் நலன்களை கவனிக்கச் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள் என்பது பாரிய கேள்விக்குரியாகவுள்ளது.
இந்த வருடம் ஹாஜிகளின் மினா மற்றும் அரபா போன்ற இடங்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளை மேற்கொள்வதற்காக சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 13 நிறுவனங்களில் ஒன்றான Al Baith Guests Companyயினை இலங்கை ஹஜ் குழு தெரிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மினாவில் தங்கிய இலங்கை ஹாஜிகளுக்கு காலவதியான உணவினை வழங்கிய சவூதி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் 2,000 சவூதி றியால் தண்டப் பணம் விதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இப்பிரச்சினைகள் தொடர்பில் ஹஜ் முகவர்களிடம் இலங்கை ஹாஜிகள் கேட்ட சமயத்தில் ஹஜ் குழுவின் மீதே முகவர்கள் விரல் நீட்டியுள்ளனர்.
எனினும், சவூதி அதிகாரிகள் மினாவில் வந்து ஹாஜிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய சமயத்தில் எந்தவொரு ஹஜ் முகவர்களும் தங்கள் குழுவிற்கு ஏற்பட்ட எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் வாய்த் திறக்கவில்லை என ஹாஜிகள் தெரிவித்தனர்.
"அடுத்த வருடம் ஹஜ் கோட்டா கிடைக்குமா? என்ற அச்சத்திலேயே சவூதி அதிகாரிகளிடம் எதுவும் தெரிவிக்காமல் ஹஜ் முகவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்திருக்காலம்" என யாத்திரிகர் ஒருவர் தெரிவித்தார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுகளை பெறுவதற்காக தற்போது சவூதி அரேபியாவிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைசலை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை.
சுற்றுல்லா விசாவிலும், Free Movement Pass எனும் பேசா விஸாவில் ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்றவர்களை இலங்கை ஹஜ் முகவர்கள் உள்ளவாங்கியமையினாலேயே இடப் பற்றாகுறை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இக்குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்த ஜித்தாவிலுள்ள இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் பலாஹ் அல் ஹிப்ஸி மௌலானா, "சவூதி அரேபியாவின் இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுல்லா விசாவில் வந்த எவரும் ஹஜ் செய்ய இந்த வருடம் அனுமதிக்கப்படவில்லை" என்றார்.
இலங்கையினை சேர்ந்த 107 ஹாஜிகளுக்கு மாத்திரமே மினாவில் கூடாரமின்றி சிரமப்பட்டனர். இப்பிரச்சினை இலங்கை ஹாஜிகளுக்கு மாத்திரமான ஒன்றல்ல. இந்தியா, நைஜீரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளின் ஹாஜிகளும் மினாவில் இது போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கியதாக ஜித்தாவிலுள்ள இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் குறிப்பிட்டார்.
"எவ்வாறாயினும், இந்த விடயம் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கை தூதுவரின் பங்களிப்புடன் எமது நாட்டு ஹாஜிகளுக்கு சேவை வழங்கிய Al Baith Companyயின் தலைவரை தொடர்புகொண்டு பேச்சு நடத்தியதன் காரணமாக 107 ஹாஜிகளுக்கான படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன" எனவும் அவர் கூறினார்.
அரபா மற்றும் மினாவில் இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிவிவகார அமைச்சு மற்றும் புத்தசாசன சமய விவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகள் எற்படாதிருக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளை ஜித்தாவிலுள்ள இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம் முன்னெடுத்துள்ளதாக பலாஹ் மௌலானா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை ஹாஜிகள் எதிர்நோக்கிய பிரச்சினை தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு சவூதிக்கான இலங்கைத் தூதுவர் பீ.எம். அம்சா அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார்.எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சினைகளை ஏற்பாடுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், "தகுதியற்றவர்கள் ஹஜ் கமிட்டியில் நியமிக்கப்படுள்ளனர் அல்லது ஹஜ் ஏற்பாடுகள் விடயத்தில் ஹஜ் கமிட்டியில் ஒரு ஊழல் இடம் பெற்றுள்ளது. மினா, அரபா கூடாரங்களில் பாரிய இட நெருக்கடி, தரக் குறைவான உணவு, முறையற்ற போக்குவரத்து ஏற்பாடுகள் போன்ற காரணிகளால் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் அவதி" என இலங்கையிலிருந்து ஹஜ் கடமையினை நிறைவேற்றச் சென்ற அனுராதபுரத்தினைச் சேர்ந்த சஹ்ரான் கரீம் தனது பேஸ்புகில் கடந்த 22ஆம் சனிக்கிழமை பேஸ்புகில் பதிவொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இது போன்ற பல்வேறு வகையான சொல்லொண்ணா துயரங்களை புனித ஹஜ் கடமையின் போது அனுபவித்த ஹாஜிகள், தங்களின் முறைப்பாடுகளை ஜனாதிபதி செயலகம், புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டும்.
இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சினால் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதுவரை காலமும் ஹாஜிகளின் முறைப்பாடுகளை விசாரணை செய்து வந்த ஹஜ் குழு மீது இந்த வருடம் ஹாஜிகள் நம்பிக்கை இழந்துள்ளமையினாலேயே சுயாதீன குழுவின் அவசியம் உணரப்பட்டுள்ளது.
புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக செல்லும் இலங்கை ஹாஜிகள் ஒவ்வொரு வருடமும் 'வியாபார மாபியா' காரணமாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு முடிவு கட்ட வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். இதற்காக இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்ட குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாவுள்ளது.
வெறுமனே விமர்சிப்பதுடன் நிற்காது பாதிக்கப்பட்ட இலங்கை ஹாஜிகள், சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு தமது முறைப்பாடுகளை எழுத்து மூலம் வழங்க முன்வர வேண்டும். அதன் மூலமே இந்த குளறுபடிகளை எதிர்காலத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியும்.
Comments (0)
Facebook Comments (0)