அமெரிக்காவும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியை விஸ்தரிப்பு

அமெரிக்காவும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து பெண் தொழில்முனைவோருக்கான பயிற்சியை விஸ்தரிப்பு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் கூட்டிணைந்து அமெரிக்க அரசாங்கத்தினால் உதவியளிக்கப்பட்ட புத்தாக்க தொழில்முனைவு பயிற்சித் திட்டமொன்றில் பங்குபற்றியதன் மூலம் மாத்தறையைச் சேர்ந்த இருபது பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை இன்று கொண்டாடினர்.

அமெரிக்க மற்றும் இலங்கை அரசாங்கங்களின் பிரதிநிதிகள் இந்த பெண்களை வரவேற்றதுடன், இலங்கையின் ஆறு மாவட்டங்களில் மேலும் 7,500 பங்கேற்பாளர்களுக்கு இந்த திட்டத்தை விஸ்தரிப்பதாகவும் அறிவித்தனர்.  

"வெற்றிக்கான தமது சொந்த பாதைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் உத்வேகமளிக்கும் இலங்கை பெண்களை சர்வதேச மகளிர் தினத்திலும் அதேபோல், ஒவ்வொரு நாளும் நாம் கொண்டாடுகிறோம்" என்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பணிப்பாளரான ரீட் ஏய்ஸ்லிமன் தெரிவித்தார்.

"ஆயிரங்கணக்கான இலங்கை பெண்கள் நுண் தொழில்முயற்சிகளை நிறுவுகிறார்கள், தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றனர், மற்றும் பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்கின்றனர் என்ற வகையில் அவர்களுக்கு உதவுவதில் அமெரிக்க மக்கள் பெருமிதமடைகின்றனர்" என்றும் அவர் குறிப்பிட்டார். 

அமெரிக்க அரசாங்கம் அனுசரணையிலான இந்த செயற்பாடானது நிதி ரீதியாக சுயதீனமான நுண்தொழில்முனைவோராக வருவதற்கு கிராமிய பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவுவதற்கு அவர்கள் மத்தியில் தொழில்முனைவாக்க திறன்களை கட்டியெழுப்புகிறது.

சமுர்த்தி திணைக்களத்துடனான முன்னோடித் திட்டமொன்றின் ஊடாக மாத்தறையில் 1,250 பேருக்கு USAID பயிற்சி வழங்கியதுடன், அது 410 வணிகங்கள் ஸ்தாபிப்புக்கு ஏதுவாக அமைந்திருந்தது.

அவற்றில் 343 பெண்களுக்கு சொந்தமானவையாகும். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமானது மாத்தறையில் மேலும் 1,500 பெண்களுக்கு பயிற்சிகளை வழங்கும் என்பதுடன், மேலதிகமாக ஐந்து மாவட்டங்களில் 6,000 பயிலுநர்களுக்கும் இது ஆரம்பிக்கப்படும்.

YouLead என்றழைக்கப்படும் திட்டமானது, தொழில்முனைவு அபிலாஷைகளைக் கொண்ட யாரும் www.youlead.lk வழியாக அணுகக்கூடிய இலவச இணையவழி தொழில்முனைவு பயிற்சித் தொகுதிகளையும் ஆரம்பிக்கும்.         
 
"கிராமிய சமூகங்களிலுள்ள பெண் தொழில்முனைவோரின் ஆற்றலை கட்டியெழுப்புவதற்கு USAID இன் YouLead திட்டத்துடன் எமது பங்காண்மையை தொடர்வதில் நாம் மகிழ்சச்pயடைகிறோம்' என்று சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

"இந்த பங்காண்மை மிகவும் செயல் விளைவுடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், பயிற்சி செயலமர்வுகள் ஊடாக அடுத்த இரண்டு வருடங்களில் நாடு முழுவதும் இது பெண்களை வலுவூட்டும். எமது பொருளாதாரத்தில் அது பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.    

இன்றைய முதலாவது நிகழ்வில், வெற்றிக்கான தமது பயணம் பற்றி பேசிய முதன்மை பேச்சாளரான Ranbath Organic Food and Catering Services (Pvt) Ltd. இன் தலைவர் ஜானகி கத்திரியாராச்சி உள்ளிட்ட வெற்றிகரமான பெண் தொழில்முனைவோருடன் பங்கேற்பாளர்கள் எண்ணங்களை பரிமாறிக் கொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பீ. திலகசிறி மற்றும் பிரதேச செயலாளர் தீபிகா குணரட்ன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், உள்ளூர் தொழில்முனைவோர் பற்றிய நான்கு வீடியோ விடய ஆய்வுகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் பன்னிரண்டு விடய ஆய்வுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். 

USAID அதனது YouLead திட்டத்தின் ஊடாக தொழில் கல்வியை மேம்படுத்தவும் மிகவும் திறன்மிக்க தொழிலாளர்களை கட்டியெழுப்பவும் மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கை தொழில்முறைகளுக்கு இளைஞர்களை இணைக்கவும் செயற்படுகிறது.

இது தற்சார்பு நிலைக்கு உதவுவதற்கும் ஸ்திரத்தன்மையை பலப்படுத்துவதற்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நீணடகால பங்காண்மையின் அங்கமொன்றாகும்.

1956ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 350 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிகமான தொகையை கொண்ட இலங்கையிலான USAID இன் திட்டமானது, ஆரோக்கியமான,     கல்வியறிவுடைய, மற்றும் தொழில் வாய்ப்புடைய சனத்தொகையொன்றை ஊக்குவிக்கிறது.