இலங்கை ஊடகவியலாளர்களுக்காக இந்தியாவில் நடைபெற்ற ஆளுமைவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நிறைவு

இலங்கை ஊடகவியலாளர்களுக்காக இந்தியாவில் நடைபெற்ற ஆளுமைவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நிறைவு

இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சக அனுசரணையுடன் தெலுங்கானாவில் உள்ள சட்ட மற்றும் பொது நிர்வாகத் துறைகளுக்கான Dr. MCR மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் ஊடக முகாமைத்துவம் தொடர்பாக ITEC ஒழுங்கமைத்த இரு வாரகால பயிற்சியினை இலங்கையைச் சேர்ந்த 29 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த அதிகாரிகள் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.

இப்பயிற்சி நிறைவில் நாடுதிரும்பியிருந்த இக்குழுவினரை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் கலந்துரையாடும் அமர்வுக்காக சந்தித்திருந்தார்.

அச்சு, இலத்திரனியல், டிஜிட்டல், மற்றும் சமூக ஊடகத் தளங்கள் போன்ற சகல பரிமாணங்களிலும் காணப்படும் சமகால ஊடக செயன்முறைகள் தொடர்பான மேம்பட்ட திறன்கள் மற்றும் உள்ளீடுகள் குறித்து வலுவூட்டும் இலக்குடன் இந்த நிகழ்ச்சித்திட்டமானது ஜூன் 24ஆம் திகதி முதல் ஜூலை 07 ஆம் திகதி வரை நடத்தப்பட்டிருந்தது.

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஊடக செல்நெறி மற்றும் தவறான செய்தி அறிக்கைகளுக்கு முகங்கொடுப்பதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பான கற்கைகளை உள்வாங்கியதாக இந்த பயிற்சி காணப்பட்டிருந்தது.

நல்லாட்சியில் சமூக ஊடகங்களின் வகிபாகம் குறித்து அறிந்துகொண்ட இக்குழுவினர், தரவுகளை மையப்படுத்திய ஊடக அறிக்கையிடல் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பிரிவுகளின் டிஜிட்டல் நிலைமாற்றம் தொடர்பான பயிற்சிகளையும் பெற்றிருந்தனர். அத்துடன் பிராந்தியத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கலாசார மற்றும் மரபுரீதியான ஸ்தலங்களுட்பட பல இடங்களுக்கு மேற்கொண்ட கள விஜயங்கள் மூலமாகவும் இந்த பயிற்சிநெறியானது மேலும் வலுவடைந்தது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கீழான இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் (ITEC)  கீழ்  இந்த ஆளுமை விருத்தி பயிற்சி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 1964 இல் நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த ITEC கணக்கீடு, வங்கியியல், எண்பார்வை மற்றும் நிதி உள்ளிட்ட துறைகள் முதல் சைபர் தொழில்நுட்பம்; காலநிலை மாற்றம் முதல் முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவம்; மனித வள அபிவிருத்தி முதல் திட்டமிடல் முதல் உட்கட்டமைப்புசார் ஏற்பாடுகள் மற்றும் முகாமைத்துவம்; பல்லூடகம் மற்றும் ஊடகவியல் முதல் நகர திட்டமிடல்; சமுத்திர மற்றும் விமான பொறியியல் முதல் பெண்கள் வலுவூட்டல் மற்றும் ஏனைய பல துறைகள் வரையிலான பரந்த விடயங்களில் 25க்கும் அதிகமான கற்கைநெறிகளை வழங்குகின்றது.

ITEC பங்காளி நாடுகளில் இலங்கை முக்கியமானதாகக் காணப்படும் அதேவேளை ஒவ்வொரு வருடமும் இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய பிரஜைகளுக்காக அவர்களின் திறன் மேம்பாட்டை இலக்காகக் கொண்டு  முழு அளவிலான நிதி அனுசரணையுடனான 400க்கும் அதிகமான ஆசனங்கள்  குறுகிய கால பயிற்சிக்காக ஒதுக்கப்படுகின்றன.