முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டி ஜனாதிபதி தேர்தல்
றிப்தி அலி
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவரே இலங்கையின் இறுதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என அவருடைய கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மும்முனைப் போட்டி காணப்பட்ட முதலாவது தேர்தல் இதுவாகும். ஜனாதிபதியாக பிரகடனப்படுத்துவதற்கான 50 சதவீத வாக்கினை இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் பெறவில்லை.
இதனால், ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதற் தடவையாக விருப்பு வாக்குளை எண்ணி புதிய ஜனாதிபதி தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறான பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த தேர்தலின் ஊடாக சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்தலின் ஊடாக நல்லதொரு செய்தி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு ஆதரவளித்தனர்.
ஆனால் முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றார். இதற்கான காரணம் சிறுபான்மையினரின் அதிக ஆதரவினைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியன சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்தமையாகும்.
அது போன்று சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகளை அவர்கள் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்க முடியும். எனினும், அத்தொகுதிகளில் அவர்களது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாக்குள் முஸ்லிம் செறிந்து வாழும் பகுதிய பாரியளவில் அதிகரித்துள்ளன. உதாரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனைத் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அனுர குமார திசாநாயக்க 709 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தார்.
இந்தத் தேர்தலில் அவர் 10,937 வாக்குகளை கல்முனைத் தொகுதியில் பெற்றுள்ளார். பாரியளவில் அவருடைய வாக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது போன்றே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற சம்மாந்துறை, பொத்துவில், கல்குடா, மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் மற்றும் மன்னார் போன்ற தேர்தல் தொகுதிகளிலும் அனுர குமார திசாநாயக்காவின் வாக்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்றன பேருவளை, காலி, கொழும்பு மத்தி, ஹாரிஸ்பத்துவ, புத்தளம் போன்ற தேர்தல் தொகுதிகளிலும் அனுர குமார திசாநாயக்கவின் வாக்குகள் வெகுவாக அதிகரித்துள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் முஸ்லிம் மக்கள் இல்லை என்ற செய்தியினை இந்த வாக்களிப்பின் ஊடாக தெரிய வருகின்றனர். இறுதியாக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து நாட்டின் ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினை முஸ்லிம்கள் தெரிவுசெய்தனர்.
இதற்கு பிரதான காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் தீர்க்கமான முடிவுகளாகும். 1989, 1994 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற்றதே வரலாறாகும்.
அதன் பின்னர் நடைபெற்ற அனைத்துத் ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் சமூகமும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஆதரித்த வேட்பாளர் தோற்பதே வழமையாகும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் விசித்திரமானதாகும்.
இவ்வாறான நிலையில் இந்த முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திசாநாயக்கவிற்கு முக்கியமான முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் ஆதரவளிக்கவில்லை.
அத்துடன் அவர்களும் கூடு விட்டு கூடு பாய்வதை வழமையாகக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை இணைக்கவில்லை. மாறாக இந்தத் தேர்தலில் யாரையும் ஆதரிக்காமல் மௌனமாக இருக்குமாறு தேசிய மக்கள் சக்தி வேண்டியிருந்தது.
இதனை முஸ்லிம் கட்சியொன்றி தலைவரும் குறிப்பிட்டிருந்தார். இவற்றை மீறி ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவளித்தனர்.
இதன்போது, பல பொய்களையும் அரசியல் மேடைகளில் கூறி வந்தனர். குறிப்பாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினையும் அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தியினை தாக்கி பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொய்களை நம்பத் தயாரில்லை என்ற அடிப்படையில் அவர்களது தீர்மானத்து எதிராக அனுர குமார திசாநாயக்கவிற்கு முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர்.
இதன் ஊடாக ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்களும் பாரியளவில் பங்களிப்பு செலுத்தியுள்ளனர் என்ற விடயத்தினை எவராலும் மறுக்க முடியாது. இன ஐக்கியத்துடனான எதிர்காலத்திற்கு இதுவொரு சிறந்த சமிஞ்சையாகும்.
இவ்வாறான நிலையிலேயே எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிறந்த பாடம் புகட்டியது போது பாராளுமன்றத் தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டியது முஸ்லிம் மக்களின் தலையாயக் கடமையாகும்.
இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தில் காலாகாலமாக இடம்பெற்று வருகின்ற ஏமாற்று அரசியலுக்கு நிச்சயமாக சாவுமணி அடிக்க முடியும். முஸ்லிம் அரசியல்வாதிகள் சுகபோகங்களை அனுபவித்து வந்தார்களே ஒழிய மாறாக சமூக தொடர்பில் எந்தவித குரலும் கொடுக்கவில்லை.
அதேவேளை, தங்கள் பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் முஸ்லிம் பிரதேசங்கள் இன்று வரை எந்தவித அபிவிருத்தியுமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றது.
இதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸா எரிப்பிற்கு காரணமாக இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் தோற்றகடிக்க வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் தலையாயக் கடமையாகும். அத்துடன் சமூகத்திற்காக குரல்கொடுக்கக்கூடிய சிறந்த தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும்.
Comments (0)
Facebook Comments (0)