உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தினால் விடுவிப்பு

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தினால் விடுவிப்பு

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) புதன்கிழமை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை  சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீறல் மனு அண்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீதான சகல குற்றச்சாட்டுக்களையும் வாபஸ் பெற்றுக் கொள்ள தாம் ஏற்கனவே பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது.

அதனையடுத்தே இன்று அவர் நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுவிக்கப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த சாட்சியங்கள் அடிப்படையில் அவருக்கு எதிராக விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் படி முன்மொழிந்திருந்தது.

அதனைத் தெடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு நீண்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். எவ்வித காரணமும் இன்றி தான் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இடைக்காலத் தீர்வாக அவர் 2022 ஜனவரியில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலயில் இன்று சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.