பிரதமரை அவமானப்படுத்த வேண்டாம்: ஹக்கீம்

பிரதமரை அவமானப்படுத்த வேண்டாம்: ஹக்கீம்

முதிர்ச்சிமிக்க அரசியல்வாதியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை இல்லாமலாக்கி அவரை அவமானப்படுத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் இன்று (11) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

"தொழில்நுட்பக் குழுவே கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்போரை நல்லடக்கம் செய்வதைப் பற்றித்  தீர்மானிக்கும்" என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதற்கு பதலளித்து உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நல்லடக்கம் செய்வதை அனுமதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புணர்ச்சியுடன் பாராளுமன்றத்தில் கூறியிருக்கத்தக்கதாக, அதனைத் தடுக்கும் சுகாதாரத் தரப்பு "நிபுணர்கள்" எனப்படும் அதிகாரிகள் யார்?

இவ்வாறாக நாட்டில் தேவையில்லாத இனவாத பதற்ற நிலையை ஏற்படுத்துபவர்கள் யார்? அவர்களின் இத்தகைய நடவடிக்கைகளினால் நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்றனர். அரசாங்கம் இந்தப் பிரச்சினையை இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கக்கூடாது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதாக திட்டவட்டமானதொரு கூற்றை நேற்று (10)  இங்கு முன்வைத்தார். இதனால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இல்லாமலேயே போய் விடுவதை விடவும், தாமதித்தாவது காரியமாவது நல்லது. முதிர்ச்சிமிக்க அரசியல்வாதியொருவரால் முக்கியமான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.  இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் பற்றியும், நல்லிணக்கம் பற்றியும் அவருக்கு  விளங்கியிருக்கின்றது.

ஆனால், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இங்கு வேறொன்றைக் கூறுகின்றார். அவர் அந்த விவகாரம் மீண்டும் தொழில்நுட்பக் குழு எனப்படும் குழுவிடத்தில் செல்ல வேண்டும் என்கின்றார். அக்குழுவினர் வெறுமனே தங்களை தாங்களே விஞ்ஞானிகள் எனச் சொல்லிக் கொண்டு போலியாகப் பாசாங்கு செய்கின்றனர்.

அவர்கள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. அமைச்சர் அலி சப்ரிக்கும் இது தெரியும். இந்த சபையில் இருபுறங்களிலும் இருக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதற்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

இறுதியில் பிரதமர் இந்த சபையில் ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். அதைவிட வேறேன்ன வேண்டியிருக்கின்றது? நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக அவர் மிகவும் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

இதைவிட அரசாங்கத்தின் சார்பில் வேறு யார் சொல்ல வேண்டியிருக்கிறது? ஆகையால், சுகாதார அமைச்சில் இதனைத் தடுக்கும் நிபுணர்கள் எனப்படும் அதிகாரிகள் யார்? உரிய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

நாட்டில் தேவையில்லாத இனவாத பதற்ற நிலையை ஏற்படுத்துவது யார்? அவர்கள் இத்தகைய நடத்தையினால் இந்த நாட்டையே அதல பாதாளத்திற்குள் தள்ளி விடுகின்றனர்.

இதனை அரசாங்கம் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இந்தப் பிரச்சினை ஜெனீவாவுக்கு சென்றுவிட்டது. இந்த விடயம் அந்த நிலைக்கு உள்ளாவதை யாரும் விரும்புவதில்லை. தயவு செய்த பிரதமரை அவமானப்படுத்திவிடாதீர்கள்" என்றார்.