கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கும் கொவிட் - 19 தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை

கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கும் கொவிட் - 19 தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை

கொவிட் - 19 தடுப்பூசிகளை கல்முனை சுகாதார பிராந்தியத்திற்கும் உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியேற்றல் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மேலும் தெரிவிக்கையில்,

"கொவிட் - 19 நோயினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியேற்றலே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். இதற்கமைய, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தடுப்பூசியேற்றல் நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் - 19 தடுப்பூசியேற்றல் நடவடிக்கை இன்று (08) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுகாதார அமைச்சினால் 75,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகள் தலா 25,000 என்ற அடிப்படையில் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய  மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இதில் அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 25,000 தடுப்பூசிகளும் அம்பாறை சுகாதார பிராந்தியத்திற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.  இதனால் கல்முனை சுகாதார பிராந்தியம் முற்றாக  புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிக்கின்றது.

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண வீதமும் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் மூன்று கொவிட் - 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த பிராந்திய மக்களுக்கும் கொவிட் - 19 தடுப்பூசிகள் அத்தியவசியமாக காணப்படுகின்றன.

இதனால், கல்முனை பிராந்திய மக்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுகின்றேன்.

இது தொடர்பில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசத்தினைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்து கொவிட் தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, கொவிட் தடுப்பூசிகள் தொடர்பில் பிழையான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பபடுகின்றன. இவை போலியான தகவல் என்பது தொடர்பில் சுகாதார துறையினர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இதன் ஊடாக கொவிட் தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படும் தேவையற்ற அச்சங்களை நீக்கி தடுப்பூசியேற்றல் செயற்பாட்டினை துரிதமாக்க முடியும். இதன் ஊடாக எமது பிராந்தியத்தில் இருந்து இந்த நோயினை முற்றாக ஒழிக்க முடியும்" என்றார்.